மர்மத் தொடர் 6
‘அப்பா என்னை சி.ஐ.டி என்று பாராட்டியது எனக்குப் பெரிய உற்சாகத்தை அளித்தது. இளம் மாணவப்பருவம் என்பது மனித வாழ்வில் சக்தி மிகுந்த பருவம். இது அமைவதைப் பொறுத்தே பெரும்பாலும் எல்லோரது ரசனையும் ஏனைய அடிப்படைத் திறமைகளும் ஒரு முடிவான வடிவம் கொள்ளும். இந்தக் காலகட்டத்தில் உண்ணும் உணவே சாகும்வரை பிடித்த மற்றும் பிடிக்காத உணவு வகைகளைத் தீர்மானிக்கும்.

அதேபோல்தான் இக்காலகட்டத்தில் கேட்கும் இசை, காணும் காட்சி, ஏற்படும் அனுபவங்கள் என்று ஒவ்வொன்றும் ஒரு மனிதனுக்கான அடிப்படையாகத் திகழும். இது ஓர் அளவுகோலாக மாறி, இந்த அளவுகோலால்தான் நாம் வாழும் நாளில் எதையும் அளந்து பார்ப்போம். இம்மட்டில் ஒவ்வொருவருக்கும் அவரவர் சூழலுக்கேற்ப அளவுகோல்கள் அமையும்.
அளவுகோல் என்றால் அது அனைவருக்கும் பொதுவாய்த்தான் இருக்க வேண்டும். ஒரு மீட்டருக்கு நூறு சென்டிமீட்டர் என்றால் உலகம் முழுக்க இதுதான் அளவு. எங்கும் மாறாது; மாறவும் கூடாது. ஆனால் ஒரு மனிதன் தனக்குள் உருவாக்கியிருக்கும் அளவுகோல் மட்டும் ஒன்றுபோல் இருக்கவே இருக்காது.
இதை நான் இவ்வளவு விரிவாகக் கூறிட காரணம் உண்டு. இளம் மாணவப் பிராயத்தில் எனக்கேற்பட்ட அனுபவங்கள், எனக்கு வாய்த்த சூழல்கள், என் குடும்பத்தின் நிலை என்று எல்லாமே மிக வேறுபட்டவை. பல ஆயிரம் பேரில் ஒருவருக்கே என் போன்ற நிலை ஏற்பட முடியும். என் அப்பா அபூர்வமான பொருட்களைச் சேமிப்பதில் ஆர்வமுடையவராக இருந்தார். ஒரு சிவப்பு வண்ண மரத்தால் ஆன பேனாவைத்தான் அவர் பயன்படுத்துவார். அதைக் கொண்டு டைரி எழுதுவார்.
இதைக் கவனித்த எனக்குள்ளும் டைரி எழுதும் பழக்கம் தொற்றிக்கொண்டது. அப்பாவின் டைரியை ஒருநாள் எடுத்து படித்துப் பார்த்தேன். பல வரிகள் எனக்குப் புரியவேயில்லை. சில சொற்களும் எனக்கு அதில் புதிதாயிருந்தன!’- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...கணபதி சுப்ரமணியன் அந்த வள்ளுவனை மேலும் கீழுமாகப் பார்த்தார். அப்படியே பெட்டியையும் பார்க்க, வள்ளுவன் அந்தப் பெட்டியைத் திறந்து காட்டத் தொடங்கினார்.
உள்ளே ஏட்டுக் கட்டுகளுடன் சமகாலத்து டைரி ஒன்றும் இருந்தது. டைரியின் முகப்பு நீல நிறத்தில் இருக்க, அதன் மேல் 1990ம் வருட தடயம். கூடவே திசை காட்டும் கருவி ஒன்று. அதன்பின் காம்பஸ் பாக்ஸ் போல ஒரு பெட்டி. அதனுள் தூய ஸ்படிகக் கட்டிகள் பல சைஸ்களில்... கூடவே பாசிப்பருப்பளவு பருமனில் சங்கிலியோடு கட்டப்பட்ட கூரிய முனை கொண்ட ஏதோ ஒன்று இருந்தது. அப்புறமாய் எண்ணி பன்னிரண்டு சோழிகள் (அது என்ன கணக்கோ?)... கூடவே ஒரு செம்புத் தாயத்தும், வெள்ளித் தாயத்தும் இருந்தன.
‘‘இதெல்லாம்..?’’
‘‘இதெல்லாமா... என் பாட்டன் பயன்படுத்தின பொருட்கள்!’’
‘‘ஏடும் டைரியும் சரி! இதெல்லாம் கூட இருக்கே... எதுக்கு?’’
‘‘திசை காட்டி எதுக்குன்னு சொல்லத் தேவையில்லை. ஸ்படிகம் நீங்க இருக்கற இடத்துல இருக்கற பாசிட்டிவ் எனர்ஜியை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கும். உதாரணமா, இங்க ஆவியோ... இல்ல, கெட்ட சக்தி களோ இருந்தா, இந்த ஸ்படிகம் சூடாகிடும். இது பனிக்கட்டி மாதிரி இருந்தா இங்க எந்த கெட்ட சக்தியும் இல்லன்னு அர்த்தம். இந்த சோழிகள் நீங்கள் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லும்...’’‘‘சோழி பதில் சொல்லுமா... எப்படி?’’
‘‘நீங்க ஒரு கேள்வி கேட்டுட்டு குலுக்கிப் போடுங்க... நான் விளக்கம் சொல்றேன்!’’‘‘ஜோசியமா... ஐ டோன்ட் பிலீவ் திஸ் நான்சென்ஸ்!’’‘‘அப்படிச் சொல்லாதீங்க... இப்படிப் பேசினாலே எதிர்மறை எண்ணம் கொண்டவர்னு அர்த்தம். நம்பி இதைப் புரிஞ்சிக்க முயற்சி எடுங்க...’’- பளிச்சென்ற சுருக்கமான அந்த பதிலைத் தொடர்ந்து அரைமனதாக கணபதி சுப்ரமணியன் சோழிகளை எடுத்தார்.‘‘உங்க கேள்வி என்ன?’’‘‘என் கேள்வி... என் கேள்வி...’’ கணபதி சுப்ரமணியன் சற்று யோசித்தார்.
‘‘கேள்விக்கா பஞ்சம்? எவ்வளவோ இருக்கும்... உதாரணமாக, வீட்ல நல்ல காரியங்கள், உங்களுக்கு ஏதாவது வியாதி, வேதனைகள், வீடு வாசல் வாங்கறதுன்னு... நடக்குமா, நடக்காதாங்கற மாதிரி எவ்வளவோ விஷயங்கள் இருக்குமே?’’‘‘எதுக்கு அதெல்லாம்..? உங்க மரணச் செய்தியையே எடுத்துக்குவோம்...’’- கணபதி சுப்ரமணியன் அப்படிச் சொன்ன நொடி, அந்த வள்ளுவன் முகத்தில் ஒரு சலனம். கண்களிலும் கலக்கம்.
‘‘என்ன முழிக்கிறீங்க... நான் அதைப் பத்திதான் உங்ககிட்ட நிறைய பேசணும்!’’‘‘அதுல பேச எதுவுமில்லீங்க சார். அது அவ்வளவுதான்... முடிஞ்ச விஷயம்!’’‘‘மண்ணாங்கட்டி... ஆமா! எதை வச்சு அவ்வளவு துல்லியமா தேதி, நேரம், வினாடி சுத்தமா கணக்கு போட்டீங்க?’’‘‘கணக்கு போடுறவன்தானே ஜோசியன்! அதுலயும் பரம்பரை பரம்பரையா இதையே தொழிலா கொண்ட எங்களுக்கு கணக்கு போட சொல்லியா தரணும்?’’
‘‘இப்படி கணக்கு போட்டு ஒருத்தர் மரணத்தை கண்டுபிடிக்க முடியும்னா இந்த பூமி இப்ப இருக்கற மாதிரியே இருக்காதே? இட்ஸ் இம்பாஸிபிள்..!’’‘‘சரியாதான் சொல்றீங்க! ஒருவர் மரணத்தை மிகச்சரியா சொல்ற கணக்கு அஞ்சும் மூணும் எட்டுங்கற உலகம் போடற கணக்கு கிடையாது. அது அஞ்சும் மூணும் ஒன்பதுங்கற வினோத கணக்கு... எல்லாராலயும் சுலபமா போட முடியாது!’’‘‘அஞ்சும் மூணும் ஒன்பதா... இது என்ன கூத்து?’’
‘‘கூத்தேதான்! உதாரணம் காட்டி நீங்க சொன்ன ‘கூத்து’ங்கற விஷயம் இருக்குதே... இதுதான் உலக இயக்கம்!’’‘‘சப்ஜெக்ட் மாற வேண்டாம். நான் ‘கூத்து’ன்னு கேலியா சொன்னேன்.’’‘‘நீங்க எப்படிச் சொன்னாலும் அதுதான் உண்மை.
நடராஜ பெருமானோட கூத்து வடிவம்தான் உலக இயக்கம்!’’‘‘சோழில ஆரம்பிச்சு கடைசில நடராஜர்கிட்ட வந்துட்டீங்களே... மிஸ்டர் வள்ளுவர்! சுத்தி வளைக்காம நேரா விஷயத்துக்கு வாங்க. இந்த சோழிகள் எப்படிப் பேசும்? அப்படிப் பேசினா அது உங்க மரணம் பற்றிய என் கேள்விக்கு பதில் சொல்லுமா?’’
‘‘இந்தப் பன்னிரண்டு சோழிகளும் பன்னிரண்டு ராசிகளைக் குறிக்குது. உங்க கேள்வியோ மரணம் பற்றியது! அதாவது என் மரணம் பற்றி நான் சொன்னது உண்மையா... இல்ல, பொய்யாங்கறதுதானே?’’‘‘உம்... கிட்டத்தட்ட அப்படித்தான்!’’‘‘சரி! உங்க கையால குலுக்கிப் போடுங்க...’’‘‘போட்டால்..?
’’‘‘எந்த ஒரு உயிர் பிரியவும் ஆயுள்காரகனான சனி சம்மதிக்கணும். அந்த சனிக்குரிய எண் எட்டு. இந்த சோழில லேசா கறுப்பா இருக்கற சோழியும் சனிக்கு உரியது. இதை நீங்க மூன்று முறை அணுகலாம். இந்த மூன்று முறையும் இது நிமிர்ந்து விழாது. கூடவே எட்டு சோழிகள் கவிழ்ந்து விழும். அப்படின்னா மரணம் உறுதி. என் கணக்கும் சரின்னு அர்த்தம்!’’
‘‘ஓ... இதுக்குப் பேர்தான் சோழி பேசறதுங்கறதா?’’‘‘ஆமாம்...’’‘‘இதை என்னால ஏத்துக்க முடியாது. சனிக்கு எட்டாம் நம்பர்னு டிசைட் பண்ணது யாரு?’’
‘‘நீங்க நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கத் தொடங்கினா அது போய்க்கிட்டே இருக்கும்...’’‘‘என்ன பேசறீங்க நீங்க? அப்படிப் பார்க்கப் போய்தான் இன்னிக்கு மனுஷன் இவ்வளவு தூரம் வளர்ந்துருக்கான். இல்லேன்னா குரங்காவே இருந்திருப்போம்!’’
‘‘சார்... நான் ஒண்ணும் விஞ்ஞானத்துக்கு எதிரி இல்லீங்க. ஒரு வகைல இதெல்லாமும் விஞ்ஞானம்தாங்க!’’
‘‘உளறாதீங்க... இந்த மாதிரி அஞ்சும் மூணும் ஒன்பதுங்கற ராங் கால்குலேஷனை எல்லாம் விஞ்ஞானம்னு சொன்னா சிரிப்பாங்க!’’‘‘நான் உதாரணத்துக்காக அப்படிச் சொன்னேங்க... உள்ளுக்குள்ள நுட்பம் இருக்குங்க. ஒன்பதுல பாதி எவ்வளவுங்க?’’
‘‘இது என்ன அடுத்த கணக்கா?’’
‘‘என் கேள்விக்கு பதில் சொல்லுங்க...’’‘‘நாலரை...’’‘‘இல்லீங்க... ஒன்பதுல பாதி நாலுங்க!’’
‘‘மிஸ்டர் வள்ளுவர்... நான் உங்கள தேடி வந்ததை ஒரு வேண்டாத வேலைன்னு ஆக்கிடாதீங்க. என்கிட்ட பால்வாடி பசங்க கிட்ட பேசற மாதிரி எல்லாம் பேசக்கூடாது!’’
‘‘சார்... சத்தியமா நான் சீரியஸாதான் பேசிக்கிட்டிருக்கேன். இது ஒரு ஞானியோட கேள்வி.
மேலோட்டமா பார்த்தா ஒரு விடுகதை மாதிரி விளையாட்டா தெரியும். ரோமன் லெட்டர்ல ஒன்பதை எழுதி அதை சரியா வெட்டிப் பிரிச்சா, பிரிக்கப்பட்ட இரண்டு துண்டும் நாலுங்கற ரோமன் லெட்டராயிடும். எழுதிப் பிரிச்சு பாருங்க!’’‘‘ஓ... நீங்க அப்படி வர்றீங்களா? இட் ஈஸ் ஜிம்மிக்ஸ்!’’
‘‘ஜிம்மிக்ஸோ, பம்மிக்ஸோ... இதை நாங்க ‘குறுகு’( ரிuக்ஷீuரீu )ன்னு சொல்வோம்...’’‘‘குறுகு..? நல்லாருக்கே! ஒரு உண்மை குறுகலா ஒளிஞ்சிருக்கு. ஐ அண்டர்ஸ்டுட்!’’‘‘பெரிய உண்மைகள் இப்படி குறுகாதான் நம்மைச் சுத்தி ஒளிஞ்சிருக்கு. ஒண்ணு, ரெண்டுதான் வெளியே தெரிய வந்துருக்கு!’’
‘‘இருக்கலாம்... இதையும் நான் மறுக்கல!’’
‘‘பல குறுகுகளை எங்களப் போல வள்ளுவர்களால சுலபமா கண்டுபிடிச்சு கணக்குப் போட்டுப் பார்க்க முடியும். இந்த சோழி பேச்சும் ஒருவித குறுகுங்க...’’‘‘அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில சோழிகிட்ட வந்துட்டீங்களே...
ஆனா என்ன சொன்னாலும் நான் இதை நம்ப மாட்டேன். இதை வச்சுக்கிட்டு பல்லாங்குழி விளையாடலாம். இப்ப அதுவும் போச்சு. இது கம்ப்யூட்டர் கேம்ஸ்களுக்கான காலம். பை த பை... நான் விஷயத்துக்கு வரேன்!’’‘‘வாங்க... அதுதான் எனக்கும் வேணும்.’’
‘‘நீங்க ‘இறந்துடுவேன்’னு நம்பறதாலதான் இதை எல்லாம் என்கிட்ட கொடுக்கறீங்களா?’’
‘‘ஆமாம்...’’
‘‘வாழ நீங்க ஆசைப்படலையா?’’
‘‘அது முடியாது...’’
‘‘அப்ப உங்களுக்கு பிளட் கேன்சர் மாதிரி ஏதாவது கொடிய வியாதி இருக்கா...?’’
‘‘எந்த வியாதியுமில்ல. அப்பப்ப வயோதிகம் காரணமா வந்து போகற சளி, இருமல் தவிர...’’
‘‘அப்ப நீங்க எப்படி சாக முடியும்?’’
‘‘அது எப்படி வேணும்னாலும் நடக்கலாம்!’’
‘‘உங்க கணக்கைக் கடந்து, உங்க உயிர் பிரிய எந்தக் காரண காரியமும் இல்லாத நிலைல, அந்தக் கணக்கை நீங்க நம்பறது உங்களுக்கு பைத்தியக்காரத்
தனமா தெரியலையா?’’
‘‘உங்க இடத்துல இருந்து பார்த்தா அப்படித்தான் தெரியும். ஆனா, என் அனுபவத்துக்குத்தான் உண்மை தெரியும்!’’‘‘என்ன பெரிய அனுபவம்? மனசைப் பத்தி நான் பல புத்தகம் படிச்சவன். தீவிரமா அது நம்பற விஷயம் நடக்கும்னுதான் விஞ்ஞானியும் சொல்றான். அப்படி நீங்க ஒருவேளை நம்பினாலும், இவ்வளவு துல்லியமா ‘இந்த நொடியில உயிர் பிரியும்’னு சொல்ல முடியாது. அது சாத்தியமேயில்லை.’’
‘‘இப்ப என் மரணம் பற்றின பேச்சு எதுக்கு? நீங்க இதைக்கொண்டு காலப் பலகணியைக் கண்டுபிடியுங்க. விஞ்ஞானிகள் ஒரு பக்கம் புதுசு புதுசா பல விஷயங்கள கண்டுபிடிச்சிக்கிட்டே இருக்காங்க. ஆனா அவங்களோட எல்லாவித கண்டுபிடிப்பையும் விட பெரிய அதிசயம் இந்த காலப் பலகணி! நம்ம முன்னோர்கள் விஞ்ஞானிகளுக்கெல்லாம் பெரிய விஞ்ஞானிகள்னு சொல்ற அற்புதம் இந்த காலப் பலகணி! என் கருத்தை நிரூபிக்க ஆதாரமான விஷயம்தான் என் மரணம்.’’
- வள்ளுவர் எந்தக் கேள்விக்கும் திணறவில்லை. கணபதி சுப்ரமணியனுக்கு அவரிடம் அடுத்து எந்தக் கேள்வி கேட்பது என்பதில் திணறல். சிறிது நேரம் இருவருக்கும் இடையே மௌனம் நிலவியது. பின் அதை கணபதி சுப்ரமணியனே உடைத்தார். ‘‘மிஸ்டர் வள்ளுவர்! இந்த காலப் பலகணியை உங்க தாத்தா கண்டுபிடிச்சதா உங்க லெட்டர்ல எழுதியிருந்தீங்க. அவர் ஏற்கனவே கண்டுபிடிச்சத திரும்ப எதுக்கு கண்டுபிடிக்கணும்? அது எங்க இருக்குன்னு தெரியாதா?’’
‘‘நல்ல கேள்விய, சரியான கேள்விய இப்பதான் கேட்டுருக்கீங்க. என் தாத்தா பலகணி உள்ள இடத்துக்குப் போனதும், பலகணியைப் பார்த்து குறிப்புகள் எடுத்துக்கிட்டதும் மட்டும்தான் நிஜம். அந்த இடம் எங்க இருக்குன்னு அவருக்குத் தெரியாது.
அப்ப அவர், உங்களப் போல சரித்திர ஆராய்ச்சி செய்யற ஒருத்தர் துணையோட தான் போனார். குறுகு தெரிஞ்சவர்ங்கறதால அவர் என் தாத்தாவைக் கூட்டிக்கிட்டு போய் அப்பப்ப சில விளக்கங்கள் கேட்டு தெரிஞ்சிக்கிட்டார். தாத்தாவும் முதல்ல இதை நம்பல. ஒரு சுற்றுப்பயணம் போன மாதிரிதான் போனார். அதைப்பத்தி இதுல எழுதி
யிருக்கார்.
ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா, யார் எங்க தாத்தாவை கூட்டிக்கிட்டுப் போனாரோ, அவர் பலகணியைப் பார்த்து குறிப்புகள் எடுத்துட்டு வந்த இரண்டே நாள்ல இறந்து போயிட்டார். அவர் அப்படி இறந்துடுவார்ங்கற தகவல் பலகணில இருந்ததாம்.
இதுக்குப் பிறகுதான் தாத்தாவுக்கே பலமான நம்பிக்கை வர ஆரம்பிச்சது. அந்தப் பலகணியில பொதுவா ஒரு குறிப்பும் இருக்கு. அதைப் பாக்கறவங்க யாரா இருந்தாலும் அதிகபட்சம் 27 நாள்தான் உயிரோட இருப்பாங்களாம். என் தாத்தா வரையிலயும்கூட அது பலிச்சிடுச்சு!’’
‘‘இது என்ன... இப்படி மிரட்றீங்க? அப்ப அதைக் கண்டுபிடிச்சு என்னையும் 27 நாள்ல ‘செத்துப் போ’ன்னு சொல்றீங்களா?’’‘‘நான் அப்படிச் சொல்லல... சாகற விதி உள்ளவன்தான் அது கிட்டயே போவான். ஆனா நீங்க தான் இதை எல்லாம் நம்பாதவராச்சே...’’
‘‘குழப்பறீங்களே மிஸ்டர் வள்ளுவர்...’’
‘‘முதல்ல இதை எல்லாம் படிங்க. யாரையும் கூட்டு சேர்த்துக்காதீங்க. இதை ஒரு கூட்டம் வெளிய தேடிக்கிட்டு இருக்கு. இந்த தகரப் பெட்டிக்கு மட்டுமே அம்பது கோடி ரூபாய் வரை தர ஆள் இருக்கு. தங்கம், வைரம், நவரத்தினம் உள்ள புதையலை விட அதிசயப் புதையல் இந்த காலப் பலகணி.
இது அறிவுப் புதையல்! இதை நான் பணத்துக்கு ஆசைப்பட்டு விக்க விரும்பலை. உங்க மூலமா இது எப்படி வெளிப்படணுமோ அப்படி வெளிப்படட்டும். நான் பிறந்த இந்த பாரத நாடு சாமியார்கள் தேசமில்ல, சாதனையாளர்கள் தேசம்னு உலகம் நினைக்கணும். அதுதான் எனக்குத் தேவை!’’
- வள்ளுவர் கண்களில் நிஜமாகவே ஒரு ஒளி மின்னியது.‘‘அதெல்லாம் இருக்கட்டும். நீங்க குறிப்பிட்ட அந்த நேரத்துல உங்களை சாக விடாம நான் செய்துட்டா, இதெல்லாம் பொய்யான ஒண்ணாகூட இருக்கலாம்ங்கறதை ஒத்துப்பீங்களா?’’‘‘இப்படி ஒரு முடிவுக்குத்தான் நீங்க வருவீங்கன்னு எனக்குத் தெரியும். எனக்கு மட்டும் வாழ ஆசை இல்லையா என்ன... இப்ப நான் என்ன செய்யணும்? உங்ககூட வந்து உங்க கண்காணிப்புல இருக்கணுமா?’’ - பளிச்சென்று கேட்டார் வள்ளுவர்.
மொழி என்பது...
கடக்கும் ஒவ்வொரு14 நாட்கள் இடைவெளி யிலும், உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி இறந்து விடுகிறது. 2400 மொழிகள் தற்போது அழியும் தறுவாயில் உள்ளன. வடக்கு ஆஸ்திரேலியா, கிழக்கு சைபீரியா மற்றும் வட அமெரிக்காவின் பசிபிக் வட்டாரம் ஆகிய இடங்களில்தான் அதிக மொழிகள் அழிகின்றன.
மொழிஎன்பது...
மெக்சிகோவில் பயன்பாட் டில் இருக்கும் கிசீகிறிகி ழிணிசிளி எனும் மொழி மிகச் சீக்கிரமே அழிந்து விடலாம். காரணம், அந்த மொழியைப் பேசும் கடைசி இரண்டு மனிதர்கள், ஏதோ மனஸ்தாபத்தால் ஒருவருக்கொருவர் பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.
மொழி என்பது...
சீன மொழியில் 50 ஆயிரம் எழுத்துக்கள் உண்டு. அதில் குறைந்தபட்சம் 2 ஆயிரம் எழுத்துக்களையாவது அறிந்திருந்தால்தான் ஒரு சீன நியூஸ் பேப்பரை நாம் படித்துப் புரிந்துகொள்ள முடியும்.
மொழி என்பது...
உலக மக்கள்தொகையில் 12.44 சதவீதம் பேர் தங்கள் முதல் மொழியாகத் தேர்ந்தெடுப்பது மாண்டரின் எனும் சீன மொழியை. உலகில் 25 சதவீதம் பேர் எவ்வகையிலாவது ஆங்கிலம் பேசிவிடுகிறார்கள்.
தொடரும்...
இந்திரா சௌந்தர்ராஜன்