உலகக் கோப்பை கிரிக்கெட்...



இந்தப் படை வெல்லுமா?

உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தேறுமா? - இதுதான் இப்போது ஹாட் டாப்பிக். காரணம், 2011ல் இந்தியா கோப்பையைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த தொடர் நாயகன் யுவராஜ் சிங், இந்த முறை அணிப் பட்டியலிலேயே இல்லை. கம்பீர், சேவக், யுவராஜ், ஜாகீர், ஹர்பஜன் என சீனியர்கள் யாருமே இல்லை.

முப்பது பேர் கொண்ட உத்தேச அணியில் சீனியர் வீரர்கள் இல்லாதபோது கூட எதிர்ப்பு எழவில்லை. காரணம், அப்போது அவர்களில் யாருமே ஃபார்மில் இல்லை. ஆனால், 15 வீரர்கள் கொண்ட இறுதி அணியைத் தேர்வு செய்யும் சமயம், நிலைமையே வேறு. நடப்பு ரஞ்சி சீசனில் யுவராஜ் ஹாட்ரிக் சதம் அடிக்க, எதிர்பார்ப்பு எகிறியது. சேவக்கும் அவ்வப்போது அதிரடி காட்டிக் கொண்டிருந்தார்.

உள்ளூர் போட்டிகளில் கணிசமாக ரன் குவித்து வரும் ராபின் உத்தப்பா, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அமர்க்களமாக ஆடிய முரளி விஜய் இருவரும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பினர். காயம் அடைந்துள்ள ஆல் ரவுண்டர் ஜடேஜா உடல்தகுதியை நிரூபிக்காவிட்டால் யுவராஜ் உள்ளே வருவது உறுதி என டாக் பரவியதால், தேர்வுக் குழு முடிவுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

ஜடேஜா ஃபிட்னஸ்தான் கேள்விக் குறி. மற்றபடி, டோனி, கோஹ்லி, தவான், ரெய்னா, ரோகித், ரகானே, அஷ்வின், புவனேஷ்வர், ஷமி, இஷாந்த், உமேஷ் என ‘பன்னிரு பட்டியல்’ பக்கா. மீதமுள்ள மூன்று இடத்துக்குத்தான் செலக்டர்ஸ் ரூம் போட்டு யோசித்தார்கள். சிட்னியில் இருந்து கேப்டன் டோனியும் வீடியோ கான்ஃபரன்ஸில் இணைந்துகொண்டார்.

 கூட்டம் முடிந்ததும், கிரிக்கெட் வாரிய செயலர் சஞ்சய் பட்டேல் அணியை அறிவித்தார். ‘ஜடேஜா விளையாடத் தயார்’ என அணி மருத்துவர் நித்தின் பட்டேல் கேரன்டி கொடுத்துவிட்டார். இளம் ஸ்பின்னர் அக்ஷர் பட்டேல், அம்பத்தி ராயுடு பெயரைப் படித்தபோதும், ‘ஓகே சரியான முடிவு’ என்றே தோன்றியது.

கடைசியாக ஸ்டூவர்ட் பின்னி என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டதுதான் ரசிகர்களைக் கொந்தளிக்க வைத்துவிட்டது. யுவராஜ் மாதிரி ஒரு மேட்ச் வின்னரை மறந்துவிட்டு, கிளப் போட்டிகளுக்கு மட்டுமே லாயக்கான ஒருத்தரை சேர்ப்பதா என்று ட்விட்டர், ஃபேஸ்புக்கில் விவாதம் பரபரத்தது. இத்தனை எரிச்சல்களுக்குக் காரணம், ஸ்டூவர்ட் பின்னியின் அப்பா ரோஜர் பின்னி தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்ததுதான்.

தவான் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கும் நிலையில், முரளி விஜய் அல்லது உத்தப்பாவை அணியில் சேர்த்திருக்கலாம். முரளி விஜய், மோகித் ஷர்மாவுக்கு டோனி சிபாரிசு செய்ததாகவும், செலக்டர்ஸ் அதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை என்றும் பி.சி.சி.ஐ தரப்பில் தகவல் கசிகிறது.

ஏற்கனவே, டோனி திடீரென டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்ததற்கு அணியில் நிலவும் குழப்பம்தான் காரணம் என்கிறார்கள். இந்நிலையில், அணித் தேர்விலும் அவருக்கு மூக்குடைப்பு என்ற செய்தி உண்மையாக இருக்கக் கூடாது என வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை. 

உலகக் கோப்பை போட்டி வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலியா மற்றும் நியூசி லாந்து மைதானங்களில் நடக்கப்போகிறது என்பதைத் தேர்வுக் குழுவினர் மறந்துவிட்டார்களா? அதே பிட்ச்சில் நடந்த டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் பந்துவீச்சு ஏமாற்றமளித்த நிலையில், இந்த பவுலிங்கை வைத்துக்கொண்டு என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் அவநம்பிக்கையுடன் இருந்தாலும், ‘‘இந்த அணி கோப்பையைத் தக்க வைத்துக் கொள்ளும்’’ என்று அடித்துச் சொல்கிறார் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.

‘‘பேட்டிங் ஸ்டிராங்கா இருக்கு. எப்போதும் அதுதான் நம் பலம். 2011ல கோப்பையை ஜெயிச்சப்போ பல வீரர்களோட ஆல் ரவுண்ட் பர்ஃபார்மன்ஸ் அதுக்கு உதவியா இருந்துச்சு. இந்த முறையும் ஜடேஜா, பின்னி, அஷ்வின் கை கொடுப்பாங்கன்னு நம்பறேன். பவுலிங்தான் கொஞ்சம் உதைக்குது. ஆஸ்திரேலிய பிட்ச்ல டிசிப்ளினா பந்து வீசினாலே சமாளிச்சுடலாம். ஒருநாள் போட்டியில ஃபீல்டிங் கட்டுப்பாடு இருக்கும்ங்கிறதால முரளி விஜய்யை விடவும் தவான்தான் பெட்டர் சாய்ஸ்.

ஸ்டூவர்ட் பின்னிய செலக்ட் பண்ணதுக்கு ரோஜர் பின்னி தான் காரணம்ங்கிறதை ஏத்துக்க முடியாது. நான் செலக்ஷன் பேனல்ல இல்லாட்டியும், என்னோட பிளேயிங் லெவன்ல கண்டிப்பா ஸ்டூவர்ட் பின்னிய சேர்த்திருப்பேன்.

ஏன்னா, அவர் பந்தை நல்லா ஸ்விங் செய்வாருங்கிறதோட, கடைசி ஓவர்கள்ல அதிரடியா பேட்டிங் பண்ணக் கூடியவர். ஒருநாள் போட்டில சான்ஸ் கெடச்சப்போவெல்லாம், ரெகுலர் பவுலர்களை விட அவர் அதிகமா விக்கெட் எடுத்திருக்கார். டோனிக்கு காயம் ஏற்பட்டா பேக் அப் கீப்பிங்குக்கு அம்பத்தி ராயுடு இருக்கார். அதனால உத்தப்பாவை சேர்க்காததும் சரியான முடிவுதான்’’ என்கிறார் கவாஸ்கர்.

ஆனாலும், ரசிகர்களுக்கு இந்த அணி மீது பெரியளவு நம்பிக்கை இல்லை. ‘‘போன முறை உள்ளூர்ல போட்டி நடந்துச்சு. பெரும்பாலான போட்டிகளில் சச்சின், யுவராஜ் சூப்பரா ஆடினாங்க. இப்போ ஆஸ்திரேலியா, நியூசிலாந்துல அனுபவம் இல்லாத டீமை வச்சுக்கிட்டு டோனி சாதிக்கிறது ரொம்பக் கஷ்டம்’’ என்கிறார்கள். உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக, இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, இங்கி லாந்து அணிகளோடு முத்தரப்பு தொடரில் மோதுவது நல்ல விஷயம்.

அதில் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்து கொஞ்சம் உஷாராக வாய்ப்பிருக்கிறது. சரியாக விளையாடாதவர்களுக்கு காயம் என கதை விட்டு கல்தா கொடுத்துட்டு, யுவராஜ், உத்தப்பா, சேவக்கை சேர்த்து டீமை ஸ்ட்ராங் ஆக்கலாம். அப்போதும் கூட, நாம் சாம்பியன் பட்டத்தைத் தக்க வைப்போமா என்றால், ’நிச்சயமாக, சத்தியமாக’ என்று அடித்துச் சொல்ல கவாஸ்கரைத் தவிர, யாருமே இல்லை! இருந்தாலும் மனசு கேட்கவில்லை. ‘பசங்க கோப்பையோட தான் இந்தியா வருவானுங்க’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருப்போம். அந்த பாசிட்டிவ் எண்ணமாவது பலன் கொடுக்காதா!

-ஷங்கர் பார்த்தசாரதி