ஐந்தும் மூன்றும் ஒன்பது



மர்மத் தொடர் 1

உலகில் மொத்தம் ஏழு அதிசயங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.  நிச்சயம் நிறைய அதிசயங்கள் இருக்கும்.ஏழுதான் என்று அதிசயங்களை ஒற்றை இலக்கத்துக்குள் யார் அடக்கினார்களோ?

என் வரையில் மனித சமூகத்தின் கடவுள் நம்பிக்கையே கூட ஒரு அதிசயம்தான்!பார்க்கின்ற, கேட்கின்ற, பாதிக்கின்ற விஷயங்களால்தான் மனித மனம் வடிவம் கொள்கிறது. இந்த மூன்றாலும் ஒருவரும் இதுவரை கடவுளை நேரில் பார்த்ததில்லை.

அப்படியே ஒருவேளை கடவுள் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அவர் மனித இனத்தவர் வடிவில் இருப்பாரா என்பதே என் வரையில் கேள்விக்குறிதான்!மனிதன் அறிவாளியாக இருக்கலாம். ஆனாலும் உடலையும் உயிரையும் வென்று காலத்தால் அழிய முடியாதபடி வாழ இயலாதவனே அவன்!முயன்றால் மனித இனத்தை முற்றாக அழித்து விடவும் முடியும். எனவே, இப்படி ஒரு இனத்தவராக கடவுள் இருக்க வாய்ப்பில்லை என்பதே என் நம்பிக்கை.

இதுபோல் கடவுள் குறித்து கேட்க என்னிடம் நிறைய கேள்விகள் உள்ளன. ஆனாலும் உலகில் பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கையோடு உள்ளனர். இது ஒரு அதிசயம்தானே?
- பேராசிரியர் கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...அன்றைய சூரிய உதயம் மிகவே ரம்யமாக இருந்தது. காலை நேர நடைப்பயிற்சியில் அதை உணர்வதே ஒரு சுகமான அனுபவம்தான்! சீரான வேகத்தோடு நடந்தபடி இருந்தார் கணபதி சுப்ரமணியன்.

கூடவே அவர் பேத்தி ப்ரியதர்ஷினி. க.சு. எழுபது வயதைத் தாண்டிவிட்டார். இளம் வயதில் அவரைப் பார்ப்பவர்கள் ஹாலிவுட் நடிகர் சீன் கானரி மாதிரியே இருப்பதாகச் சொல்வார்கள். இதனால் அவருக்கு 'ஜேம்ஸ் பாண்ட்’ என்கிற செல்லப் பெயரும் உண்டு.இன்று சீன் கானரிக்கு வழுக்கை விழுந்துவிட்டது.

ஆனால் கணபதி சுப்ரமணியனுக்கு ஒரு முடிகூட கொட்டவில்லை. ‘டை’ அடித்துக்கொண்டால் சள்ளென்று பத்து வயது குறைந்து போகும். ஆனால் செயற்கை முறை எதிலும் நாட்டமில்லாததால் அப்படியே விட்டு விட்டதில், தலைமுடியில் ஒரு நல்ல நாரை வெளுப்பு! முடியைப் பெரிதாக வாரிக் கொள்ளவும் அவருக்குப் பிடிக்காது. கோதிவிட்டுக்கொள்வது அவரது மேனரிசங்களில் ஒன்று.

சமயங்களில் பேத்தி ப்ரியதர்ஷினி எனும் ப்ரியா, மெனக்கெட்டு வாரி விடுவாள். கூடவே பவுடர் போட்டு ஸ்டிக்கர் பொட்டெல்லாம் வைத்து விடுவாள். அதை எக்காரணம் கொண்டும் கலைத்து விட்டுக்கொள்ள மாட்டார். அப்படியே தான் அட்டெண்ட் செய்யும் கல்லூரி விழாக்களுக்கும் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட்டின் பிரத்யேக அழைப்புகளுக்கும் போய் வருவார். எல்லோரிடமும் பெருமையாக ‘‘என் பேத்தியின் மேக்கப்’’ என்று ஒரு லீட் கொடுத்து விடுவார்.

ப்ரியாவும் தாத்தா தனக்குத் தரும் இந்த லிபர்ட்டியை எண்ணி வியந்து போவாள். ‘லிபர்ட்டி’ என்கிற புழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொல்லை ‘சுதந்திரம்’ என்று தமிழ்ப்படுத்தலாம்தான். ஆனால், ப்ரியா அதையும் மீறிய ஒன்றாக நினைப்பதால், வேறு சரியான வார்த்தை அகப்படவில்லை.நடைப்பயிற்சிக்குக் கூட தாத்தாவும் பேத்தியும் ஒன்றாகத்தான் போவார்கள். இதோ இன்றும்...

நடக்கும்போது பேசக்கூடாது என்பது அவர்கள் குடும்ப டாக்டரின் கண்டிப்பான உத்தரவு. இந்த மாதிரி உத்தரவுகளை மீறத்தானே நாமும் 47ல் சுதந்திரம் வாங்கினோம்!
‘‘தாத்ஸ்... இன்னிக்கு எத்தன ரவுண்ட்ஸ்?’’‘‘வழக்கம் போல மூணு ரவுண்ட். அஞ்சு கிலோ மீட்டர்தான்..!’’
‘‘ரெண்டு ரவுண்டு போறும் தாத்ஸ்...’’‘‘ஏன்?’’

‘‘நடந்த இடத்துலேயே திரும்பத் திரும்ப நடக்கறது பெரிய போர் தாத்தா...’’‘‘அப்ப மாறிப்போம்...’’‘‘லேண்ட்ஸ்கேப் எல்லா தெருவிலும் ஒண்ணு மாதிரிதான் இருக்கு. நான் ரொம்பவே டிஸ்டர்ப் ஆறேன் தாத்தா!’’‘‘அப்ப நம்ம பங்களாவுல ஒரு ஜிம் ஃபார்ம் பண்ணி, அதுல ஒரு வாக்கர் ரன்னரை பிரதிஷ்டை செஞ்சு அதுமேல மூவாகாம நடப்போமா?’’
‘‘நடக்கறதே மூவ்மென்ட்டுக்காகத்தான்... இந்த மூவ் இல்லாத நடை, மனிதனோட குரூரக் கண்டுபிடிப்பு தாத்தா!’’

‘‘ப்ரியா! நீ ரொம்பவே கரெக்டா யோசிக்கிறே. இப்படி யோசிக்க எனக்கு ஐம்பது வயசு தேவைப்பட்டது...’’
‘‘இது பதிலா? பாராட்டா? விமர்சனமா?’’‘‘மூணும்தான்...’’
‘‘எனக்கு பதில் வேணும்...’’
‘‘உனக்கு நம்ம சென்னை தெருக்கள் பிடிக்கலையா?’’
‘‘உங்களுக்குப் பிடிச்சிருக்கா?’’

‘‘பிடிச்சிருக்கு, பிடிக்கல... இப்ப இந்த டாபிக் எதுக்கு?’’
‘‘கோபம் வருது தாத்தா... பாருங்க, அந்த காலி சிகரெட் பாக்கெட் அதே இடத்துல நாலு நாளா கிடக்குது! கார்ப்பரேஷன்காரங்க வேலையே பாக்கலன்னு நல்லா தெரியுது. அப்புறம் தெருவுல பாதியை காரை நிறுத்தி ஆக்கிரமிச்சுட்டாங்க. அதுபோக, எவ்வளவு மேடு, பள்ளம்... ரோடு போட்டு எனக்குத் தெரிஞ்சு ஏழு எட்டு வருஷம் ஆகுது. யாருமே கேட்க மாட்டாங்களா?’’
- ப்ரியா எதனால் நடைப்பயிற்சி பிடிக்காத மாதிரி பேசுகிறாள் என்பது கணபதி சுப்ரமணியனுக்குப் புரிந்தது.

‘‘தினமும் டி.வில எவ்வளவு மேல்நாடுகளைப் பாக்கறோம்? அதுல ரோடுகளையும் பாக்கறோம். நம்ப ரோடுகளும் இப்படி ஆகணும்னு ஏன் யாரும் நினைக்கறதில்லை? அவங்களுக்காவது ஏசு... இல்ல, அல்லான்னு ஒரே ஒரு சாமிதான். நமக்கு இங்க எத்தனை சாமிங்க! அப்ப கடவுள் அருளும் கருணையும் இங்க அதிகமா இருக்குன்னுதானே அர்த்தம். அப்படின்னா நாம அவங்களவிட எல்லா விதத்துலயும் மேல இருக்க வேண்டாமா?’’

- ப்ரியா தன் சமூக அக்கறையை கடவுள் வரை கொண்டு வந்து விட்டாள். அதுதான் சாக்கென்று கணபதி சுப்ரமணியனும் கப்பென்று ஒரு பிடி பிடித்தார். எல்லாம் நடந்தபடியேதான்... அருகில் பிளாட்பாரக் கோயில் ஒன்று!‘‘அம்மாடி... இதுல இருந்தே கடவுள் பொய்ங்கறது உனக்குத் தெரியலியா? இன்ஃபேக்ட், அவரே ஆக்கிரமிக்கப்பட்ட இடத்துலதானே உக்கார்ந்துருக்கார். பாரு, இந்தப் பாயும்புலி அம்மன் கோயிலே அதுக்கு சாட்சி...’’‘‘பாயும்புலி அம்மன் இல்ல... வேம்புலி அம்மன்!’’

‘‘ஏதோ ஒரு அம்மன்... இவ நிஜமா இருந்தா இந்த ஆக்கிரமிப்புக் கோயிலை ஏத்துப்பாளா? தனக்கொரு கோயில் கட்டி உண்டியலையும் வச்சவனை தன் புலியை ஏவி விட்டே கடிச்சுக் குதறியிருப்பா இல்ல?’’“நீ சொல்றதும் சரியாதான் இருக்கு... ஆனா என் அம்மா, அதாவது உன் மருமகள் எப்படி இதை எல்லாம் கொஞ்சம் கூட சிந்திக்காம பக்திப்பாட்டா பாடிக்கிட்டே போறா?”
‘‘கரெக்ட்... இது நல்ல கேள்வி!’’

‘‘பை த பை ப்ரியா... உன் அம்மா பாட்டெல்லாம் எனக்குப் பிடிக்கவே பிடிக்காதுன்னு உனக்கு நல்லா தெரியும். பெத்தவளாச்சேன்னுதான் நீயும் எதுவும் சொல்லாம இருக்கேன்னும் எனக்குத் தெரியும். உன் அப்பன் ஒரு உலகம் சுத்தி... அவனுக்கு சமயத்துல அவன் பேரே மறந்து போயிடுது. அந்த அளவு அவன் கம்பெனி அவனை ஒரு கோட் - சூட் போட்ட அடிமையா ஆக்கி வச்சிருக்கு. அப்படி இருக்கற அவனுக்கு, உன் அம்மா என்ன செய்யறாங்கறதே தெரியாது. ஆனாலும் உன் அம்மா பாடின பாடல்கள் கொண்ட சி.டி நல்லா போகுதாம்! இதை எங்க போய்ச் சொல்ல? எந்த சுவத்துல போய் முட்டிக்க..?’’

- கணபதி சுப்ரமணியன் முகத்தைச் சுறுக்கிக்கொண்டு கேட்ட அதே வேளை, ஒருவர் எஃப்.எம் ரேடியோவை தன் செல்போனில் கேட்டபடி வாக்கிங்கில் அவர்களைக் கடந்து போனார்.
எஃப்.எம்.மில் ப்ரியாவின் அம்மா பத்மாசினியின் பக்திப் பாட்டுதான் ஒலித்துக் கொண்டிருந்தது.‘‘கேட்டியா! சொல்லி வாய் மூடல... ஒருத்தன் கேட்டுக்கிட்டு போறான்!’’
‘‘ஆமாம் தாத்தா... என் கோபம் அதிகரிக்கற மாதிரியே எல்லாம் நடக்குது. ஏன் தாத்தா, இதையெல்லாம் நம்மால மாத்தவே முடியாதா?’’

‘‘ஏன் முடியாது? மாறிக்கிட்டே இருக்கறதுதானேம்மா வாழ்க்கை... வாழ்க்கைன்னா என்ன? மூவ்மென்ட்டுங்கற சலனம்தானே?’’‘‘அப்ப பத்திரிகைல வச்சு கிழிகிழினு கிழிப்போமா?’’‘‘கிழிக்கறவங்க கிழிச்சுக்கிட்டுதான் இருக்காங்க. ஆனா, எல்லாமே கடல் மழையா பயனில்லாமலே இல்ல போய்க்கிட்டு இருக்கு!’’‘‘அப்ப என்னதான் தீர்வு?’’‘‘சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே... நீ இப்ப ‘ட்ரிபிள் ஈ’ முடிக்கப் போற. அடுத்து எம்.எஸ் பண்ண யு.எஸ் கிளம்பிடு. அப்படியே அங்கேயே செட்டில் ஆயிடு. இந்த ஊர் உனக்கு வேண்டாம். தாய்நாடு, தகப்பன் நாடுங்கற சென்டிமென்ட் எல்லாம் உன்கிட்டயும் நல்லவேளையா இல்லை!’’

‘‘அங்கேயும் நிறைய குளறுபடிகள் இருக்கு தாத்தா!’’‘‘தெரியும்மா... மனுஷன் எங்கெல்லாம் இருக்கானோ, அங்கெல்லாம் குளறுபடி இருக்கத்தான் செய்யும். ஆனா, ஒரு மார்னிங் வாக்கிங் இங்க நம்மை இவ்வளவு உறுத்தற மாதிரியெல்லாம் அங்க கிடையாது.

எப்ப போகும்னே தெரியாத எலக்ட்ரிக் பவர், நாலு நாளைக்கும் அஞ்சு நாளைக்கும் ஒரு தடவை வர்ற கன்டாமினேட்டட் கார்ப்பரேஷன் வாட்டர், நாய்களும் மாடுகளும் திரியற தெரு, இருபத்தி நாலு மணி நேரமும் இரைச்சலா சினிமா பாட்டு ஒலிக்கற டீக்கடை, மீட்டர் போட முறைக்கற ஆட்டோ, போஸ்டர் ஒட்டறதுக்குன்னே கட்டின சுவர்னு கல்தோன்றி மண்தோன்றி அதுக்கும் முன்னால தோன்றிய மூத்த குடிகள் வாழற விசித்திர - வினோத நாடும்மா இது. என் மாதிரி கிழடுகளுக்குதான் விமோசனமில்ல... உனக்கென்ன? பேசாம பறந்துடு!’’

- தாத்தா சொல்லி முடிக்கவும், ‘பிருந்தாவன்’ என்கிற அவர்களது பங்களா வந்திடவும் சரியாக இருந்தது.இருவரும் உள்ளே நுழையும்போது ப்ரியாவின் அப்பா அனந்த கிருஷ்ணன் ஒரு ப்ரீஃப்கேஸ், பருத்த ரோலிங் சூட்கேஸ் சகிதம் அவருக்கென அவரது நிறுவனம் அளித்திருந்த காரில் ஏறிக்கொண்டிருந்தார்.இருவரையும் கார் கதவுக்கு வெளியில் நின்று ஏற இறங்க பார்த்தார்.‘‘குட்மார்னிங்’’ என்றாள் ப்ரியா.‘‘லக்கேஜ் பெருசா இருக்கு... அப்ராடா?’’ - கேட்டார் கணபதி சுப்ரமணியன்.

‘‘ஆமாம்பா... சைனா போறேன்!’’
‘‘அடிக்கடி போற போல இருக்கு...’’
‘‘அங்க ஒரு பிராஞ்ச் இருக்கே..?’’
‘‘நீ ஒரு கேபிடலிஸ்ட் புரொடக்டர். சீனா புடிச்சிருக்கா?’’

‘‘ரொம்ம்ம்ப... இங்க விட எங்களுக்கு அங்கதான்பா ஹோப் ரொம்ப இருக்கு...’’‘‘ஓ அவங்களும் கெட ஆரம்பிச்சிட்டாங்களா?’’‘‘அப்பா...’’‘‘சும்மா சொன்னேன்டா... ஹேப்பி ஜர்னி...’’ - கை குலுக்கினார். அவர் காரில் ஏறிட, அது மென்மையான ஓசையோடு நகரத் தொடங்கியது. ப்ரியா அவள் அறை நோக்கிச் செல்ல, கணபதி சுப்ரமணியன் மாடியில் உள்ள அவர் அறை நோக்கி நடக்க முற்பட்டபோது மெயின் கேட்டில் வாட்ச்மேன், ‘‘அதெல்லாம் இப்ப யாரையும் பாக்க முடியாதுங்கறேன்’’ என்றான் சத்தமாக.

திரும்பினார். வாசலில் ஒரு இளைஞனும் இளைஞியும் தெரிந்தனர். ‘‘யார் அது தங்கவேலு?’’‘‘ஐயா, யாரோ ரெண்டு காலேஜ் ஸ்டூடன்ட்டுங்கய்யா...’’
‘‘அவங்களை உள்ள விடு!’’அவர்கள் உள்ளே வந்தனர். இளைஞன் காபி ஆற்றுவது போல வணக்கம் சொன்னான். இளைஞி சிரிக்க மட்டும் செய்தாள்.
‘‘வாட் டு யு வான்ட்?’’

‘‘நீங்கதான் ஆய்வாளர் கணபதி சுப்ரமணியனா?’’‘‘எக்ஸாக்ட்லி’’‘‘நீங்கதான் சார் வேணும்...’’
‘‘என்ன விஷயம்?’’‘‘சந்திரன்ல இருந்து எடுத்து வந்த கல் ஒண்ணு உங்ககிட்ட இருக்காமே?’’
‘‘அதுக்கென்ன?’’

‘‘அதைப் பார்த்து அதோட போட்டோ எடுத்துக்கணும்.’’
‘‘பார்றா... அது என்ன அஜித்தா... ரஜினியா... போட்டோ எடுத்துக்க?’’

‘‘அவங்க கூடவும் எடுத்துக்க ஆசைதான். இப்ப இந்த போட்டோவை காலேஜ் சாவனிர்ல போடலாம்னு...’’‘‘வெரி சாரி! நான் பத்திரிகைக்காரங்க கேட்டப்பவே போட்டோ எடுக்க அனுமதிக்கல. உங்களுக்கும் அதுதான் பதில்!’’
அவர்கள் பேந்தப் பேந்த விழித்தனர்.

‘‘வெரி சாரி... புறப்படுங்க’’ - என்றவராக உள்ளே போக முயன்றவரிடம் வாட்ச்மேன் தங்கவேலு, ‘‘ஐயா! இந்தக் கவரை ஒருத்தர் உங்ககிட்ட கொடுக்கச் சொன்னார்’’ - என்று கொடுத்தான்.

ஆவலாக வாங்கிக்கொண்டு அவரது அறை நோக்கி மாடிப்படி ஏறினார். எதிர்ப்பட்ட வேலைக்காரி முத்தழகுவிடம் ‘க்ரீன் டீ’ என்று மட்டும் சொன்னார். அறையின் சாவி அவர் பாக்கெட்டில் இருக்க, எடுத்துத் திறந்தார். திறந்த மாத்திரத்தில் விளக்குகள் உள்ளே எரிந்தன.

பெரிய்ய்ய அறை!உள்ளே வினோதமான விஷயங்கள் நிறையவே! அறை நடுவே பெரிய மேஜை. அதன் மேல் அந்த நாளைய முதுமக்கள் தாழியில் இருந்து பலதரப்பட்ட மிருகங்களின் எலும்புக்கூடு வரை. ஒரு மனித மண்டை ஓடும் இருந்தது. கூண்டு ஒன்றில் மலேசிய வண்ணச் சிறகுள்ள பறவைகள் சில.அவர் கதவைத் திறக்கவும் அவை படபடத்தன!

அவர் எதையும் கவனிக்காமல் கவரைப் பிரித்தார். அதில் ஒரு நாளிதழ் அளவுக்கான தாள் ஒன்று, எட்டாக மடித்து வைக்கப்பட்டிருந்தது. மிகவும் பழைய தாள்! நிதானமாக அதை விரித்தார். அதில் ஒரு வினோத படம். மேலே ‘காலப்பலகணி’ என்கிற ஒற்றை வார்த்தை!

இந்திரா சௌந்தர்ராஜன்

மர்மக் கதைகளை லாஜிக் இடறாமல், அறிவியல் குழைத்து வார்ப்பதில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்கு நிகர் அவர்தான். சின்னத்திரை வரலாற்றில், ‘விடாது கறுப்பு’ என்ற பெயரை மறக்க முடியுமா?

இந்திரா சௌந்தர்ராஜன் ‘குங்குமம்’ இதழில் எழுதிய, ‘விட்டு விடு கறுப்பா’ தொடர்தான், பின்பு சன் டி.வி.யில் அப்படியொரு சூப்பர் ஹிட் சீரியலானது. ‘காற்றாய் வருவேன்’, ‘ருத்ர வீணை’ என இவரின் நாவல்கள் சீரியல் ஆன பட்டியல் மிகப்பெரிது. மீண்டும் ‘குங்குமம்’ இதழில் இவரின் மந்திர எழுத்துகள் திகில் சுமந்து வருகின்றன...
உங்களுக்காக!

‘‘நேத்து நான் மூணு மணி நேரம் தொடர்ந்து பேசிக்கிட்டே இருந்தேன்...’’
‘‘உங்க மனைவி வீட்டுல இல்லையா?’’

‘‘தலைவர் குற்றப்பத்திரிகையை கையில வாங்கினதும் என்ன சொன்னார்தெரியுமா?’’‘‘என்னது?’’
‘‘நானும் பத்திரிகைக்காரன்னு சொல்றாரு!’’

‘‘நாட்டோட பொருளாதாரம் முன்னேற்றமா இருக்குன்னு தலைவர் சொல்றாரே...’’
‘‘அவரோட சொத்து மதிப்பு உயர்ந்திருக்கு... அதான்!’’

‘‘ஏன் உங்க பையனை இப்படிப் போட்டு அடிக்கிறீங்க..?’’
‘‘அமைச்சர் படத்தைக் காட்டி, ‘எனக்கு இந்த கும்பிடு பொம்மைதான் வேணும்’னு கேட்கறான்!’’
- பி.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்