அழியாத கோலங்கள்



ஏற்கனவே வேறு மருத்துவமனையில் 1995ல் ஒரு முறை நெஞ்சைப் பிளந்து, இதயத்தை பொட்டாஷியமும் ஐஸும் வைத்து நிறுத்திவிட்டு, ஹார்ட் - லங் மெஷின் மூலம் ரத்த ஓட்டமும் சுவாசமும் தொடரச் செய்து, 16 வருடங்கள் வாழ்ந்தாச்சு.

 82வது வயது தாண்டிய பிறகு அப்பல்லோ மருத்துவமனை சென்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆசை மறுபடி தொடர்ந்தது. இன்று இதயத்தை நிறுத்துவதில்லை; துடித்துக் கொண்டிருக்கும் இதயத்திலேயே ரத்த நாளங்களுக்கு ஒட்டுப் போட்டு விடுகிறார்கள்.

கடந்த 66 நாட்களாக ஓட்டைகள் குறைந்த, பெரிதாக்கப்பட்ட இதய நாளங்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் வேலை செய்கின்றன. அதனால் அதிகம் ஓய்வெடுக்க வேண்டிய சூழல். இன்று ஒரு பிரபல வக்கீல், எனக்கு வேண்டிய சொந்தக்காரர்களுக்கு சட்ட யோசனை சொல்ல எங்கள் கட்டிடத்துக்கு வந்தார். நான் படுக்கையில் இருந்தேன். என் மனைவி, ‘‘நீங்களும் வக்கீல்தானே! எழுந்து போய்ப் பேசுங்களேன்’’ என்று என் இதய நோயை சற்றே மறந்து விட்டுக் கூறினார்.

‘‘ ‘நல்ல வக்கீலின் யோசனை வேண்டும்’ என்று சொன்னார்களே... காதில் விழவில்லையா?’’ - இது என் கொழுப்பு!‘‘அதற்காக இப்படி கண்டுக்காம இருப்பீங்களா?’’என் அடுத்த கொழுப்பு... ‘‘நல்ல வக்கீலெல்லாம் கட்சிக்காரர் வீடு தேடி வரமாட்டாங்க...’’‘‘அதுக்கும் நீங்கள் போகாததற்கும் என்ன சம்பந்தம்?’’‘‘என்னை அழைத்தால்தான் போவேன்!’’என் மனையாள் முகத்தில் கோபம் பீறிட்டு வந்தது.

என் தாய் தந்தை 60 வருடத்துக்கு முன்னால் சென்னைவாசியான இவளிடம், ‘‘எங்கள் வீட்டில் ஒரு மூத்த கோழை மகன் இருக்கிறான்... அவனை நீதான் வந்து திருத்தணும்!’’ என்று சொல்லி அழைத்து வந்தார்கள். Better half வெறும்  bitter half   ஆனது தவிர, எதுவும் நடக்கவில்லை.

கல்லூரி வாழ்நாட்களில் ஒருவரை ஒருவர் தெரியாத நாலு நபர்களோடு ஒரு அறையில் ஆளுக்கொரு பாய் தலையணையுடன்... ஒரு இரும்பு டிரங்கு பெட்டியில் காசையும் பொருளையும் பூட்டி வைத்துக்கொண்டு இருந்தோம்.

சில நாட்களில் நட்பு வளர்ந்தது. திருச்சி நேஷனல் கல்லூரியில் நான் படித்தபோது, அதே ஊரின் செயின்ட் ஜோசப் கல்லூரி நியூ ஹாஸ்டலில் ‘சிங்கிள் ரூம் மாணவர்’ என்ற பெயரில் ஒவ்வொரு மாணவனுக்கும் தனி அறை கொடுக்கப்பட்டது. அதை விட்டு என்னை இங்கே தள்ளியது என் தந்தையின் கஞ்சத்தனம் என்று ஏங்கியவன் நான்.

பின்னால்தான் ‘அந்நியர் மூவருடன் அட்ஜஸ்ட் பண்ணுவது ஒரு பயிற்சி’ என்பது தெரிந்தது. ஒரு இந்து கூட்டுக்குடும்பத்தில் எப்படி அனுசரித்துப் போவது என அன்று கற்ற பாடம் இன்றும் எனக்குக் கைகொடுக்கிறது என்று நம்புகிறேன். நானும் என் மனைவியாரும் கிட்டத்தட்ட 80 வருடங்கள் இந்த உலகத்தால் பயன்படுத்தப்பட்ட பழமையான பொருள்கள்.

என் மகளும் மருமக னும் புதுமையான பிரபலங்கள். சென்னையில் தாய் தந்தையரை சிறு வயதிலேயே இழந்து பல சொந்தக்காரர்களுடன் அனுசரித்து வளர்ந்தது என் மனையாளுக்கும், ஒரு பொதுக்குடும்பத்தில் வாழ்ந்தது எனக்கும் வசதி. இன்று நாங்கள் இருவரும் மகளுக்கும் மருமகனுக்கும் மட்டுமல்லாமல், அவர்களுக்கு அடுத்த வாரிசுகளுடனும் இனிய நண்பர்களாக வாழ முடிகிறது.

நான் பரமக்குடி கிராம நாகரிகத்திலேயே ஆரம்ப நாட்களில் வாழ்ந்தவன். என் நான்கு அத்தைமார்களின் என் வயது வாரிசுப் பெண்களெல்லாம் இன்று அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் தங்கள் மக்கள் வீட்டில் வசிக்கிறார்கள். அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்கிறோம். அந்தக் காலத்தில் பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய எங்கள் சொந்தங்கள் வாழும் ஊர்களில் பெண்களுடன் ஆண்கள் பேசும் பழக்கம் தவிர்க்கப்பட்டது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உறவு கற்பு... காதல்... உடலுறவு என்ற மூன்று அதிசய சிந்தனைகளால் அறிவாற்றாமையால் ஊனமுற்றது.

திருமணத்துக்குப் பிறகு நானும் என் மனைவியும் நண்பர்களாக வாழும் முயற்சியில் ஈடுபட்டோம். என் 17 வயது தம்பிக்கும் 8 வயது தங்கைக்கும் என் மனைவி ஒரு ஆலோசகராக செயல்பட்டாள். எங்கிருந்தோ வந்த பெண்மணி, பள்ளி சென்று படிக்காத தன் மாமியாருக்கே ஒரு ஆங்கில உதவியாளராக மாறினாள். எனக்கும் என் தாயாருக்கும் இடையே போர் மூண்டபோதெல்லாம், மாமியாரின் கட்சியில் சேர்ந்து என்னை எதிர்த்துவிட்டு, பின்னால் எப்படியோ இருவரையும் தட்டிக்கொடுத்து சரிப்படுத்துவாள்.

ஒருமுறை தன் அடுத்த சகோதரியின் திருமணத்துக்கு என் பட்டணத்து மனைவி இந்த பட்டிக்காட்டு வக்கீலை அழைத்துப் போனார். ஸ்டோர் ரூம் சாவியை இடுப்பில் சொருகிக்கொண்டு, திருமண ஏற்பாடுகளில் அவர் தீவிரமாக ஈடுபட்ட நேரம்... திடீரென அவருக்கு சம வயதான ஒரு பெண்மணியை அழைத்து வந்து, ‘‘இவள் ஸோ அண்ட் ஸோ... எம்.ஏ., எம்.எட்’’ என்று அறிமுகப்படுத்தி, ஸ்டோர் ரூம் கதவைத் திறந்து, இரண்டு ஃபோல்டிங் சேர்களைப் போட்டு, ‘‘எனக்கு நிறைய வேலை இருக்கு... நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க... வந்துடறேன்!’’ என இரண்டு கதவுகளையும் அடைத்துவிட்டுப் போய்விட்டார்.

அந்தப் பெண்மணி ஒரு கல்லூரி விரிவுரையாளராம். அவர் லெக்சரை ஆரம்பித்தார். அது பரமக்குடி பட்டிக்காட்டானை முகம் சிவந்து வெட்கப்பட வைத்தது. வரனுக்காக அவர் ஜாதகம்தான் முதலில் என் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாம். பெண் பார்க்க நான் வருவேன் என்று எதிர்பார்த்தபோது, ஏதோ ஜாதகக் குறைபாட்டால் நடக்காமல் போயிற்றாம். நடுக்கத்துடன், அநேகமாக கண்ணீர் விட்டு அழ ஆரம்பிக்கும் நேரம், என் மனையாள் ஒரு கட்டு வாழையிலை எடுக்க உள்ளே வந்தார்.

நான், ‘‘டாய்லெட் எங்கேயிருக்கு?’’ என்று கேட்டபடி அந்த ரூமை விட்டு, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினேன்.சிறிது நேரம் கழித்து என் மனைவியிடம் கேட்டேன்... ‘‘அந்த லூசுப் பொம்பளைகிட்ட என்னை ஏன் மாட்டிவிட்டுப் போனே?’’ என்று! ‘‘பின்ன என்னங்க?

என்னமோ தனக்கு வர வேண்டிய புருஷனை நான் கடத்திக்கிட்டுப் போன மாதிரி பேசுறா? அவ போன் நம்பர் தர்றேன்... ஹோட்டல்ல ரூம் போட்டு போன் போடுங்க... உடனே வந்துருவா!’’‘‘இதை நீ சொல்லலாமா?’’‘‘பின்ன என்னங்க! நீங்க என்ன வைக்கோல் படப்பா... பிடுங்குனா குறைய? சும்மா ஜமாய்ங்க..!’’நான்தான் கோழையாச்சே! பின்ன என்னங்க? என்னமோ தனக்கு வரவேண்டிய புருஷனை நான் கடத்திக்கிட்டுப் போன மாதிரி பேசுறா? அவ போன் நம்பர் தர்றேன்... போன் போடுங்க! உடனே வந்துருவா...

(நீளும்...)

சாருஹாசன்