ஈஸியும் இல்ல... கஷ்டமும் இல்ல! நடிப்பு



ஜி.வி.பிரகாஷ் ஜிலீர்

முன்னே மாதிரி இல்லை ஜி.வி... சார் இப்போ ஹீரோ!முதன்முதலாக ‘டார்லிங்’ இதோ வெள்ளித் திரையைத் தொடக் காத்திருக்கிறது... ‘சின்னத்தம்பி’ போல உருவத்தில் கலைந்த தலையோடு ‘டார்லிங்’கை நிறைவு செய்து இரவு பகலாக விழித்திருக்கிற பிரகாஷ் சிரிக்கிறார். கூச்சமும் பதற்றமும் குறைந்து அழகும், தெளிவும், அக்கறையும் கூடியிருக்கிறது. அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஹீரோவாக இன்னும் பலமாக இறங்குகிறார்!

‘‘பொங்கலுக்கு நம்ம படம் ரிலீஸ். சந்தோஷமா இருக்கு. கொஞ்சம் நடுக்கமாவும் இருக்கு. முதன்முதலாக ‘வெயில்’ வரும்போது நம்ம இசையை எப்படி ரிஸீவ் பண்ணுவாங்களோன்னு ஒரு சின்ன படபடப்பு இருந்தது.

இப்ப அதே மாதிரி முதன்முதலாக நடிக்கிற படத்திற்கு. எவ்வளவோ டைரக்டர்களைப் பார்த்திருக்கோம். பழகி அவர்களிடம் பெற்ற அனுபவங்கள் நிறைய. அவங்க நம்மகிட்டே சொன்ன கதையே படமா மாறி வந்து நிற்கும்போது நமக்கு அதோட வீச்சு தெரியும். குறை, நிறைகள் புலப்படும். அவங்க அனுபவத்தில் நான் கத்துக்கிட்ட தெளிவு இது. இந்தச் சமயத்தில் அவங்க எல்லோரையும் நன்றியோட நினைச்சுப் பார்க்குறேன்!’’

‘‘எப்படி இருக்கு ஹீரோ வேஷம்?’’

‘‘ ‘டார்லிங்’ படத்தில் நடிச்சது சிரமமே இல்லை. ஏற்கனவே, ‘பிரேம கதாசித்திரம்’னு தெலுங்கிலும், கன்னடத்திலும் சக்கைப் போடு போட்ட படம். ரெண்டு கெட்டப்பில் வர்றேன். காதலுக்கு முன்னாடியும், காதல் தோல்விக்குப் பிறகுமான கேரக்டர்ஸ். கதையில் எந்த சிக்கலும் இல்லை. என்னை பேய் பின் தொடர்வதும், அதோடு சிக்கிக்கிட்டு தவிக்கிறதும் ரொம்ப நல்லா இருக்கும். நடிக்கிறதை விடுங்க, இவ்வளவு நாள் அனுபவத்தில் நான் ஒரு பேய்ப் படம் செய்ததில்லை. அட, நாம ஹீரோவா நடிக்கிறதே அப்படி அமைஞ்சு, மியூசிக் பண்ற வாய்ப்பும் கிடைச்சிடுச்சே... அதாங்க எனக்கு பெரிய ஆசீர்வாதம்!’’

‘‘நீங்களே மூன்றாவது மனிதராக நின்னு பார்த்தா எப்படி இருக்கு உங்க நடிப்பு?’’

‘‘நிச்சயமா எனக்குப் பிடிக்குது. கதைக்குத் தேவையான நியாயத்தை செய்திட்டேன்னு நம்பிக்கை இருக்கு. மத்தபடி எல்லாத்தையும் மகாஜனங்கதான் சொல்லணும். அவங்களுக்கு எது சரி, தப்புன்னு எல்லாமே தெரியும். என் மனைவி கொடுத்த உற்சாகம் எனக்கு பெரிய டானிக். அவங்களே மக்களோட உட்கார்ந்து முதல் நாள், முதல் ஷோ பார்க்க ரெடியா இருக்காங்க!’’
‘‘சரி... ஒரு படம் ஆசைக்கு பண்ணிட்டு விடுவீங்கனு பார்த்தா அடுத்தடுத்து புக் ஆகுறீங்க..?’’

‘‘சார், இதையும் கடவுளோட ஆசீர்வாதம்னுதான் சொல்லணும். நான் ‘வெயில்’ பண்ணும்போதே எனக்கு ‘ஓரம்போ’, ‘கிரீடம்’னு படங்கள் வந்தது. இந்தியில விஷால் பரத்வாஜ்தான் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் அங்க பெரிய மியூசிக் டைரக்டரா இருந்துகிட்டே டைரக்ஷனிலும் பின்றார். அவர் படங்கள் திரைக்கு வருகிற நாளை எதிர்பார்க்க பெரிய கூட்டமே இருக்கு. நடிப்பு + இசைங்கறது எனக்கே பெரிய பொறுப்பையும், செய்ய வேண்டிய கடமையையும் உணர்த்துகிறது.

நடிக்கிறதை நான் கஷ்டம்னு நினைக்கலை. அதே நேரத்தில் அது சுலபமானதும் இல்ல. படங்களை ரொம்ப கவனமா தேர்ந்தெடுக்குறேன். என் இயல்புக்கு முடிகிற படங்களைத் தவிர வேற எதையும் ஏத்துக்கறதில்ல. இப்போ ரெண்டு பெரிய கம்பெனிகள்ல இருந்து வாய்ப்புகள் வந்திருக்கு. கதை கேட்டுட்டுத்தான் முடிவு செய்யணும். சார், நான் அவசரப்படல!’’

‘‘அடடா, இரண்டு கதாநாயகிகள்... டூயட் எப்படியிருந்தது?’’
‘‘எங்க யூனிட்டே எங்க ஏஜ் குரூப்தான். இறுக்கமில்லாம, ஜாலியா, பிக்னிக் போற ஸ்டைலில் இருக்கும். நிக்கி கல்ரானி, சிருஷ்டின்னு ரெண்டு பேர். நெருக்கமான காட்சிகள் கூட இருக்கு. ஆனா, எல்லாமே பக்கா டீசன்ட்!’’‘‘இப்படி ஹீரோ ஆகிட்டீங்கன்னா மியூசிக் என்ன ஆகும்?’’

‘‘10 படங்களுக்கு மேல இருக்கு. விஜய், வெற்றிமாறன், அட்லின்னு வரிசை கட்டி நிற்குதே... இசை நம்ம உயிராச்சே! அதை விட்டுட்டு எப்படி இருக்கிறது? நேத்துதான் ‘வெயில்’ வந்த மாதிரி இருக்கு, இதோ என்னோட 50வது படம் வரப்போகுது. அனுபவம் கூடக்கூட மெருகேறுமே... அதுதான் நடந்துகிட்டு இருக்கு. என்னுடைய டைரக்டர்கள் என்னை விட்டுப் போகமாட்டாங்க. அவங்களையும் என்னால கைவிட முடியாது. எந்த வேலைக்கும் இடைஞ்சல் இல்லாம இருக்குறது தான் என் நடிப்பு!’’

‘‘உங்க வயதில் இருக்கிற அனிருத் முத்தம், சத்தம், பார்ட்டி, ஜாலியா வெளிநாடுன்னு பறக்குறார். நீங்க சைலன்ட்டா வேலையைப் பார்க்குறீங்க..?’’
‘‘நான் எனக்குத் தெரிஞ்சதை செய்திட்டு இருக்கேன். அடுத்தவங்க என்ன செய்றாங்கன்னு பார்க்கிறதே கிடையாதே. அப்படி பார்த்துக்கிட்டு இருந்தா அதுவே வேலையாகிடும். நடிப்பு, இசைன்னு நம்ம கேரியர் படு பிஸியில் போய்க்கிட்டு இருக்கு. இதுல அடுத்தவங்க மேல நமக்கு ஏன் கவனம்?’’

‘‘இப்போ மியூசிக் டைரக்டர்களில் யாரைப் பிடிக்குது?’’‘‘போன வருஷம் வரைக்கும் சந்தோஷ் நாராயணனின் ‘குக்கூ’ பாடல்கள். புதுசா, வேற தினுசில் இருந்தது. இந்த வருஷம் இனிமேல்தான் கேட்கணும்!’’

- நா.கதிர்வேலன்