துரைராசன் பெரும் பணக்காரர். தன் பணக்கார நண்பர்களோடு கடற்கரையில் ‘வாக்கிங்’ போய்க்கொண்டிருந்தார்.‘‘இருபது வருஷத்துக்கு முன்னாடி சைதாப்பேட்டையில வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கின நிலம்... இப்போ பத்து கோடிக்கு போகுது! கோயம்பேடு கிட்ட அப்போ பதினஞ்சாயிரத்துக்கு ரெண்டு பிளாட் வாங்கினேன். இப்போ எத்தனை கோடி வேணும்னாலும் கொடுத்து வாங்க போட்டி போடறாங்க..!’’ - துரைராசன் சொன்னார்.

அவர் நண்பரும் விடவில்லை.‘‘நான் போரூர்ல முப்பது வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஏக்கர் இருபத்தைஞ்சாயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். இப்போ அம்பது கோடிக்கு அதை வாங்கி
ஃபிளாட்ஸ் கட்ட ரியல் எஸ்டேட் கம்பெனிகள் மோதுது!’’ என்றார் அவர்.அந்தச் சாலையோரம்... ஒரு டீக்கடை முன்பு சில பெருசுகள் உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தன.
‘‘எம்பொண்ணு கல்யாணத்துக்காக இருபது வருஷத்துக்கு முன்னாடி வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு சைதாப்பேட்டையில ஒரு காலி மனையை வித்துட்டேம்பா... இன்னைக்கு அது பத்து கோடி பெறும்!’’ - ஒருவர் சொன்னார்.
‘‘நானும் எங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லைனு ஒரு ஏக்கர் நிலத்தை இருபத்தஞ்சாயிரத்துக்குக் கொடுத்தேன். இன்னைக்கு டீ சாப்பிட காசில்லாம தவிக்கிறேன். இப்ப அது இருந்தா அம்பது கோடி!’’ என்றார் இன்னொருவர்.இந்த இரு வர்க்கமும் பேசிக்கொள்ள வாய்ப்பே இல்லை!
நா.கோகிலன்