குட்டிச்சுவர் சிந்தனைகள்



வெல்கம் டு குட்டிச்சுவர் நாயா? பேயா? தமிழகத்தின் நம்பர் ஒன் டாக் ஷோ... 200 வருஷத்துக்கு முன்னால அறிமுகமான பிரியாணில கூட மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, வான்கோழி பிரியாணின்னு ஆயிரம் வகை இருக்கு.

 ஆனா, 2000 வருஷமா இருக்கிற பொங்கல்ல வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல்னு ரெண்டே வகைதான் இருக்கு. பொங்கல்ல வேற என்னென்ன வகை செய்யலாம்? பொங்கலுக்கு என்னென்ன செய்யலாம்? பொங்கலை எப்படிக் கொண்டாடலாம்? வாங்க, பேசலாம்... முதல்ல ‘தல’ சார்...

‘‘சார், பொங்கல்ல வேற என்ன வெரைட்டி கொண்டு வரலாம், சொல்லுங்க?’’‘‘உடம்புல கை இருக்கும், கால் இருக்கும், கண் இருக்கும், மூக்கு இருக்கும், தலை இருக்கும், வாய் இருக்கும்... ஆனா, உயிர் இருக்காது!’’‘‘என்ன சார், கசாப்பு கடைக்காரர் கறி விக்கிற மாதிரி பேசறீங்க..?’’‘‘ஏய், இப்படிக் கேட்டா நான் பேஸ்மாட்டேன்... நான் சொல்றது, இப்படி கை, கால், தலை இருக்கிற குறும்பாடா வாங்கி பிரியாணி செய்யணும்னு... அதுதூதூதூ!’’

‘‘வாவ், பிரியாணி பொங்கல்... கேட்கவே செமையா இருக்கு. நீங்க ஷூட்டிங் ஸ்பாட்ல செஞ்சீங்களா?’’‘‘இல்ல, அத்திப்பட்டில.. அத்திப்பட்டி தெரியுமா உனக்கு?’’‘‘எனக்கு வத்திப்பெட்டிதான் தெரியும். அய்யய்யோ, அண்ணன் கோட்டு போட்டுக்கிட்டு கோர்ட் சீனுக்கு ரெடியாகுறாரே... மைக்க வம்பரசன்கிட்ட கொடுங்க... சொல்லுங்க, வம்பு, பொங்கல்னு சொன்னா, உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும்?’’‘‘தீபாவளி அன்னைக்கு பொங்கல் திங்கலாம்... பொங்கல் அன்னைக்கு தீபாவளி திங்க முடியாது!’’

‘‘ரொம்ப பழைய ஜோக்கா இருக்கே தம்பி...’’‘‘யாரு மொதல்ல ஜோக் சொல்றாங்கங்கிறது முக்கியமில்ல, கடைசியா யாரு ஜோக்குக்கு சிரிச்சாங்கங்கிறதும் முக்கியமில்ல, முதல் ஜோக்க கடைசியா யாரு சொல்றாங்களோ அதுக்கு முதல்ல யாரு சிரிச்சாங்களோ அதுதான் முக்கியம்!’’‘‘ ‘ஆந்தைக்கு ராத்திரி கண்ணு தெரியாதுன்னு எனக்குத் தெரியும், ஆனா எனக்கு இது தெரியும்னு ஆந்தைக்குத் தெரியாது’ங்கிற ரேஞ்சுலயே பேசறீங்களே தம்பி... மைக்க பஞ்சர்பச்சான்ட கொடுங்க... சொல்லுங்க பஞ்சர், பொங்கலை எப்படிக் கொண்டாடலாம்?’’

‘‘ஊரு மாதிரியாய்யா இருக்கு? எல்லாம் நாறிப் போய்க் கிடக்கு... ரஜினி, கமல் படம் போட்ட பொங்கல் வாழ்த்துகளை அனுப்பிக்கிட்டு இருந்த தமிழனுங்க இப்ப ‘ஹேப்பி பொங்கல், கேப்பி பொங்கல்’னு குறுந்தகவல் அனுப்புறானுங்க. ஜல்லிக்கட்டு, சிலம்பாட்டம்னு வீர விளையாட்டுகளை விளையாடிய தமிழ் பரம்பரை, இப்ப அந்த ரெண்டு படத்தையும் டி.வில பார்த்துக்கிட்டு இருக்கு. எடுக்கிறேன், தமிழர்களுக்கு தன்மானம் ஊட்டவே, சும்மா பிச்சுக்கிட்டு ஓடுற மாதிரி, ‘எச்சி தொட்டு ஒட்டிய ஸ்டாம்ப்’னு ஒரு படம் எடுக்கிறேன். நம்ம பாரம்பரிய உணவு கேப்ப களிய்யா! ஆனா, இப்ப...’’

‘‘இளைய தளபதி சார், மைக்க பஞ்சர்கிட்ட இருந்து புடுங்குங்க... கொஞ்ச நேரம் விட்டா, டிஞ்சர எடுத்து மூக்குல ஊத்திடுவாரு பஞ்சர் அண்ணன்... என்ன வகையான தமிழ்ச் சமூகத்தில் வாழ்கிறோம்..?’’‘‘வணக்கங்ணா...

நீ தின்னது போக மிச்சம் இருக்கிற பொங்கல் உன்னுதில்ல...’’‘‘எனக்கு கொஞ்சம் பொங்கல் வேணும்னு கூச்சப்படாம கேளுங்க சார்... அதை விட்டுட்டு நெஞ்சு எரியற மாதிரி பன்ச் பேசறீங்க..? புசிகுமார் சார், பொங்கலைப் பத்தி உங்க கருத்து என்ன?’’‘‘பொங்கல செஞ்சது பொண்டாட்டியா இருந்தா, தின்னுட்டு செத்தாக்கூட வெளிய சொல்லக்கூடாது...’’

‘‘சூப்பர் சார், உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு... ஆமா, அங்க என்னய்யா ஒரே காட்டுக் கத்தலா இருக்கு? ஓ, குஷால் சாரா? சார் ஹேப்பி பொங்கல்...’’
‘‘டேய், நான்தான்டா வாசு... நான் வருவேன்டா...’’

‘‘நீங்க எப்ப வேணாலும் வாங்க... ஆனா, பொங்கல் மிச்சம் இருந்தாதான் கொடுப்போம்!’’‘‘பாசமா பேசுனாலே பொளந்து கட்டுவேன்.... நீங்க பந்தயம் வேற கட்டியிருக்கீங்க...’’
‘‘சக்கரை பொங்கல் கிடைக்கலன்னு சார் உக்கிரமா இருக்கார் போல, மைக்க அப்படியே தாடியார்கிட்ட கொடுங்க...’’‘‘தங்கச்சி, ஆம்பள தப்பு செஞ்சா அது ஆறிப் போன பூரி மாதிரி. ‘ஐ ஆம் வெரி சாரி’ சொல்லிட்டுப் போயிடலாம். அதுவே பொம்பள தப்பு செஞ்சா, குழைஞ்சு போன பொங்கல் மாதிரி. சாப்பிட்டா பசிக்காது, ஆனா சாப்பிட்டது செரிக்காது... நீ சின்ன வயசில என்கிட்டே பொங்கல் கேட்ப... அண்ணன்கிட்ட காசு இருக்காது. அப்ப உப்புமாவ கிண்டி உன் வாயிலயே அப்புவேன். ஆனா நீ என் மூஞ்சிலயே துப்புவ... தங்கச்சி, நீ...’’

‘‘அய்யய்யோ, கரன்ட் அடுப்புல விறக சொருகுறாரே, மைக்க புடுங்குங்க... ஏங்க குந்தானம், நீங்க சொல்லுங்க! பொங்கல்னா என்ன இருக்கணும், என்ன இருக்கக் கூடாது?’’
‘‘ஐ டோன்ட் நோ ஒய், ஐ ஆல்வேஸ் டெல் பொய்... பொங்கல்னா அதுல சுகர் இருக்கணும், பொங்கல வைக்க ஒரு ஃபிகர் இருக்கணும்...

அந்த ஃபிகர கரெக்ட் பண்ண நம்ம கைல ரோஸ் இருக்கணும், பொங்கலுக்கு அடுத்த நாள் ரேக்ளா ரேஸ் இருக்கணும்... காளைய அடக்க நெஞ்சுல வீரமும் இருக்கணும்... அதே சமயம் சேலைய கண்டா நெஞ்சுல ஈரமும் இருக்கணும். பை த பை, சுகர் இல்லாம கூட பொங்கல் இருக்கலாம்... ஆனா ஃபிகர் டொங்கலா இருக்கக் கூடாது.’’

‘‘பிரமாதம் ப்ரோ... கலக்கிட்டீங்க... அப்படியே மைக்க பரோட்டா கீரிகிட்ட கொடுங்க... சொல்லுங்க கீரி, இந்தப் பொங்கலுக்கு என்ன செய்யப் போறீங்க?’’‘‘எல்லா படத்துலயும் ஒரே லுங்கில வர்றேன். அதான் இந்த போகிக்கு என் பழைய லுங்கியை எல்லாம் எரிச்சுட்டு, புது லுங்கி 4 வாங்கிப் போடலாம்னு ப்ளான்!’’‘‘அதெல்லாம் கிடக்கட்டும் ஜி, எப்ப காமெடி பண்ணப் போறீங்க?’’

‘‘பொங்கல தின்னுட்டு விக்கல் விடலாம், நக்கல் விடக்கூடாது...’’ இன்னமும் கொஞ்ச நேரம் நிகழ்ச்சி போச்சுன்னா, பொங்கலுக்கு பதிலா செங்கல் வந்திடும்... வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் பொங்கல் நல்வாழ்த்துகள்!       

ஆல்தோட்ட பூபதி