சீஸன் சாரல்



பாபனாசம் அசோக்ரமணி

நாரத கான சபையில் பாம்பே ஜெயஸ்ரீ கச்சேரி. சபை நிறைந்த கச்சேரியில், எம்பார் கண்ணன் வயலின், பத்ரி சதீஷ்குமார் மிருதங்கம், அனிருத் கஞ்சிரா. கச்சேரி ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் துல்லியமாக ஸ்ருதி சேர்ந்த ஜெயஸ்ரீயின் குரல், ரசிகர்களைக் கட்டிப் போட்டது. பகவாரி வர்ணம், ஹம்ஸத்வனி ராகத்தில் கே.வி.என். பாடிக் கேட்டது. ரொம்ப நாளைக்குப் பிறகு ஜெயஸ்ரீ பாடியது கேட்க முடிந்தது.

‘ராகஸுதா’ என்ற ஆந்தோளிகா ராக கீர்த்தனையை விறுவிறுவென்று பாடிய ஜெயஸ்ரீயின் குரலுக்கு பத்ரியின் நாதமான மிருதங்கம் ரொம்ப எடுப்பு. ஸாவேரியில் ‘சங்கரி சங்குரு’ கீர்த்தனை மிளிர்ந்தது. சங்கராபரணம் ராகத்தை ஜெயஸ்ரீ அழகாக சங்கதிகளைப் பிரித்துக் கொடுக்க, கண்ணன் வயலினில் சேர்த்து அர்ப்பணம் செய்தார். ‘சங்கராசார்யம்’ கீர்த்தனை அழகோ அழகு. தனியில் பத்ரியும், அனிருத்தும் வாசித்ததில் அரங்கம் அதிர்ந்தது.

இரண்டு ராக பல்லவி... ஷண்முகப்ரியா, சாம ராகத்தில்! ‘ஷண்முகப்ரிய ஜனனி ச்யாமளே சிவே கௌரி சிதாநந்த ரூபிணி’ என்று ராகம் பெயர் வரும்படி அடதாளத் தில் ஜெயஸ்ரீ பாடியது, சீஸன் ஹைலைட். இந்த மாதிரி அந்தக் காலத்தில் ‘சங்கராபரணனை அழைத்தோடி வாடி கல்யாணி, தர்பாருக்கு’ என்ற நாலு ராக பல்லவி ரொம்பப் பிரஸித்தம். ஜெயஸ்ரீ கச்சேரியிலும், ராகம் தானம் பல்லவி ரொம்ப ஸ்பெஷல். அருமையான கச்சேரி கேட்ட திருப்தியில் ரசிகர்கள் நேரே ஞானாம்பிகை கேன்டீனில் நுழைந்தார்கள்.

ரொம்ப நாளைக்குப் பிறகு ராணி சீதை ஹாலில் கலாரசனா கச்சேரி. புதுப்பிக்கப்பட்ட அந்த ஹாலில் உன்னிகிருஷ்ணன் கச்சேரி கேட்க பேரானந்தம்தான். கலாரசனா சபைக்கு உன்னி தொடர்ந்து 22 வருடங்களுக்கு மேலாக, அதே பக்கவாத்தியக் கலைஞர்களுடன் பாடுவது சிறப்பு. விட்டல் ராமமூர்த்தி வயலின், அருண்பிரகாஷ் மிருதங்கம், கார்த்திக் கடம். நாட்டையில் ‘ஸரஸிஜநாப’ வர்ணம் முதலில். பிறகு, ‘பரமபுருஷ’ என்ற வஸந்தா ராக ஸ்வாதி திருநாள் கீர்த்தனை விறுவிறுவென்று களை கட்டியது. உன்னிக்கென்று பிறந்த ராகம் கல்யாண வசந்தம்.

‘கான முன்சி’ என்ற டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா கீர்த்தனை ரொம்பப் பிரசித்தம். அதை உன்னி பாடியது சிறப்பு. வயலினில் விட்டல் வாசித்த ராகத்தில் அரங்கமே வசந்தத்தில் குளிர்ந்தது. அருண்பிரகாஷ் மிருதங்கம் கூடவே பாடியது.

 ‘பரமாத்முடு’, ‘சபாபதிக்கு’ போன்ற பாடல்கள் கச்சேரியின் தரத்தை உயர்த்தின. ஷண்முகப்ரியா ராகம், தானம், பல்லவி. ‘காவா வேலவா ஷண்முகா பழனிமலை உறையும் முருகா’ என்ற கீர்த்தனை அடியைப் பல்லவியாக அமைத்துப் பாடி, ராகமாலிகையில் வராளி, பஹுதாரி என்று கலக்கினார் உன்னி.

அருண் - கார்த்திக் கூட்டணி ஓஹோ!மியூஸிக் அகாடமியில் அம்ருதா முரளி பாட்டு. அலட்டல் இல்லாத, சுத்தமான ஒரு சங்கீதம். குரலில் ஒரு நளினம், இனிமை. நம்பிக்கை நட்சத்திரமேதான். வயலின் கணேஷ் பிரசாத், மிருதங்கம் மன்னார்கோவில் பாலாஜி, கஞ்சிரா நெற்குணம் சங்கர். ‘உண்டேதி ராமுடு’, ‘தேவதேவ’ பூர்வி கல்யாணி, ‘ஷீணமை’ முகாரி என்று ரத்தினங்களான கீர்த்தனைகளை அம்ருதா பாடியது விசேஷம். அன்றைக்கு அம்ருதா பாடிய விசேஷ பல்லவியைப் பாராட்ட வேண்டும். இரண்டு ராகத்தில் சங்கராபரணம், வராளி ராகங்களில் பாடியது அம்ருதா வின் புலமையை வெளிப்படுத்தியது.

அபிஷேக் ரகுராம் கச்சேரி, நாரத கான சபையில். கந்தர்வ கானம் என்றால் அபிஷேக் குரல்தான். ரசிகர்கள் படையெடுத்து வருகிறார்கள் அவர் கச்சேரிக்கு. பரம்பரை சங்கீதம் ஒசத்திதான். இவர் கற்பனையே அலாதிதான். ராகத்தை அலசி, ஆய்ந்து, அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் பாடும் அலாதி திறமை இந்த இளம் வயதிலேயே! பந்துவராளி ராகம், பைரவி ராகம்-அன்று கேட்ட ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

பந்துவராளி ராகத்தில் ஒவ்வொரு சங்கதியையும் அவர் பாட, மைசூர் நாகராஜ் அதை வயலினில் திருப்பி வாசிக்க, இப்படி ஒரு கச்சேரியா? என்ன சுநாதம் நாகராஜ் வயலின் வாசிப்பில்! அனந்தகிருஷ்ணன் மிருதங்கத்தில் ஓர் அசகாய சூரர். அவர் கையில் பேசாத சொற்களே இல்லை. ‘பால கோபால’ கீர்த்தனையைப் பாடி தனி முடித்தபோது, இரண்டரை மணி நேரம் எப்படிப் போனது என்று தெரியவில்லை. இதுதான் கச்சேரி.

கர்நாடக இசை உலகில் இளம் கலைஞர்கள் பலர் சாதித்து வருகின்றனர். பல சபாக்களில் அவர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகிறது. பரத் சுந்தர், சந்தீப் நாராயணன், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் என்று பல இளம் நட்சத்திரங்கள். சிவன் ஃபைன் ஆர்ட்ஸ் ஆதரவில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சாரதா கார்த்திக் கச்சேரி.

நல்ல குரல், பாடாந்திரம் என்று பல ப்ளஸ் பாயின்ட்ஸ். ‘கஜவதனா’, ‘ஸ்ரீசங்கர’ என்ற நாகாஸ்வராளி பாடல், ‘மஹாலக்ஷ்மி’ என்ற சங்கராபரணப் பாடல் என இசை மழை பொழிந்த இவருக்கு, ஸ்ரீவித்யா ஆர்.எஸ்.ஐயர் வயலின், ஸ்ரீராம் ப்ருமானந்தம் - அருண் ஸ்ரீராம் இரு மிருதங்கம்- சுத்தமான ராஜப்பையர் பாணி! அமர்க்களமான கை... இந்த தந்தை - மகன் மிருதங்க ஜோடி!

அதே சபையில் இளம் கலைஞர் மானஸா சுரேஷ், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அருமையான குரலில் ரசிகர்களைக் கொள்ளை கொண்டார். ‘ஸரஸீருஹாஸன’, ‘ஜானகி ரமண’, லதாங்கி ராகத்தில் ‘மறிவேற’, காம்போதி ராகத்தில் ‘காண கண் கோடி’ என கீர்த்தனைகளைப் பாடி இசைப் பந்தல் போட்டார். நிச்சயமாக இசை உலகில் இவருக்கு ஓர் இடம் உண்டு. விஜய் வயலின், அக்ஷய் மிருதங்கம் அருமை.

பாபனாசம் அசோக்ரமணி
படங்கள்: புதூர் சரவணன்