சின்ன வீடு



‘‘இது டபுள் பெட்ரூம் இருக்கற வீடு சார். அடுத்தது பெரிசா சிங்கிள் பெட்ரூம் மட்டும் இருக்கிற கொஞ்சம் சின்ன வீடு. ரெண்டுத்துக்கும் ஒரே வாடகைதான். எதை வேணும்னாலும் எடுத்துக்கங்க’’ என்றார் வீட்டு உரிமையாளர்.துளசியும் கௌதமும் இரண்டு வீடுகளையும் பார்த்தனர். இரண்டும் ஒரே மாதிரி கட்டப்பட்ட புது வீடுகள். ஒன்றில் மட்டும் கூடுதலாக ஒரு பெட்ரூம்.

‘‘துளசி, சின்னதுக்கும் பெருசுக்கும் ஒரே வாடகைதானாம். காசுக்கு ஆசைப்படாத ஹவுஸ் ஓனர். நாம முதல்ல வந்தது அதிர்ஷ்டம். பெரிய வீட்டையே நாம எடுத்துக்கலாம்தானே?’’ என்று கௌதம் கேட்க, ‘‘நோ!’’ என்றாள் துளசி.

‘‘நாம சின்னதையே எடுத்துக்கலாம்ங்க!’’ கௌதம் குழம்பினான். துளசி அவன் காதில் கிசுகிசுத்தாள். ‘‘இதப் பாருங்க... எக்ஸ்ட்ரா ரூம் ஒண்ணு இருக்குன்னா வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்க நம்ம வீட்லயே தங்கி, ஊரைச் சுத்திப் பார்த்து, ரெண்டு மூணு நாள் கழிச்சுத்தான் கிளம்புவாங்க.

அவங்களுக்குச் செலவழிக்க முடியாம நமக்கு முழி பிதுங்கிடும். தங்க வசதியில்லாத சின்ன வீடா இருந்தா, வந்தோமா போனோமான்னு இருப்பாங்க. விலைவாசி ஏறிக் கெடக்கிற இந்தக் காலத்தில நாமளும் புத்திசாலித்தனமாப் பொழைக்கணும்ல..?’’அவளை ஆமோதிப்பது போல் கௌதம் புன்னகைத்தான்!

சுபமி