
தமிழ்நாடு முழுக்க சுமார் 3,500 வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். ஒரே ஒரு எழுத்துத் தேர்வுதான். அதில் வெற்றி பெறுபவர்கள் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு பணியில் சேர்ந்து விடலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலேயே குரூப் 4 தேர்வுதான் மிக ஈஸியானது என்று சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு சுலபத் தேர்வுதான் இந்த வேலைக்கும். கேள்வித்தாள்கள் பத்தாம் வகுப்புத் தரத்துடன் இருக்கும் இத்தேர்வுக்கு எஸ்.எஸ்.எல்.சியிலிருந்து பி.இ. முடித்தவர்கள் வரை சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பம் போட்டிருக்கிறார்கள்!
இன்ஜினியரிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கும் அளவுக்கு அத்தனை முக்கியமானதா கிராம நிர்வாக அலுவலர் பதவி?''கர்ணம்னு இருந்த பதவியை எடுத்துட்டுத்தான், அதுக்கு பதிலா 'கிராம நிர்வாக அலுவலர்’ன்னு கொண்டு வந்தாங்க. குரூப் 4 தேர்ச்சி பெறுபவர்கள் பல்வேறு துறைகளில் கிளார்க் என்னும் நிலையில்தான் பணியமர்த்தப்படுவார்கள். ஆனால், எஸ்.எஸ்.எல்.சி.யை அடிப்படையா வச்சு நடத்தப்படற இந்தத் தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள் அதிகாரிகள் (ஆபீசர்ஸ்) என அழைக்கப்படுவதிலிருந்தே இதன் பெருமையை அறியலாம்.
ஒரு முழுக்கிராமத்தின் (ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்கள்கூட) நிர்வாகப் பொறுப்பு இவர்களிடம்தான். பிறப்பு, இருப்பிடம், சாதி, வருமானச்சான்றிதழ் போன்ற எந்த அடிப்படை ஆதாரத்துக்கும் முதல் தேவை வி.ஏ.ஓ. கையெழுத்துதான். கிராமத்தின் அரசு, தனியார் நிலங்கள், அவற்றுக்குரிய பட்டா, அடங்கல், ‘அ’ பதிவேடு போன்ற சகல ரெகார்டுகளும் இவர் வசம்தான். மாவட்டத்துக்கு ஆட்சித்தலைவர் போல இவங்க கிராமத்துக் கலெக்டர்கள்!’’ என்கிறார் கர்ணமாக பதவியேற்று வி.ஏ.ஓ.வாக ஓய்வுபெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மயில்.
சரி... பிப்ரவரி 20ம் தேதி நடக்கும் தேர்வுக்குப் போகலாமா?இரண்டு பகுதிகளைக் கொண்ட ஒரே தேர்வுத்தாள். பொது அறிவிலிருந்து 100 கேள்விகளையும் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் (இந்தப்பாடம் அவரவர் விருப்பம்) 100 கேள்விகளையும் கொண்டது இது. மற்ற சில போட்டித்தேர்வுகளைப் போல ‘தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைத்தல்’ இதில் கிடையாது. ஒரு சரியான பதிலுக்கு ஒன்றரை மதிப்பெண் வழங்கப்படுகிற இந்தத் தேர்வுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் கால அளவு 3 மணி நேரம்.
‘‘பொதுவாவே டி.என்.பி.எஸ்.சி யோட எல்லாத் தேர்வுகளுக்குமே பதில்களைத் தேர்ந்தெடுக்க போதுமான நேரம் கிடைக்குது. தேர்வுக்குரிய விளம்பரம் அறிவிக்கப்பட்ட நாள்ல இருந்து தொடங்குனாக்கூட சரியான திட்டமிடல் இருந்தா சுலபமா ஜெயிக்கலாம். தயார் பண்ண வேண்டிய பகுதின்னு பார்த்தா பொது அறிவு மட்டும்தான்’’ என்கிறார் சென்னை அண்ணா நகரில் செயல்படும் தனியார் பயிற்சி மையத்தின் இயக்குனர் சங்கர்.
பொது அறிவில் கேள்விகள் எப்படி வருகின்றன? 20 முதல் 25 கேள்விகள் அதாவது நான்கில் ஒரு பங்கு & பொது அறிவியல் பகுதியிலிருந்து கேட்கப்படுகின்றன. உயிரியல், வேதியியல், இயற்பியலில் இருந்தே இந்தக் கேள்விகள். உயிரியலில் மனித உடல், நோய் பற்றிய கேள்விகள் அதிகம் வருகின்றன. வேதியியலில் அமிலங்களின் வேதிப்பெயர்கள், வாய்ப்பாடு போன்றவற்றைக் கேட்கிறார்கள். இயற்பியலில் விசை, அழுத்தம். நெம்புகோல் போன்றவை பற்றி.
இந்திய வரலாறு பகுதியில் சுதந்திரத்துக்கு முன் நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் பற்றி கேட்கப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய,
பல்லவர் போன்ற தமிழ்நாடு தொடர்புடைய விஷயங்களில் கூடுதலான கேள்விகள் வரலாம்.
அடுத்து, நடப்பு நிகழ்வுகள் குறித்த கேள்விகள். தொடர்ந்து பத்திரிகைகளைப் படித்து வந்தாலே இந்தப் பகுதிக்குப் பதில் சொல்லிவிடலாம்!
அரசியலில் நாடாளுமன்றம், சட்டமன்றம், அரசியலமைப்புச் சட்டங்கள், திருத்தங்கள், கட்சிகள், தேர்தல்கள் போன்றவற்றிலிருந்து.
புவியியலில் நாட்டிலுள்ள ஆறுகள், நதிகள், சிகரங்களின் அமைவிடம், எல்லைகள், உற்பத்திப் பொருட்கள், கிடைக்கும் கனிமங்கள் பற்றிய விபரங்கள்.
இறுதிப் பகுதியாக புத்திக்கூர்மையைச் சோதிக்கும் சில வினாக்கள். இதற்கு மட்டும்தான் நேரம் அதிகம் தேவை. பொறுமையாகச் சிந்தித்தால் எதிர்கொள்ளலாம். (உதாரணத்துக்கு... ‘உனது தம்பி உனது அப்பாவின் மகளுக்கு என்ன வேணும்’ என்பது போன்ற கேள்விகள்!)
சொற்பமான எண்ணிக்கையில் இந்திய விடுதலைப் போராட்டம், பொருளாதாரம் மற்றும் வணிகப் பகுதிகளிலிருந்தும் கேட்கப்படுகின்றன.
‘‘மொத்த பாடங்களையும் பார்த்தால் ஏதோ நிறையப் படிக்கணும் போலன்னு தோணும். சிம்பிளாச் சொன்னா, நாலு விஷயங்களை ஒழுங்கா பண்ணிட்டாலே வெற்றியோட 80 சதவீதத்தை நெருங்கிடலாம். முதல்ல, ஆறாவதுல இருந்து பத்தாம் வகுப்பு வரையான தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தோட அறிவியல், சமூக அறிவியல் புத்தகங்களை முழுசா அலசணும். அடுத்து டி.என்.பி.எஸ்.சியோட பழைய கேள்வித்தாள். அஞ்சு வருஷக் கேள்வித்தாள் போதும். எல்லா கைடுகள்லயும் வெளியிடுறாங்க. அடுத்து விடைகளைப் போட்டுப் பார்த்துப் பயிற்சி பெற ஏதாவதொரு கைடு வாங்கிக்கலாம். கடைசியா செய்தித்தாள்கள். விளம்பரம் வெளியிட்ட நாளிலிருந்து முக்கியச் செய்திகளைச் சேகரித்து வைத்தால் நிச்சயமா பலன் தரும். அரசுப் பாடத்திட்டத்தையும் முந்தைய கேள்வித்தாள்களையும் மையமா வச்சே எப்போதும் கேள்வித்தாள் தயாராகுது’’ என்கிறார் சங்கர்.
பொது அறிவுத்தாளை திருப்தியாக முடித்தாலே பாதிக் கிணறு தாண்டிய மாதிரிதான் என்கிறார்கள். அடுத்த பகுதியான பொதுத்தமிழும் பொது ஆங்கிலமும் பப்ளிக் தேர்வில் மாணவர்கள் போடுவார்களே... அதுமாதிரி சதம் போடக்கூடிய பகுதிகளாம். அந்த வித்தை அடுத்த வாரம்!
ஜெயிச்சவங்க சொல்றாங்க!‘‘போட்டித்தேர்வுகள் எழுதி வேலைக்குப் போறதுன்னு முடிவு பண்ணிட்டா சின்சியரான பயிற்சி இருந்தா போதும். ராப்பகலாப் படிக்கணும்னு எல்லாம் இல்ல. பொது அறிவுப் பகுதிக்கு தயாராகறதுக்கு, வாசிக்கிற பழக்கத்தைக் கொண்டு வரணும். கண்டதையும் படிக்கணும். கடலை வாங்கறபோது மடிச்சுக் கொடுக்கிற பேப்பர்ல கூட நமக்குத் தேவைப்படற தகவல் ஏதாவது இருக்கும். படிச்ச பொது அறிவுத் தகவல்களை, நம்மோட சேர்ந்து தேர்வுக்குத் தயாராகிற நண்பர்களோட அடிக்கடி குரூப் டிஸ்கஷன் நடத்தி பகிர்ந்துக்கலாம். நண்பர்களோட அரட்டைங்கற விஷயத்தைக்கூட இப்படி ஆரோக்கியமானதா மாத்தலாம். டச் விடாம முயற்சி பண்ணிட்டிருந்தா கண்டிப்பா ஜெயிக்கலாம்’’ என்கிறார் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வில் (எஸ்.எஸ்.சி) வெற்றி பெற்று மத்திய கணக்குத் தணிக்கைத் துறையில் பணியாற்றும் செந்தில்குமார்.
தொகுப்பு:
அய்யனார் ராஜன்