பங்குச் சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க



        Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine         'சிவாஜி’ படத்தில் இடைவேளையின்போது விவேக்கிடம் ரஜினி பேசும் வசனம் ஒன்று முக்கியமானது...

‘இயற்கையோ, இறைவனோ... என்னுடைய பாதையை இந்தக் காசு தீர்மானிக்கட்டும். காசைச் சுண்டிவிடுகிறேன். தலைவிழுந்தால்  சிங்கப்பாதை... பூ விழுந்தால் பூப்பாதை!’ என்ற அந்த வசனத்தை கொஞ்சம் உல்டா பண்ணிப் போட்டால் பங்குச் சந்தைக்கு அப்படியே பொருந்திவிடும்.

பங்குச் சந்தையும் நாணயம் போன்றதுதான்... அதற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒன்று பாசிட்டிவாக செல்லும் காளைப் பாதை. அடுத்தது, காலைப் பிடித்து இழுக்கும் கரடிப் பாதை! ‘அது என்ன மனிதர்கள் புழங்கும் சந்தையின் ஏற்ற இறக்கக் குறியீடுகளாக காளை, கரடி என்று விலங்குகள் இருக்கின்றன’ என்ற கேள்வி உங்களுக்குள் அவ்வப்போது வந்து வந்து அடங்கியிருக்கும்.

இரண்டுமே குறியீடுகளான விஷயங்கள்தான். பொதுவாக வீரத்துக்கும் வேகத்துக்கும் அடையாளம்தானே காளை. சந்தையும் அதேபோன்ற வேகத்தோடு இருக்கும்போது ஏற்றம் பெறுகிறது அல்லவா... அதனால்தான் ஏறுமுகத்தில், ‘காளையின் பிடியில் இருக்கும் சந்தை’ என்று சொல்கிறோம். கரடியின் கதையும் இப்படி வந்ததுதான். எதைப் பிடித்தாலும், விடாமல் இறுகப் பற்றிக் கொள்வது கரடியின் குணம். சந்தையின் சரிவும் அப்படித்தான்... லேசாக ஏற்படும் சரிவுகூட அப்படியே எளிதாகச் செல்லாது. தொடர்ந்து கீழே இழுத்து சந்தையில் பெரிய சேதத்தை உண்டாக்கிவிட்டுத்தான் செல்லும்.

நம்மிடையே ஒரு பழமொழி உண்டு, ‘பட்டு செத்தவன் பாதி... பயந்து செத்தவன் பாதி’ என்று. அதாவது ஏதோ ஆபத்து ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைக்கு நிகராக, ‘நமக்கும் அப்படி ஆகிவிடுமோ’ என்ற பயத்தால் உயிரை விடுபவர்களின் எண்ணிக்கையும் இருக்கும் என்பார்கள். பங்குச் சந்தை விஷயத்தில் அப்படிப் பயந்தவர்கள்தான் கரடியை உசுப்பிவிடுபவர்கள்.

சரி, காளை , கரடி விளக்கம் இருக்கட்டும்... ‘இப்போது கரடியின் கைகளில் சிக்கிச் சிக்கி மீண்டு கொண்டிருக்கும் சந்தை எப்போது காளைப் பாதைக்குத் திரும்பும்... அதை எப்படி அடையாளம் கண்டுகொள்வது’ என்ற கேள்வியோடுதான் கடந்த இதழ் கட்டுரை முடிந்திருந்தது. அதற்கு இணையான இன்னொரு கேள்வியும் இருக்கிறது. ‘காளைப் பாதையில் ஜெட் வேகத்தில் செல்லும் சந்தை எப்போது கரடியின் கைகளில் சிக்கும்... அதையும் கண்டுகொள்ளமுடிந்தால் சுதாரிப்பாக இருக்கலாமே!’ என்பதுதான் அது.

இந்த இரண்டுக்கும் ஒரே பதில்... ‘அப்படி கோடு போட்ட மாதிரி இந்த நிலைக்குப் பிறகு சந்தை ஏறும் என்றோ சரியும் என்றோ சொல்லமுடியாது’ என்பதுதான்! சந்தைப் பயணம் என்பது கிட்டத்தட்ட ரயில் பயணம் போன்றது. ரயிலில் பயணிக்கும்போது அதன் வேகத்தில் ஏற்படும் மாற்றத்தை வைத்து ரயில் அடுத்த ஸ்டேஷனை நெருங்குகிறது. இன்னும்
பத்து நிமிடங்களில் ஸ்டேஷனை அடைந்துவிடும் என்பதைக் கணக்கிடமுடியும். அதையே, இன்னொரு கோணத்தில் ஓர் உதாரணத்தோடு பார்க்கலாம். பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் செல்ல வேண்டிய ஊர் கொடைக்கானல் என்றால், கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும்.

பாண்டியன் எக்ஸ்பிரஸ் சுமாராக அதிகாலை ஐந்து மணியை ஒட்டி கொடைரோட்டுக்குச் செல்லும். எனவே, திண்டுக்கல் தாண்டியதும் விழித்துத் தயாரானால், ஐந்து மணியை ஒட்டி வண்டி தன் வேகத்தைக் குறைக்கும். அப்போது நீங்கள் கொடைரோடு வரப் போகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தன் முழுவேகத்தையும் குறைத்து வண்டி நிற்கும்போது, எட்டிப் பார்த்து ஸ்டேஷனை உறுதிப்படுத்திக் கொண்டு இறங்கிவிடலாம்.

இந்த உதாரணத்தை நம் சந்தைக்குள் போடலாம். சென்செக்ஸ் என்னவாக இருக்கிறது, ஏறுகிறதா... இறங்குகிறதா என்றெல்லாம் கவலைப்படாமல், நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பங்குக்கான இலக்கை மட்டும் நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். அதாவது கொடை ரோடு வந்தால் நாம் இறங்க வேண்டும் என்பது போல, இவ்வளவு லாபம் கிடைத்தால் அந்தப் பங்கை விற்றுவிட வேண்டும் என்ற இலக்கைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

அடுத்து சந்தையைக் கவனித்துக் கொண்டே வாருங்கள்; உங்கள் கடிகாரத்தைக் கவனிப்பதுபோல! ஐந்து மணியாகிறதா என்பதைக் கவனித்துக் கொண்டே வருவது போல, சென்செக்ஸ் அல்லது நிஃப்டி குறியீடு எந்த திசையில் செல்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அதை வைத்துத்தான் நீங்கள் இலக்கை முடிவு செய்யமுடியும்.

ஒருவேளை நீங்கள் ஐந்து மணிக்கு எழுந்து பார்க்கும்போது ரயில் திருச்சியில் நின்றுகொண்டிருந்தால் உங்களால் இலக்கை அடையமுடியாது என்பதைத் தெரிந்து கொள்ள
முடியும். அப்போதே முடிவெடுத்து திண்டுக்கல்லில் இறங்கலாமா அல்லது திருச்சியில் இறங்கி பஸ்ஸைப் பிடிக்கலாமா என்பதைத் தீர்மானிக்கமுடியும்.

நீங்கள் யோசித்த திசையில் செல்லாமல் சந்தை வேறுதிசையில் சென்றால், திட்டமிட்ட இலக்குவரையில் காத்திருக்காமல் வேறு முடிவை எடுக்கமுடியும். அதற்கு சந்தை செல்லும் பாதை பயன்படும். இதுதான் கணக்கு.

இப்போது நம்முடைய ஆதாரமான கேள்விக்கு வரலாம். சந்தை சரிவில் இருக்கும்போது, ஏற்றம் தொடங்கும் புள்ளியை எப்படிக் கண்டுகொள்வது. ரயில் ஸ்டேஷனில் நிற்பதற்காக வேகம் குறையுமே... அதுபோல சந்தையின் சரிவோ ஏற்றமோ நிகழும் வேகம் குறைந்து, ஒருகணம் சந்தை ஒரு புள்ளியில் நிலைகொள்ளும். அதை கவனித்துக் கொண்டிருந்தால் போதும். அடுத்து சந்தை எழும் அல்லது விழும் என்பதைக் கணித்துவிடமுடியும்.

அந்தப் புள்ளியைக் கணிக்க கொஞ்சம் அனுபவமும் டெக்னிகல் அனாலிசிஸ் போன்ற கணக்குகளும் கைகொடுக்கும். அது கைவந்துவிட்டால் நஷ்டப்பட்டு தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார வேண்டியிருக்காது. அதையும் தாண்டி எப்படி லாபம் கொட்ட வைப்பது என்பது பற்றியும் பேசலாம்.
காத்திருங்கள்... சொல்கிறேன்

சி.முருகேஷ்பாபு