‘‘ஒரு சீடனோட வேலை குருநாதருக்கு உண்மையா இருக்கிறது. இறைவனைத் தேடற அடியார்களுக்கு இறைவனே அடியாரா வந்து பணிவிடைகள் செய்த கதைகள் இருக்கு. அந்த வகையில உண்மையானவங்களுக்கு இறைவனே சீடனா இருப்பான்ங்கிற தத்துவத்தை அடிப்படையா வச்சிருக்க கதை இது...’’ என்று ஆரம்பித்தார் தனுஷும், ‘நாடோடிகள்’ அனன்யாவும் நடிக்கும் ‘சீடன்’ இயக்குநர் சுப்ரமணிய சிவா.
‘திருடா திருடி’யில் பாமரனுக்கும் புரிகிற எளிமையான கதை சொல்லி ஊரையே ‘மன்மதராசா...’ என்று குத்தாட்டம் போடவிட்ட சுப்ரமணிய சிவாவுக்கு ஏதும் தீட்சை கிடைத்து விட்டதா என்று தோன்றியது அவர் சொன்ன தத்துவக் கதையைக் கேட்டு. அதை அவரிடமே கேட்டபோது ஒரு தெய்வீகச்சிரிப்பு சிரித்தபடி பேசினார்.
‘‘அது கதைக்கான அடிப்படைத் தத்துவம். மத்தபடி கதை சமூகத்துக்குள்ளேதான் நடக்குது. படத்தில ஹீரோயின் அனன்யா உண்மையுள்ள ஏழைப்பெண்ணா வர்றாங்க. வீட்டுவேலை செய்யற பணிப்பெண்ணுக்கு ஒரு கனவு வந்தா அது எப்படி நிறைவேறும்..? ஏழையோட ஆசையும், ஊமையோட கனவும் ஒண்ணு போலத்தான். அதை அவங்க மனசுக்குள்ளேயே வச்சு மருகணும்ங்கிறதுதான் எதார்த்தம். அப்படியும் அது நிறைவேறணும்னா உண்மையிலேயே இறைவன் நேர்ல வந்தாதான் நடக்கும். அப்படி கதைக்குள்ள வந்து சேர்றார் தனுஷ். கடவுள் மாதிரி வந்து காப்பாத்தினார்னுதான் ஒருத்தரை சுட்டிக்காட்டறோம். கடவுள் வந்து காப்பாத்தினார்னு சொல்றதில்லை. அப்படி வர்றார் தனுஷ்.
இதில தனுஷ் பற்றிச் சொல்லணும். நடிகர்கள் நட்சத்திரங்களா மாறிப்போறதுதான் சினிமா வழக்கம். ஆனா நல்ல கதைகளுக்காக நடிகனா மாறக்கூடிய நட்சத்திரம்னா அது தனுஷ்தான். இந்தக் கதை மேல வச்ச நம்பிக்கையில, அவர் படத்தில இன்டர்வெல்லுக்குதான் என்ட்ரியே கொடுக்கிறார். அவர் என்ட்ரி கொடுக்கிறவரை ‘கிளாஸா’ போய்க்கிட்டிருக்க கதை, அவர் உள்ளே வந்தபிறகு ‘மாஸ்’ படமா மாறிடும். அதோட படத்தில சமையல்காரரா தனுஷ் வர்றார். அதனால தனக்கு வேட்டியும், சட்டையும் மட்டும் போதும்னு சொல்லிட்டார். படத்தில அவருக்கான மொத்த காஸ்ட்யூம் செலவே அஞ்சாயிரம் ரூபாதான். அதோட இயல்பா வந்ததால, மேக்கப் செலவும் அவருக்கு இல்லவேயில்லை. இப்படியெல்லாம் நடிக்க ஒத்துக்கிட்ட ஒரே நடிகன் தனுஷாதான் இருப்பார்.
சரவணன்ங்கிற
சமையல்காரரா வர்ற அவர், படத்தில செய்யற ‘சரவண சமையல்’ ரசிக்கத்தக்க அளவில இருக்கும். நிஜத்தில அவருக்கு சமையல் தெரியுமான்னு நான் கேக்கவேயில்லை. ஆனா அவர் படத்தில சமையல் செய்யற அழகைப் பார்த்தா உமிழ்நீர் சுரக்கும். சாதாரணமாவே பெரிய வீடுகள்ல வேலை பார்க்கிற பணியாளர்களுக்கு இருக்க ஒரு சுபாவம், அந்த வீட்ல நடக்கிற சச்சரவுகளை கிசுகிசுவா மாத்தறதுதான். அதை அடுத்த காம்பவுண்ட் பணியாளர்கள்கூட பகிர்ந்துக்கிறதுதான் அவங்களுக்கு இருக்க ஒரே என்டர்டெயின்மென்ட். இதுக்கு தனுஷும் விதிவிலக்கில்லை. ‘எங்கேயோ விளைஞ்சு வர்ற வெங்காயத்தை நம்ம வீட்ல நறுக்கும்போது நமக்குக் கண்ணீர் வர்றதில்லையா..? அப்படி இருக்க நாம், வேலை செய்யற வீட்ல இருக்க பிரச்னைகள்ள பங்கெடுத்துக்கலைன்னா எப்படி..?’ன்னு அதுக்கு விளக்கமும் கொடுப்பார் அவர்.
அனன்யாவோட காதலனா கிருஷ்ணா அறிமுகமாகறார். 900 படங்கள் நடிச்சிருக்க ‘செம்மீன்’ ஷீலா, சுஹாசினி, இளவரசு, மனோபாலா, மயில்சாமியோட ‘கும்பிடி சாமிகளா’ வர்ற விவேக் பண்ற காமெடிகள் இந்தவருட காமெடிச்சேனல்கள்ல முக்கியமானதா இருக்கும். ‘கும்பிடிக்கு குஜாலக்கா...’தான் அவரோட கோஷம்.
இது இசையமைப்பாளர் தினாவுக்கு 50வது படம். அதுமட்டுமில்லாம கதையோட தேவைக்காகவும் ஒரு மியூசிக்கல் படமா இதை உருவாக்கியிருக்கோம். கிளாஸிக், ஃபோல்க், வெஸ்டர்ன்னு எல்லாவிதமான பாடல்களும் இருக்கிறதோட, படத்தோட ரீரெக்கார்டிங்கே சங்கீதமயமாதான் போய்க்கிட்டிருக்கும். அதுக்காக முழுக்க முழுக்க கிளாஸிக்கல் வாத்தியங்களை வச்சே அற்புதமா இசையமைச்சிருக்கார் தினா. ‘யாதுமாகியே...’ன்னு ஒரு கிளாஸிக்கல் பாடலைப் பாடிய சங்கர் மகாதேவன், ‘இதுவரை பாடிய 4 ஆயிரம் பாடல்கள்ல மூணரை மணிநேரம் எடுத்துக்கிட்டுப் பாடிய பாடல் இதுதான்...’னு சொன்னார். வழக்கமா ஒரு பாடலுக்கு 40 நிமிஷங்கள் அவருக்குப் போதும். மதுரை சின்னப்பொண்ணு பாடியிருக்க ‘ஏலேலோ வள்ளியம்மா...’ மன்மதராசாவுக்கு மாற்றா இருக்கும். பி.சி.ஸ்ரீராம் ஸ்கூல்லேர்ந்து வந்த ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவு செஞ்சிருக்கார்.
‘அடிப்படைல தத்துவம், தனுஷோட வித்தகம்’னு பரபரன்னு போற திரைக்கதைல சிரிக்கவும், சிந்திக்கவும் ஒரு படமா நினைவில நிற்கும் ‘சீடன்’..!’’
வேணுஜி