ஐம்புலன்களில் வாசனை அறிதலுக்கு நாம் முக்கியத்துவம் தருவதில்லை என்பதே உண்மை. உணவை ரசித்துச் சாப்பிட அதன் வாசனை பெரிதும் உதவுகிறது. வாசனையில்லாத பிரியாணியை நினைத்துப் பார்க்கவும் முடிகிறதா?
பூக்களின் வாசனை, முதல் மழை பூமியை நனைத்த அந்த நொடியில் கிளம்பும் மண்வாசனை, நறுமணப் பொருட்களின் வாசனை என ரம்மியமான வாசனைகளால் சூழப்பட்டதே இவ்வுலகம். சமையல் எரிவாயுக் கசிவு, தீவிபத்து போன்றவற்றை மணம் மூலம் கண்டறிந்து எச்சரிக்கையடைந்து விபத்துகளின் வீரியத்தைக் குறைக்கலாம். கெட்டுப்போன உணவுப் பொருட்களை துர்மணம் காட்டிக்கொடுத்து விடும். எலி போன்ற பிராணிகள் எங்காவது செத்துக் கிடந்தாலும் முதலில் அதை நம் கவனத்துக்குக் கொண்டுவருவது வாசனையே!
நாற்றம் எனும் சொல் முதலில் நறுமணம் என்னும் பொருளில்தான் வழங்கி வந்திருக்கிறது. ‘கருப்பூரம் நாறுமோ; கமலப் பூ நாறுமோ; திருப் பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ’ என்று பகவான் கிருஷ்ணனின் வாய் மணத்தை ஆண்டாள் பாடிப் பரவசமடைந்தார்.
சில வாசனைகள் சிற்றின்ப நுகர்வைத் தூண்டுவனவாக அமையும். முதலிரவு அறையில் ஊதுபத்தி மற்றும் நறுமண மலர்கள் பயன்படுத்தப்படுவதைக் கவனிக்கலாம். சில வாசனைகளுக்குச் சிலர் ‘அடிக்ட்’ ஆகிவிடுவார்கள். பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் சிலர் கர்ச்சீப்பைப் பெட்ரோலில் நனைத்து முகர்ந்துகொண்டே இருப்பார்களாம்! பெயின்ட் வாசனை சிலருக்கு போதையைத் தருவதுண்டு!
வாசனையை எப்படி அறிகிறோம்? உள்மூக்கின் அடிப்பகுதி திசுக்களில் ஆல்ஃபேக்டரி சென்சரி நியூரான் எனப்படும் வாசனையறியும் செல்கள் பொதிந்து காணப்படும். இவை மூளையுடன் நேரிடையாக இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு செல்லும் தனிப்பட்ட வாசனையை அறியும் திறன் கொண்டது. நம்மைச் சுற்றியுள்ள பொருட்களிலிருந்து கண்ணுக்குத் தெரியாத நுண் மூலக்கூறுகள் வெளியாகிக்கொண்டே இருக்கும். அவற்றை இனங்கண்டு இந்த நியூரான்கள் மூளைக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புகின்றன. மூளை அதை இனம் கண்டு வாசனைகளை அறிகிறது.
‘அமோர்ஃபோஃபாலஸ் டைட்டானம்’ என்னும் தாவரம் சுமத்ரா மழைக்காடுகளில் இருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய பூங்கொத்து உடைய தாவரம் என்ற சிறப்புப் பெற்றது இது. இதன் பூங்கொத்து அழுகிப்போன பிணத்தின் நாற்றத்தைக் கொண்டிருக்கும்!வாசனைகளை நாசித் துவாரத்தின் மூலம் மட்டுமே உணர்வதாக நினைத்திருக்கிறோம் அல்லவா? தொண்டையின் மேற்பரப்பில் உள்ள சேனல் ஒன்றும் மூக்கோடு இணைக்கப்பட்டிருக்கிறது. நாம் உணவு உண்ணும்போது அறியும் வாசனைக்கு இங்கு உள்ள நியூரான்களும் காரணமாகும். ஜலதோஷம் வந்தால் இந்த சேனல் தடைபடுவதால்தான், அப்போது வாசனைகளைச் சரிவர நுகர முடிவதில்லை.
வாசனைகளை அறிவதில் ஏற்படும் குறைபாட்டுக்கு ‘ஹைப்ஸ்மியா’ என்றும், அறவே வாசனைகளை உணர இயலாத குறைபாட்டுக்கு ‘அனோஸ்மியா’ என்றும் பெயர். பொருட்களின் அசல் வாசனைக்குப் பதிலாக வேறு வாசனையை நுகர்வதாக உணரும் ‘டைசோஸ்மியா’, இல்லாத வாசனைகளைக் கற்பனையாக உணரும் ‘ஃபாண்டோஸ்மியா’ எனப் பல குறைபாடுகளும் இருக்கின்றன.
வாசனையறியும் குறைபாட்டுக்கு தலைக்காயம், ஹார்மோன் கோளாறுகள், சைனஸ், பல் பிரச்னைகள், மருந்துகளின் பக்க விளைவுகள், கேன்சருக்கு எடுத்துக்கொண்ட ரேடியேஷன் சிகிச்சை, புகை பிடித்தல், முதுமை போன்ற பல காரணங்கள் உண்டு.
வாசனையறியும் திறன் பழுதுபட்டால் உணவை ரசித்து ருசிக்க முடியாது. பலருக்கு உணவு உட்கொள்ளும் அளவே குறைந்துவிடும். சுவைக்காக அவர்கள் அதிக அளவு உப்பை உணவில் சேர்க்க நேரிடும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு அதிக உப்பினால் கெடுதல்கள் நேரிடும். சிலருக்கு வாசனையறியும் குறைபாடு பார்க்கின்ஸன், அல்சைமர் நோய் அல்லது நீரிழிவு, உடல் பருமன் போன்றவற்றுக்கான ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். வாசனையறிவதில் குறைபாடு வயதானவர்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. பெண்களைவிட ஆண்களுக்கே இது அதிகம் வருகிறது.
பூக்களில் மரபியல் மாற்றங்களைச் செய்து வாசனையைக் கூட்டவோ குறைக்கவோ இயலும் என்பதை ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். மலர் என்றாலே நறுமணமே நினைவுக்கு வரும். ‘தீக்குச்சி மரம்’ என்றழைக்கப்படும் Ailanthesexcelsa மரத்தின் மலர்களோ மிகவும் துர்நாற்றம் கொண்டவை.
சில மிருகங்களின் கழிவு ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் மணம் உடையதாக இருக்கிறது. பசு சாணத்தின் மணத்தை உதாரணமாகச் சொல்லலாம். புனுகுப்பூனையின் கழிவு, வாசனைத் திரவியம் போல நறுமணம் உடையது. paradoxurus hermaphroditus என்ற பெயர் கொண்ட புனுகுப்பூனை காபி பழங்களை விரும்பிச் சாப்பிடும். காபிக் கொட்டைகள் அதன் கழிவுடன் சேர்ந்து வெளிவந்து விடும். அதன் உணவுப் பாதையில் உள்ள என்சைம்களின் செயலால் காபிக் கொட்டையில் இனிய மணம் ஏறுகிறது. இப்படி வெளிவந்த கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் காபிக்கு ‘கோப்பி லுவாக்’ எனப் பெயர். இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும் அபார மணம் கொண்ட இந்தக் காபியின் விலை, கோப்பை ஒன்றுக்கு நூறு டாலர் வரை!
ஒரு குற்றம் நிகழ்ந்ததும் சம்பவ இடத்துக்கு வரும் துப்பறியும் நாய்களுக்கு உறுதுணையாக இருப்பது அவற்றின் மோப்ப சக்திதான். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இருக்கிறதா என்பதை வைத்து சிவபெருமான் ஒரு திருவிளையாடலே நிகழ்த்தியதாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது.
ஆர்.ஷண்முகசுந்தரம், கி.ராஜநாராயணன் போன்ற எழுத்தாளர்கள் ‘மண் வாசம்’ வீசும் எழுத்துக்குச் சொந்தக்காரர்கள். ‘மண் வாசனை’ என்ற பெயரில் பாரதிராஜா ஒரு திரைப்படம் இயக்கியிருக்கிறார். ‘வெட்டிவேரு வாசம் வெடலப் புள்ள நேசம்’ என்பது ‘முதல் மரியாதை’ படத்தில் வரும் ஒரு சுவையான பாடல்!
70 முதல் 80 சதவீதம் பேருக்கு வாய் நாற்றம் இருக்கிறதாம். தங்களுக்கு இப்படி ஒரு குறை இருப்பதே தெரியாமல்தான் பலரும் இருக்கிறர்கள். வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் உரிய மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியம். டாக்டர்கள் வாய் நாற்றத்தை ‘ஹாலிடோஸிஸ்’ என்கிறார்கள். சரியாக பல் துலக்காதது, வாயில் புண், ஈறுகளில் நோய்த்தொற்று, தொண்டை, நுரையீரல் நோய்கள் இருப்பது போன்றவை வாயில் துர்நாற்றம் உண்டாக்கும் காரணங்களில் சில.
வாசனை தொடர்பான சில பழமொழிகள்...‘காலி பெருங்காய டப்பா; அதுல வாசனை மட்டும் இருக்கு!’‘கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?’‘பூக்கடைக்கு விளம்பரம் தேவையா?’ smelling a rat என்று ஏதாவது அசம்பாவிதத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளுவதற்குச் சொல்லுவார்கள். உலகிலேயே அதிக விலையுள்ள வாசனைத் திரவியம் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது ‘நம்பர் 1’ எனப் பெயரிடப்பட்டு, 500 மில்லி குப்பியில் அடைக்கப்பட்டுள்ள சென்ட்தான். 2,15,000 டாலர்கள் விலை. 5 கேரட் எடையுள்ள வைரமும் 18 கேரட் தங்க வளையமும் குப்பியை அலங்கரிக்கின்றன!
(அடுத்து...)
லதானந்த்