நான் சச்சின் இல்லை.



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

      மீ
ண்டும் ஆஸ்கர் கதவுகளின் அருகில் நிற்கிறார் நம் இந்திய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். 2009ல் அவர் 'ஸ்லம்டாக் மில்லினியர்’ படத்துக்காக ஆஸ்கர் விருதுகள் இரண்டைப் பெற்ற நிகழ்வே இன்னும் நம் மனக்கண்களில் இருந்து மறையவில்லை. அதற்குள் 2011 பிப்ரவரி 27ல் அறிவிக்கப்படவிருக்கும் 83வது ஆஸ்கர் அவார்டுகளுக்கான நியமனத்தில் இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

‘ஸ்லம்டாக் மில்லினியரை’ இயக்கிய அதே டேனி பாயலின் இயக்கத்தில் அமைந்த ‘127 ஹவர்ஸ்’ படத்துக்காக இந்தமுறை நியமனம் பெற்றிருக்கும் அவர், கடந்த முறை போலவே இதிலும் best original score மற்றும் best original song’ என்ற இரு பிரிவுகளில் போட்டியிடுகிறார்.

இடையில் கடந்துபோன 2010ல் ரஹ்மான் இசையமைத்த ‘கப்பிள்ஸ் ரிட்ரீட்’ என்ற படம் ஆஸ்கர் நியமனத்துக்கான தேர்வுப்பட்டியல் வரை போனது. ஆனால் நியமனம் பெறவில்லை என்ற நிலையில், இந்த வருடம் இரண்டு பிரிவுகளில் அவர் நியமனம் பெற்றிருப்பது இந்திய சினிமா மற்றும் இசை ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும், ‘‘நான் சச்சின் டெண்டுல்கர் இல்லை. அவர் ஒவ்வொரு முறை மைதானத்தில் இறங்கும்போதும் செஞ்சுரி அடிக்கவேண்டுமென்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இருந்தாலும் நான் என் ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யத்தான் முயற்சிக்கிறேன்...’’ என்கிறார் தன் வழக்கமான அடக்கத்தோடு.

கடந்தமுறை அவர் ஆஸ்கர் விருதுகளுடன் கோல்டன் குளோப் மற்றும் இரண்டு கிராமி விருதுகளையும்கூட ‘ஸ்லம்டாக் மில்லினியரு’க்காகப்
பெற்றார். ஆனால் இந்தமுறை கோல்டன் குளோப் விருதுக்கான நியமனத்தில் ‘127 ஹவர்ஸி’ன் இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் பெற்றிருந்தும், அந்த விருது ‘தி சோஷியல் நெட்வொர்க்’ படத்துக்கு இசையமைத்த ட்ரென்ட் ரெஸ்னோருக்கும், ஆட்டிக்கஸ் ராஸ்ஸுக்கும் போனது. இருந்தாலும் ‘127 ஹவர்ஸி’ல் ரஹ்மான் இசைத்து, உலகப் புகழ்பெற்ற பாப் பாடகர் டிடோ பாடியிருக்கும் ‘இஃப் ஐ ரைஸ்...’ பாடல் உலகம் முழுக்க ரசிகர்களிடமும், இசை விமர்சகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றிருப்பதுடன், ‘கிரிட்டிக்ஸ் சாய்ஸ் மூவி அவார்ட்’ என்ற விமர்சகர்களின் விருதையும் பெற்றிருப்பதால், ஆஸ்கரையும் அது வெல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பிப்ரவரி 13ம் தேதி அறிவிக்கப்படும் பிரிட்டிஷ் அகாடமி விருதான ‘பாஃப்டா’விலும் சிறந்த இசைக்கான நியமனத்தில் இருக்கிறார் ஏ.ஆர்.ஆர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு கடந்த முறை போலவே இரண்டு ஆஸ்கரையும், கூடுதலாக பாஃப்டாவையும் அவர் பெற்றுவிட வேண்டும் என்று இருந்தாலும், ‘‘எனக்கும் ஆஸ்கர்களைப் பெற்றுவிட ஆசைதான். ஆனால் கடந்த முறை அதிகபட்ச ஆஸ்கர்களைப் பெற்றதிலேயே ஒரு வாழ்க்கைக்குத் தேவையானதை நான் அடைந்துவிட்டேன். இந்தமுறை எனக்குக் கிடைக்காவிட்டாலும் இன்னொரு திறமையான புதுமுகப் போட்டியாளருக்கு இந்த விருது போய்ச்சேர்ந்தால் அதிகம் மகிழ்ச்சி யடைவேன். ஒருவரே மீண்டும் மீண்டும் விருதுகளைப் பெறுவதைவிட, பல திறமையாளர்கள் அடையாளம் காணப்படுவதுதான் ஆரோக்கியமாக இருக்கும். அதனால் எந்த அழுத்தமும் இல்லாமல் இந்தமுறை ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை அமைதியாக உட்கார்ந்து பார்த்து ரசிக்கப்போகிறேன்...’’ என்கிறார் அவர் கூலாக!
ஜி