நாற்பது நாட்கள் விரதம் இருந்து சபரிமலை வரும் பக்தர்களுக்காக ஜனவரி 14 மாலை கற்பூர ஆரத்தி பூஜை நடைபெறுகிறது. அவ்வேளையில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதியாக ஐயப்பனே தோன்றி அருள்பாலிப்பதாக நம்புகிறார்கள் சபரிமலை பக்தர்கள். கடந்த 14ம் தேதி மகரஜோதி தரிசனத்தைக் காணும்போது நெரிசலில் சிக்கி 102 பேர் பரிதாபமாக இறந்துபோக, மகரஜோதியின் உண்மைத்தன்மை பற்றியும் சர்ச்சை உண்டாகியிருக்கிறது.
சபரிமலை வரலாற்றில் அதிக உயிர்களைக் காவுகொண்ட உயிர்ப்பலி இதுதான் என்றாலும் 1952ல் இதே தினத்தில் நடந்த விபத்தில் 66 பேரும், 1999&ல் இதே தினத்தில் பம்பையில் ஏற்பட்ட நெரிசலில் 53 பேரும் இறந்திருக்கிறார்கள். பம்பை விபத்தை ஒட்டி கேரள அரசு நியமித்த நீதிபதி சந்திரசேகர மேனன் கமிஷன் அளித்த அறிக்கையில், ‘மகரஜோதி தரிசனத்தைக் காண பக்தர்கள் வரும் வழியிலும் ஜோதி தரிசனம் காணும் இடத்திலும் முறையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்’ என்று பரிந்துரைத்திருந்தது. கோயிலை நிர்வகிக்கும் கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸம் போர்டும் இந்தப் பரிந்துரைகளை இன்றுவரை செயல்படுத்தவே இல்லை. ஒவ்வொரு முறை விபத்து நடக்கும்போதும் மகரஜோதி சர்ச்சையும் பெரிதாகிவிடுகிறது.
பொதுவாக மகரஜோதி தொடர்பான கேள்விகள் இடதுசாரிகளாலும் பகுத்தறிவாளர்களாலும் கேட்கப்பட்டாலும், இம்முறை கேள்வி எழுப்பியிருப்பது கேரள உயர் நீதிமன்றம். ‘மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா, இல்லையா என்பது குறித்து மாநில அரசு விளக்கமாகத் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறி யிருக்கிறது. கேரள முதல்வர் அச்சுதானந்தன் அமைச்சரவை ஆலோசனைக்குப் பின்னர், ‘மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா என்பது குறித்தெல்லாம் ஆராயும் உத்தேசம் அரசுக்கு இல்லை. அதை சபரிமலை குறித்த பக்தர்களின் நம்பிக்கையின் ஒரு பாகமாகவே கருதுகிறேன். மகரஜோதி எவ்வாறு ஏற்படுகிறது என்பது குறித்து, அதிநவீன தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டோ ஆன்மிகவாதிகளைக் கொண்டோ ஆராயவும் உத்தேசமில்லை’ என்று அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்புகளுக்கிடையில் சபரிமலை தலைமை தந்திரி கண்டரு மகேஸ்வரரு, ‘‘ஜனவரி 14 அன்று வானத்தில்
தெரியும் நட்சத்திரத்தையே மகரஜோதி என கூறுகின்றனர். அவ்வேளையில், ஒரு குறியீடாக ஐயப்பனுக்கு செய்யப்படும் தீபாராதனையைத்தான் மகரவிளக்கு எனக் கூறுகிறோம். பொன்னம்பல மேட்டில் தெரிவதுதான் மகர ஜோதி என சிலர் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். அது பல ஆண்டுகளாக பழங்குடியின மக்களால் செய்யப்படும் சடங்கு. பொன்னம்பல மேட்டில் எரியும் மகரவிளக்கை மகரஜோதி என்று பிரசாரம் செய்வதன் மூலம் அதைப் போலியாக்கி பக்தர்களுக்குள் குழப்பம் விளைவிக்க சிலர் முயல்கிறார்கள்’’ என்கிறார்.
பக்தர்களுக்கு போதிய ஏற்பாடு செய்யாததால் மிகப்பெரும் விபத்து நேர்ந்தது என எல்லோருக்குமே தெரியும். இந்த மரணங்களுக்குப் பொறுப்பான கேரள வனத்துறையும், கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸம் போர்டும் பழியை ஒருவர் மீது ஒருவர் போடுகிறார்களே தவிர, 4 மீட்டர் அகலமுள்ள பாதையில் பல்லாயிரம் வாகனங்களை அனுமதித்தது பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள். பல நேரங்களில் ஆட்சியாளர்கள் தங்களின் நிர்வாகத் தவறுகளை மறைக்க பகுத்தறிவையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு சபரிமலை விபத்து ஒரு உதாரணம்.
மகரவிளக்கு உண்மையா பொய்யா என்பதல்ல இப்போது பிரச்னை. கோடிகோடியாக வருமானம் கொட்டும் ஒரு கோயிலுக்கு வந்து போகும் பக்தர்களுக்கு ஒழுங்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்காதது ஏன் என்ற கேள்வியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நிர்வாகங்கள் மகரஜோதி என்னும் மாயவலைக்குள் ஒளிந்துகொள்கிறார்கள். வி.ஐ.பிகளை பத்திரமாக அனுமதித்து, அவர்களுக்கு வசதி செய்துகொடுக்கும் நிர்வாகங்கள், சாதாரண பக்தர்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஏன்? ‘பொறுப்பற்ற பக்தர்கள் ஒரே இடத்தில் கூடி நெரிசலை விளைவித்தார்கள்’ என இறந்தவர்கள் மீதே பழிபோடுவது எந்தவிதத்தில் நியாயம்?
டி.அருள் எழிலன்