தேசிய கீதம்‘ஜன கண மன’ என்ற நம் தேசிய கீதத்துக்கு 2011ம் ஆண்டு நூற்றாண்டு விழா. 1950ம் ஆண்டு இது தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது என்றாலும், தாகூர் இயற்றிய இந்த கீதம் 1911 டிசம்பரில் நடந்த கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில்தான் முதன் முதலாக பாடப்பட்டது. தேசிய கீதத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராம்ராஜ் காட்டன் நிறுவனம், ‘வெண்மை பாரதம்’ என்ற நிகழ்வை நடத்துகிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகளின் படங்களைத் தாங்கிய காலண்டர், பள்ளி, கல்லூரிகளில் நிகழ்ச்சிகள், முக்கிய பிரமுகர்கள் மூலம் பிரசாரம் என இந்த ஆண்டு முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி நாளைய தலைமுறையை வெண்மையாக மாற்றுவதே இந்த நிகழ்வின் குறிக்கோள்.
ரயில் ஹோஸ்டஸ்!‘புல்லட் டிரெயின்’ என்ற பெயரில் அதிவேக ரயில் சேவையைத் தருவதில் ஆர்வம் காட்டி வருகிறது சீனா. பெருநகரங்களுக்கு இடையே விமானத்தைவிட வேகமாக சென்று சேரும் ரயில்கள் இவை. மணிக்கு 380 கிலோமீட்டர் வேகம் என்பது சாதாரணம். (சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு மணி நேரத்தில் இந்த ரயில் போகும்!) இந்த ரயில்களில் பயணிகளுக்கு உதவ விமானப் பணிப்பெண்கள் போல உடையணிந்த பெண்கள் வருவது கொள்ளை அழகு!
உயர ஓட்டல்!உலகின் மிக உயரமான ஓட்டல் என்ற பெருமையைப் பெறுகிறது ‘அட்.மாஸ்பியர்’. உலகின் உயரக் கட்டிடமான துபாயின் புர்ஜ் கலிபாவின் 122வது மாடியில் இருக்கிறது இது. தரையிலிருந்து 1350 அடி உயரம். கண்ணாடி ஜன்னல் அருகே உட்கார்ந்து துபாய் நகரின் அழகை ரசித்தபடி சாப்பிடலாம். ஓட்டலைப் போலவே விலையும் உயரத்தில்தான் இருக்கிறது. குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபாய் இல்லாமல் ஒரு காபிகூட குடிக்கமுடியாது.
போலி போலீஸ்!எளிதாகச் சம்பாதிக்க வேண்டும் என்றால் போலீஸ் ஆகவேண்டும் என்று யார் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை. சேலம் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த விஜயன் போலீஸ் ஆகிவிட்டார். கனத்த உடம்பு, வெளித்தள்ளிய தொந்தி என போலீசுக்கு உரிய எல்லா உடல்தகுதிகளும் கொண்டிருந்ததால், பலரும் இந்த போலியை நம்பிவிட்டார்கள். ‘மஃப்டி’யில் போயே பலரிடம் மாமூல் வசூலித்திருக்கிறார். கடந்த வாரம், தர்மபுரியைச் சேர்ந்த ஷாஜகான் என்பவர் ஓட்டிவந்த லாரியை மடக்கி ஆயிரம் ரூபாய் கேட்டிருக்கிறார். ‘அவ்வளவு பணம் இல்லை’ என்ற ஷாஜகானிடம் வடிவேலு ரேஞ்சுக்கு கொஞ்சம் குறைத்துப் பேரம் பேச, சந்தேகம் அடைந்த அவர் நிஜ போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டார். பேரத்தில் திளைத்திருந்த போலியை கையும் களவுமாகப் பிடித்து பூஜை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் சூரமங்கலம் போலீசார்!
வரசாவு சடங்கு!கோத்தர்கள் நீலகிரி மலையின் ஆதிபழங்குடிகள். ஆவி நம்பிக்கை கொண்ட இம்மக்கள், இறந்த தங்கள் மூதாதையர்களின் ஆவியை சாந்தப்படுத்துவதற்காக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ‘வரசாவு’ என்ற சடங்கை நடத்துவார்கள். இறந்தவர்களை எரிக்கும்போது, அச்சிதையில் இருந்து சில எலும்புத்துண்டுகளை சேகரித்து வைக்கும் வழக்கம் கோத்தர்களுக்கு உண்டு. வரசாவு சடங்கின்போது இந்த எலும்புத்துண்டுகளை சிறுசிறு தேர்களில் வைத்து சாவுநாடு எனப்படும் மயானத்துக்கு இழுத்துச்சென்று மீண்டும் எரிப்பார்கள். 12 நாட்கள் அந்த இடத்திலேயே தங்கி பிரார்த்திப்பதோடு, ‘ஆத்’ எனப்படும் தங்கள் கலாசார நடனத்தையும் ஆடிக்களிப்பார்கள். மஞ்சூரை ஒட்டியுள்ள குந்தா கோத்தகிரியில் ஜனவரி 19 அன்று இச்சடங்கு நடந்தது.
கோயிலுக்குள் எருமை?தைப்பொங்கல் எருமை மாட்டின் மீது ஏறிவந்ததால் ஆண்களுக்கு ஆகாது என்று யாரோ கொளுத்திப்போட்ட வதந்தியால் கடந்த வாரம் திருவண்ணாமலை கலகலத்துப் போனது. இந்த வாரம் திருச்சி ஸ்பெஷல். சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குள் எருமை மாடு புகுந்துவிட்டதாகவும், பரிகாரம் செய்யாவிட்டால் குடும்பத்துக்கு ஆகாது என்றும் பற்றிப் பரவியது வதந்தி. துறையூர் வட்டாரத்தில் பெண்கள் அதிகாலையில் பயபக்தியோடு கோலமிட்டு அகல்விளக்கு ஏற்றிப் பரிகாரம் செய்தார்கள். விசாரித்தால், ‘அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை’ என்கிறார் கோயில் இணை ஆணையர் பாரதி. என்ன பாவம் செய்ததோ எருமை?
இதயத்தில் பச்சை குத்தி!‘
இதயமெல்லாம் உன் பெயரை பச்சை குத்தி வைத்திருக்கிறேன்’ என்று கவிஞர்கள் புருடா விடுவார்கள். உண்மையிலேயே தன் காதலியின் பெயரை இதயத்துக்கு வெளியில் பச்சை குத்தி வைத்திருந்த ஒரு காதலன், அந்தப் பெயரை அழிக்க முயன்றதால் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், மதுரவேளாகுளத்தைச் சேர்ந்த குமரேசன்தான் அவர். காதலி மச்சகாந்தியின் பெயரை தன் மார்பிலும் கையிலும் பச்சைகுத்தியிருந்தார். கடந்த வாரம், நாராயணன் என்ற நண்பனோடு குளிக்கச் சென்றார். நாராயணனின் காதலியின் பெயரும் மச்சகாந்தியாம். குமரேசன் இதயத்தில் தன் காதலி பெயரைப் பச்சை குத்தியிருப்பதாகக் கருதிய நாராயணன், சுடுகத்தியால் பச்சையை அகற்றிவிட்டார். காயத்தைக் காட்டிலும் காதலியின் பெயர் அழிந்த வேதனை வலிக்க, குமரேசன் தற்கொலை முடிவெடுத்தார். மீட்கப்பட்ட அவர், ‘‘எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மீண்டும் காதலி பெயரை பச்சை குத்திக்கொள்வேன்’’ என்கிறார்.