அதே கதைதாங்க... பாக்யராஜ் ரொம்பவும் வெள்ளந்தியாக கதை சொல்லி, மூணு பேர் ராதிகாவை விரட்டி விரட்டிக் காதலிச்சு, விழுந்துவிழுந்து ரசிச்ச அதே ‘இன்று போய் நாளை வா’வின் உல்டாகுல்டாதான். இன்றைய காலத்து மசாலா சேர்த்து சந்தானம் முன்மொழிய, அதை இன்னும் மும்மடங்கு கொண்டு போயிருக்கிறார் அறிமுக இயக்குநர் மணிகண்டன்.
இதைவிடவும் சாமர்த்தியமான கதை சந்தானத்துக்குக் கிடைத்திருக்க முடியாது. ‘ஞாபகம்’ வைத்திருந்து ‘லபக்’கியதுதான் சந்தானத்தின் ஸ்பெஷல். மூலக்கதைக்கு (முழுக்கதைக்கு) நன்றி என மினுக்கிவிட்டுப் போகும் கதை, சூடு பிடிக்கும்போது ரேஸ் குதிரை வேகம்தான். படம் முழுக்க கலாய்ப்பதும், வகை தொகை இல்லாமல் கிண்டல் பண்ணுவதும், அரை விநாடி கூட தாமதிக்காமல் பன்ச் டெலிவரி கொடுப்பதும்தான் திரைக்கதையை களை கட்ட வைத்திருக்கிறது.
ஆ.. ஊ...வென்ற சண்டை இல்லை. அனாவசிய செலவு இல்லை. சூப்பர் ஆக்டர்கள் இல்லை. சுண்டி இழுக்கும் ஹீரோயின் இல்லை. ஆனாலும், இத்தனை இல்லைகளும் படத்துக்கு மைனஸாக இல்லை! எக்கச்சக்க காமெடியுடன் பறக்கிறது படம். சேதுவின் எதிர்வீட்டில் குடிவருகிறார் ஹீரோயின் விசாகா. இவரை ‘லவ்’விக்கொள்ள சந்தானம், பவர்ஸ்டார், சேது மூவருக்கும் இடையில் போட்டி. இந்தக் கூட்டணி எப்படி எல்லாம் திட்டம் போடுகிறது, சமாளிக்கிறது, தங்களுக்குள் காலை வாரி விட்டுக்கொள்கிறது என பரபரத்து நகர்கிறது கதை. இந்த மூவரின் திட்டங்கள் அடிக்கடி புட்டுக்கொள்வதும், இதற்காக நண்பர்களுக்குள்ளேயே முட்டிக்கொள்வதுமாக நகரும் படத்தில் காமெடி பூந்தியை சேர்த்துப் பிடித்து வழங்கியிருக்கும் மணிகண்டனுக்கு நல்வரவு. சந்தானம் இருந்தும்கூட படத்தில் தலை தூக்கி நிற்பது பவர்ஸ்டார்தான். நடிப்பு வராவிட்டாலும், பாவனைகள் இல்லையென்றாலும், பவர் வந்து நின்றாலே சிரிக்கிறது கூட்டம். டான்ஸ் மாஸ்டர் சிவசங்கரிடம் டான்ஸ் கற்றுக்கொள்ளும் முதல் நாளே பெரிய கூட்டத்தை அழைத்து வந்து, ‘‘இதெல்லாம் என் ரசிகர்கள் மாஸ்டர்’’ என பந்தா காட்டும் இடத்தில் பகீரென்று சிரிக்கிறார்கள் ரசிகர்கள். தனக்கு டூப்பாக ஒருவரை ஆட வைத்து, மாஸ்டர் வந்ததும் டூப் இடத்திற்கு மாறி தை தக்கா போடுவதும் பக்கா காமெடி.
பவர்ஸ்டார் டாக்டர் (!) சீனிவாசன் அடுத்த ரீயாக்ஷனுக்குத் தடுமாறுவதே கைதட்டல் பெறுவது அதிசய ரகம். இந்த பவர் கொடுமையை ஆரம்பித்து வைத்திருக்கும் மணிகண்டனை எதிர்கால தமிழ் சினிமா மன்னிக்காது. இன்னும் அவரின் எத்தனை அலப்பறைகளுக்கு தமிழ்நாடு ஈடு கொடுக்கப் போகிறதோ தெரியவில்லை! சரி, விடுங்கள்... உதறலோடு பேசினாலும், உதறியே டான்ஸ் ஆடினாலும்... அட்லாஸ்ட், அப்ளாஸ் பவருக்குத்தான். அடுத்து, சந்தானம். பாட்டு வாத்தியாரான வி.டி.வி கணேஷிடம் மாட்டிக்கொண்டு, கழுத்தளவு தண்ணீரில் உட்கார்ந்து சாதகம் செய்யும் இடத்தில் வயிற்றைப் பதம்பார்க்கிறார். கல்யாணமாகாத முதிர்கண்ணனாக வரும் பவர் ஸ்டாரின் அண்ணன் கேரக்டரும், ‘‘கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்’’ என்று ரிலாக்ஸாக பேசும் அவரது தந்தை கேரக்டரும் சூப்பர் செலக்ஷன். ஹோம்லி, க்ளாமர் ரெண்டு ஏரியாவிலும் விசாகா நிற்கிறார். காமெடியை வைத்தே எப்படியும் கரைசேர்ந்து விடலாம் என்று நினைத்திருக்கிறார்கள். நினைத்தது நடந்தும் இருக்கிறது.
- குங்குமம் விமர்சனக் குழு