தொலைவு





ஞாயிற்றுக் கிழமை என்றதால் பேருந்தில் சொற்பக் கூட்டமே இருந்தது. பெரியார் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் ஏறியது. இரு இளம் பெண்கள் அருகருகே அமர்ந்திருந்தனர்.
உட்கார்ந்த அடுத்த நிமிடமே அவரவர் செல்போன் சிணுங்கியது. 

‘‘ஏய் கீதா! எப்படி இருக்கே?’’ - முதல் பெண் தன் செல்போனில்.
‘‘ஏய் சீதா! உன் கூடப் பேசி எவ்வளவு நாளாச்சு?’’ - இரண்டாம் பெண் தன் செல்போனில்.
‘‘அப்புறம் நாம ஒருநாள் சந்திச்சுப் பேசணும்’’ - முதல் பெண்.
‘‘வேலை எல்லாம் எப்படி இருக்கு?’’ - இரண்டாவது பெண்.
பேச்சு தொடர்ந்தது. இறங்கும் ஸ்டாப் வந்தவுடன் முதல் பெண், ‘‘சரிடி, நான் அப்புறம் பேசறேன்’’ என்று தன் செல்போனை அணைத்து விட்டு இறங்குவதற்காக எழுந்தபோது, பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண் எதேச்சையாக செல்போன் உரையாடலை முடித்தாள். இருவரும் அப்போதுதான் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
‘‘ஏய், மது! இவ்வளவு நேரம் பக்கத்துலயா உட்கார்ந்திருந்தே, கவனிக்கவே இல்லை!’’
‘‘அட, ஆமாம் ரேணுகா! சரி, சரி... உன் மொபைல் நம்பரைக் கொடு, அப்புறமா நான் பேசறேன். என் ஸ்டாப் வந்துடுச்சு!’’
‘‘ஓகே’’ என்று தன் செல்போன் நம்பரைச் சொன்னாள்.
‘‘பை... பை...’’
இப்போது மறுபடியும் ரேணுகாவின் மொபைல் சிணுங்கியது.