தண்டவாளங்களுக்கு இடையே தடுமாறி ஓடி வருகிறார் அழகு அனுஷ்கா. அவரை ஆயுதங்களுடன் துரத்துகிறது ஒரு கும்பல். ரவுடிகளிடம் அனுஷ்கா அகப்படும் நொடியில் ஆக்ஷன் என்ட்ரி கொடுக்கிறார் கார்த்தி. அனுஷ்காவுக்கு என்னாச்சு? துரத்தும் கும்பல் யார்? காப்பாற்ற முனையும் கார்த்தி யார்? என்று வரிசையாக எழும் கேள்விகளுக்கு சட்டென்று விடை கிடைத்தால் எப்படி? அதனால் சஸ்பென்ஸ் வைக்கும் இயக்குனர் சுராஜ், சந்தானம் - கார்த்தி கூட்டணியில் காமெடியோடு கதை நகர்த்தியிருக்கிறார்.
‘ஓ காமெடி படமா?’ என்று நினைக்கும் நொடியில் ஆக்ஷனுக்கு மாறும் கதையில் சினமும் சீற்றமுமாக அதகளப்படுத்துகிறார் கார்த்தி. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்தை தமிழ்நாட்டில் விற்க நினைக்கிறார் மிலிந்த் சோமன். டாக்டர் சுமனும், சாமியார் மகாதேவனும் இதற்கு உடந்தை. ஆனால் முதல்வர் விசு முரண்டு பிடிக்க... அவர் மகளைக் கடத்துகிறார்கள். அதுதான் அனுஷ்கா.
பணம் கொடுத்தால் எதையும் செய்யும் ஹீரோ கார்த்தியை வைத்து அனுஷ்காவை கடத்தச் சொல்கிறார்கள் என்றால் அடுத்து கதை எப்படி நகரும் என்று உங்களுக்கே தெரியாதா? கார்த்தி மனம் மாறி அனுஷ்காவை காப்பாற்றுகிறாரா... கைப்பிடிக்கிறாரா என்பதே கிளைமாக்ஸ்.
முதல் பாதி முழுக்க கார்த்தி - சந்தானம் காம்பினேஷன்தான். படத்தின் இன்னொரு அல்ல... இணை நாயகனாகவே காமெடி தோரணம் கட்டுகிறார் சந்தானம். பிளேபாய் கார்த்தியிடம் இருந்து தன் தங்கைகளைக் காப்பாற்றப் போராடுவது, சமாளிக்க முடியாமல் தவிப்பது, கடைசியில் போங்கு காட்டி உட்கார்வது என மனிதர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பு ரவுசு. இதன் மூலம் தங்கச்சிகளை மட்டுமல்ல, படத்தையும் கார்த்தியையுமே காப்பாற்றியிருக்கிறார் சந்தானம். இரண்டாம் பாதியில் ஆக்ஷனில் பின்னி பெடலெடுக்கிறார் கார்த்தி. எத்தனை பேர் வந்தாலும் எதிர்த்து நின்று பந்தாடும் சண்டைக் காட்சிகளில் ஆக்ஷன் பிரியர்களுக்கு விருந்துதான்.
கார்த்தியுடன் குத்தாட்டம் போடும் அனுஷ்கா, ஐஸ்கிரீம் போல சில்லிட வைக்கிறார். ஆனால், பாடல் காட்சிகளில் கோபித்துக்கொண்டது மாதிரி, ஏனோ நெருக்கம் காட்டவில்லை. கார்த்தி மீது காதல் உருவாகும் காரணம் அழுத்தமாக இல்லாதது ஏமாற்றம். வேட்டைக்காரராக வரும் மனோபாலா, காட்டுக்குள் கார்த்தியிடம் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் இடத்தில் சிரிப்பு சரவெடி. ஹெலிகாப்டர், ரயில், நூறடி உயரத்தில் பறந்து பனை மரத்தில் மோதி வெடிக்கும் டாடா சுமோக்கள் என சண்டைக் காட்சிகளில் பணத்தைத் தண்ணீராக செலவழித்து பிரமாண்டம் காட்டியிருக்கிறார்கள்.
தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் இரண்டு பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. சந்தானம் தங்கைகளுக்கும் கார்த்திக்குமான ரொமான்ஸ் அந்த ஏரியா ஓவர் டோஸேஜ். வசனங்கள் நெளிய வைக்கின்றன. முதல்வர் மகளை சர்வசாதாரணமாகக் கடத்துவது டூ மச்! வெளிநாட்டு வில்லன் தமிழ்நாட்டு முதல்வரை ஓவர் போனிலேயே மிரட்டுவது போன்ற சில இடங்களை மெகா சைஸ் லாஜிக் ஓட்டை என்றும் சொல்லலாம்... காமெடி வகையிலும் சேர்த்துக் கொள்ளலாம்.
ரொம்பவும் விபரமாக உள்ளே போகாமல், லாஜிக் பார்க்கும் மூளையைக் கழற்றி வைத்துவிட்டு படம் பார்க்க நினைத்தால், அலெக்ஸ் பாண்டியன் ரசிக்க வைப்பான்.
- குங்குமம் விமர்சனக் குழு