அப்பா: மறதியினூடே சில நினைவுகள்
கடந்த சில நாட்களாக மறதி ஒரு பெரும் பனிப்படலமாக என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் ஒரு சிநேகிதி அவ்வளவு பிரியத்துடன் என் கவிதைத் தொகுப்பில் கையெழுத்துக் கேட்கிறாள். நான் அவள் பெயரை எழுதி கையெழுத்திட்டு தர விரும்புகிறேன். ஆனால் பெயர் நினைவுக்கு வரவில்லை. அவளிடம் ‘‘உன் பெயர் என்ன?’’ என்று கேட்டால், அதைவிட அவளை அவமதிக்க ஒன்றுமே இல்லை. எனக்கு மிகவும் நன்கு தெரிந்த ஒருவர் ஆதரவுடன் என் கைகளைப் பற்றி துக்கம் கேட்கிறார். எனக்கு எங்கோ அவரைப் பார்த்த மாதிரி இருக்கிறது. அவரையும் இன்னொருவரையும் குழப்பிக் கொண்டு, அவரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறுகிறேன். யாரோ ஒருவர் என்னிடம், ‘‘நான் யார்னு தெரியுதா?’’ என்கிறார். அவர் விளையாட்டாகத்தான் கேட்கிறார். எனக்கு அழ வேண்டும் போல் இருக்கிறது. ‘‘தெரியும் சார்...’’ என்கிறேன் உடைந்த புன்னகையுடன். ஒரு மனிதன் ஒரு மரணத்தின் வேளையில் இப்படித்தான் நினைவுகளை இழக்கிறானா?
என் அப்பா ஜனவரி 11ம் தேதி இறந்துபோனார். புத்தகக் கண்காட்சியின் முதல் நாள். ஒரு தொலைக்காட்சி கண்காட்சி தொடர்பான எனது பேட்டியை உயிர்மை அரங்கிலிருந்தே நேரடியாக இரவு 8 மணி செய்தியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தது. நான் கேமராவின் முன் என்னை தயார்படுத்திக்கொண்டு நின்றிருந்தேன். 7.55க்கு தொலைபேசி ஒலித்தது. ‘அப்பா மாரடைப்பில் இறந்துபோனார்’ என்று என் அண்ணன் அழுதுகொண்டே கூறினார். நான் ஒரு கணம் தடுமாறினேன். பேசிவிட்டு செல்லலாமா என்றுகூட யோசித்தேன். ஆனால் எனக்கு எல்லாமே மறந்துபோனது. நான் ஏன் கேமரா முன் நின்றுகொண்டிருக்கிறேன் என்பதுகூட எனக்கு நினைவில் இல்லை. மனம் ஒரு சிலேட்டைப் போல துடைத்து அழிக்கப்பட்டுவிட்டது. கண்ணீருடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். இப்படித்தான் இந்த நாட்களின் மறதி எனக்குத் தொடங்கியது.
8 மணிநேரப் பயணம். என் தந்தையின் இறந்த உடலைத் தேடிப் போனேன். அந்தப் பயணத்தில் மெல்ல என் பால்யத்திற்குத் திரும்பிச் சென்றேன். ஒரு குழந்தையாக என் சிறு வயது அப்பாவைத் தேடிப்போனேன். எனது இப்போதைய வயசோடும் மனசோடும் என் அப்பாவை சந்திக்கவே முடியாது என்று தோன்றியது.
என் அப்பா ஒரு பழங்கால ரேடியோ வைத்திருந்தார். டிரான்சிஸ்டர்கள் வந்த பிறகும் அவர் அதைக் கைவிடவே இல்லை. அதன் குமிழ்களைத் திருகி ஒவ்வொரு ஸ்டேஷனாக எனக்கு காட்டித் தருவார். நாங்கள் அதிகாலையில் டெல்லி வானொலியின் தமிழ் ஒலிபரப்பைக் கேட்டுக்கொண்டிருப்போம். என் அப்பா ஒரு பழங்கால பெண்டுலம் கடிகாரம் வைத்திருந்தார். நவீன சுவர்க் கடிகாரங்கள் வந்த பிறகும் அவர் அதைக் கைவிடவே இல்லை. அப்போதே அதன் வயது 50 என்று சொல்லிக்கொண்டிருந்தார். ‘அது ரிப்பேர் ஆகி ஒரு நாள்கூட நின்றது இல்லை’ என்பார். என் அப்பா பழைய புத்தகங்கள் வாங்குவதில் ஈடுபாடு கொண்டிருந்தார். பழைய காமிக்ஸ்கள், பி.டி.சாமி, சிரஞ்சீவி, மேதாவி, தமிழ்வாணன் என்று அவர் வாங்கித் தந்த ஏராளமான துப்பறியும் கதைகள் எனது இளம் மனதில் சாகசத்தின் அலைகளை உருவாக்கின. எனது சொற்களின் உலகத்தை அவர் மெல்லத் திறந்து விட்டார். என் அப்பா ஒரு பழைய சைக்கிளைத்தான் நீண்ட காலமாக பயன்படுத்தினார். ‘20 வருடமாக இந்த சைக்கிளை வைத்திருக்கிறேன்’ என்பார். ‘இந்தியா சுதந்திரமடைந்த அந்தப் பழைய நாள் எப்படியிருந்தது’ என்று அவரிடம் திரும்பத் திரும்ப கேட்டிருக்கிறேன். ‘காந்தியை சுட்ட நாள் எப்படியிருந்தது’ என்று அவரிடம் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் அரிசிப் பஞ்சம் வந்த காலத்தைப் பற்றி கேட்டிருக்கிறேன். எம்.கே.தியாகராஜ பாகவதரின் நாடகம் பார்க்கப் போனது பற்றி, அண்ணாவின் மேடைப் பேச்சுக்கள் பற்றி... அவர் என்னவெல்லாமோ சொல்லியிருக்கிறார்.
என் அப்பா எப்போதும் உறுதியான ஒரு பழைய காலத்தை சார்ந்திருந்தார். கடந்து சென்ற காலத்தின் சுவடுகளின்மீது அவர்கொண்டிருந்த தீராத விருப்பம் அது. பழங்காலம் ஒன்றின் உறுதிமிக்க தடயமாகத்தான் அவரும் இருந்தார். அவர் சோர்வுற்று, நோயுற்றுப் படுத்து நான் கண்டதில்லை. அவர் வயதில் அவருடைய ஆரோக்கியம், இந்த வயதில் நமக்கு இல்லையே என்று பொறாமைப்பட்டிருக்கிறேன்.
என் அப்பா நடைமுறை வாழ்க்கையின் சாதுர்யங்கள் கைவரப் பெற்றவர் அல்ல. அவரது சகோதரர்கள் அனைவரும் வர்த்தகத்தைத் தேர்ந்தெடுத்தபோது அவர் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தார். அது எங்களுக்கு போதுமான அளவு வறுமையைக் கொண்டு வந்தது. எனது பால்யத்தில் எனக்கு வறுமை என்றால் என்னவென்று புரிந்ததே இல்லை. எனது தேவைகளுக்காக அவரை நான் கடுமையாக நிர்ப்பந்தித்திருக்கிறேன். உடல்நலமில்லாத ஒரு குழந்தைக்கு அவர் அபூர்வமான புத்தகங்களையும் புதுமையான தின்பண்டங்களையும் தேடித் தேடி வாங்கி வருவார்.
நான் எனது பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன். இனிப்பு மிட்டாய்களை சிறு சிறு பாட்டில்களில் வைத்து விற்பது எனக்குப் பெரும் விளையாட்டாகவும் பொழுதுபோக்காகவும் இருந்தது. அவர் எனக்கு விற்பதற்கு மிட்டாய் பாக்கெட்டுகள் வாங்கி வந்து தருவார். பிறகு எங்கள் தோட்டத்திலிருந்து மாங்காய்கள், சோளக் கதிர்கள், சீதா பழம் என எவற்றையெல்லாமோ கொண்டு வந்து தருவார். நான் அவற்றை விற்று அவரிடம் காசு சேர்த்துக் காட்டுவேன். அவருக்கு அது பெரிய ஆச்சரியம். நான் வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்ய விரும்பினேனோ, அவற்றில் எல்லாம் அவர் என்னுடன் இருந்தார். ‘பள்ளிக்குப் போகவேண்டும்’ என்று ஆசைப்பட்டபோது பள்ளிக்கு அழைத்துச் சென்றார். ‘படிக்கப் பிடிக்கவில்லை’ என்று நான் ஸ்கூலை விட்டபோது அவர் எந்த மறுப்பும் சொல்லவில்லை. நான் வீட்டை விட்டு வெளியேறியபோதுகூட அவர் அதை மௌனமாக அனுமதித்தார்.
கண்ணாடிப் பெட்டியில் தூங்கும் என் தந்தையைப் பார்த்தேன். அவ்வளவு ஓய்வாக அவர் தூங்குவதை இப்போதுதான் பார்க்கிறேன். மரணத்தின் எந்த அவலட்சணமும் அவர் முகத்தில் இல்லை. சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் இதே ஹாலில் அம்மா இதேபோலத்தான் படுத்திருந்தாள். இந்த 25 ஆண்டுகள் ஒரு மரணத்தைச் சந்திப்பதற்கான எதையுமே எங்களுக்கு கற்றுத் தரவில்லை. நாங்கள் அன்றைக்குப் போலத்தான் இன்றைக்கும் நின்றுகொண்டிருந்தோம். அப்பா தீங்கற்ற மலராக எங்கும் நிரம்பிக்கொண்டிருந்தார்.
இறந்து போவதற்கு ஒரு வாரம் முன்பு தனக்கு ஒரு புது கைக்கடிகாரம் வேண்டும் என்று கேட்டார். வாங்கிக்கொடுத்தேன். அவருடைய காலத்தின் கடிகாரம்போல அது ஐம்பதாண்டு உறுதியாக வேலை செய்யக் கூடியதல்ல. ஒரு வாரம்கூட ஆகவில்லை. அதற்குள் அதன் காலம் நின்றுபோய்விட்டது.
பொங்கல் குடி
பொங்கலுக்கு 220 கோடி ரூபாய்க்கு தமிழர்கள் குடித்திருக்கிறார்கள் என்று செய்தி வருகிறது. பருவமழை பொய்த்து, காவிரியில் தண்ணீர் விட மறுத்து, விவசாயம் அழிந்து போனாலும் பொங்கலை குடித்துக் கொண்டாடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. எதற்குத்தான் குடிப்பது என்று வரன்முறை இல்லையா? ஒரு சமூகம் கொண்டாட்டத்திற்கான எல்லா வழிமுறைகளையும் இழந்து, அனைத்திற்கும் குடியை மட்டுமே சார்ந்திருப்பதைவிட பண்பாட்டு அழிவு வேறு எதுவும் இல்லை. அடுத்த வருடம் இன்னும் கொஞ்சம் முன்னேறி பொங்கல் பானையில் கள்ளச் சாராயம் காய்ச்சி பொங்கல் கொண்டாடுவதைப் பற்றி யோசிக்கலாம்.
ஒரு கேள்வி
சென்னை புத்தகக் கண்காட்சியில் பலரும், ‘‘சார், உங்களை டிவியில் பார்த்திருக்கிறேன். உங்க புக் எதுவும் படிச்சதில்லை... நீங்க எழுதினதுல பெஸ்ட் புக் என்ன சார்... வாங்கிக்கறேன்’’ என்று கேட்கிறார்கள். நான் எப்படிச் சொல்லுவேன், ‘‘அந்தப் புத்தகத்தை நான் என் வாழ்நாளில் ஒருபோதும் எழுதப் போவதில்லை’’ என்று.
(இன்னும் நடக்கலாம்...)
நான் படித்த புத்தகம்
இந்தியாவின் பிணைக் கைதிகள்
றீ ஹெர்பர்ட் ஸ்டார்க்,
தமிழில்: ஜெ.நிர்மல்ராஜ்,
அனுராதா ரமேஷ்
ஆங்கிலோ இந்தியர்கள் இரண்டு நாகரிகங்களுக்கு இடையே அகப்பட்டுக்கொண்டவர்கள். வரலாற்றின் யுத்தத்தில் நடுவே எங்கோ சிக்கிக்கொண்டவர்கள். ஆங்கிலேயர்கள் அவர்களை தங்கள் இனத்தவராகக் கருதவில்லை. இந்தியர்களும் அவர்களை தங்கள் சமூகத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கவில்லை. ஆங்கிலோ இந்திய சமூகத்தின் இந்த துயர வரலாற்றை விவரிக்கிறது இந்த நூல்.
(விலை: ரூ.80/-,
வெளியீடு: சந்தியா பதிப்பகம்,
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-600083.
தொலைபேசி: 044-24896979.)
எனக்குப் பிடித்த கவிதை
என் தாத்தா இப்படித்தான் இறந்துபோனார்
என் தாத்தா
இறப்பதற்கு முன்பு
என்ன செய்தார் என்பதை
என் அப்பாவிடம்
இதோடு பலமுறை
திரும்பத் திரும்ப கேட்டுவிட்டேன்
நாடிபிடித்துப் பார்த்த வைத்தியர்
இன்னும் மூன்று மணி நேரம் தாங்கும் என்று
தாத்தாவிடமே சொன்னாராம்
தாத்தா திடகாத்திரமாக
படுக்கையில் உட்கார்ந்திருந்தாராம்
அவரேதான்
பந்தல் போடுகிறவனுக்கும்
தண்ணீர் வண்டிக்காரனுக்கும்
சொல்லியனுப்பினாராம்
தொலைவிலிருக்கும்
யாருக்கெல்லாம் சொல்லியனுப்பவேண்டும்
என்ன சமைக்க வேண்டும் என்பதை
பாட்டியைக் கூப்பிட்டு
அதே அதிகார தோரணையில் கூறினாராம்
பண்ணையாளிடம்
விதைக்கு வைக்க வேண்டிய
தானியம் பற்றிக் கூறி
கண்டித்து அனுப்பினாராம்
கொடுக்கவேண்டிய கடன்களையும்
வர வேண்டிய கடன்களையும் பற்றி
கணக்குப் பிள்ளையிடம்
தெளிவாக ஒரு முறை சொன்னாராம்
அவர் சாவுக்கான வேலையை
எல்லோரும் அவர் முன்னே
அவரவர் போக்கில் பார்த்துக் கொண்டிருக்க
சரியாக மூன்று மணி நேரம் கழித்து
ஒரு துளிக் கண்ணீர் இல்லாமல்
செத்துப் போனாராம்
மாஸ்டர் செக் அப்பிற்கான
இந்த மேசையில்
உடலைத் துழாவும் கருவிகளுக்கு இடையே
அச்சத்துடன்
படுத்திருக்கும்போதெல்லாம்
என் தாத்தாவைப் பற்றியே நினைக்கிறேன்.
- மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரனின் ஃபேஸ்புக் பக்கம்
புத்தகக் கண்காட்சியில் ஒரு இளைஞர் என்னை சந்தித்தார். ‘‘ஒரு கவிதை புக் வெளியிடணும்... அதுக்கு என்ன செலவாகும்?’’ என்றார். ‘‘அதெல்லாம் பண்ணாதீங்க... நிறைய பத்திரிகைகளில் பப்ளிஷ் பண்ணுங்க. பெயர் கிடைத்ததும் தானா புக் வரும்’’ என்றேன். அதற்கு அவர், ‘‘பத்திரிகைக்கு அனுப்பினா பத்திரிகைக்காரனுங்க அதை திருடி அவனுங்க பேர்ல போட்டுக்கிட்டா என்ன பண்றது’’ என்றார் சந்தேகமாக.
30 வருஷமா எழுதுறேன் சார்... இப்படி ஒரு சந்தேகம் ஒரு நாள் கூட எனக்கு வரல!