துளசி கொடுத்த உதட்டு முத்தம்... ஷாக் கௌதம்!





சிப்பிக்குள் முத்தாக மூடியே வைக்கப்பட்டிருந்த ‘கடல்’ ஹீரோ, ஹீரோயினை கடந்த வாரம் மீடியாக்களுக்கு காட்டினார் மணிரத்னம். சந்தர்ப்பத்தை சாதகமாக்கி கௌதம் - துளசி இருவரோடும் ஒரு காக்டெயில் பேட்டிக்கு தூண்டில் போட்டோம். ‘கண்ணா... ரெண்டு லட்டு தின்ன ஆசையா?’ என்பது போல போஸ் கொடுத்து கலக்கியது ஜோடி. இனி கலாய்க்கலாம் வாங்க...

‘‘ ‘கதை சொல்லக்கூடாதுன்னு மணி சார் சொல்லியிருக்கார்’னு தேய்ஞ்ச ரெக்கார்டை ஓட்டாம புதுசா என்ன சொல்லப் போறீங்க?’’ என்றதும் கலகல ரிங்டோன் தருகிறார் துளசி. ‘‘சீரியஸா கேட்குறப்போ ஏன் சிரிக்கிற?’’ என கௌதம் அதற்கு பிரேக் போட, ‘‘கேள்விக்கு பதில் சொல்ல முடியலைன்னா இப்படித்தான் சிரிச்சு மழுப்பிடுவேன். சிரிச்சு முடிக்கிற நேரத்துக்குள்ள பதிலை யோசிச்சிடுவேன்’’ என துளசி சமாளிக்க, ‘‘நான் ஒரு புது விஷயம் சொல்றேன் சார்’’ என ஆட்டத்தைத் தொடங்கினார் கௌதம்.
‘‘கடற்கரையில் துளசி என்னை கிஸ் பண்ற மாதிரி சீன். இது எனக்குத் தெரியாது. துளசிகிட்ட மட்டும்தான் மணி சார் மேட்டரை சொல்லியிருக்கார். ‘ஆக்ஷன்’ சொன்னதும் என் மேல விழுந்து லிப் கிஸ் கொடுத்தா பாருங்க... அப்படியே ஷாக் ஆகிட்டேன். அந்த சீன்ல துளசியைவிட அதிகம் டென்ஷன் ஆனது நான்தான்.’’

‘‘சும்மா கதை விடாதீங்க கௌதம். ஒரு ரொமான்ஸ் ஹீரோவோட மகன் இப்படி சொல்றதை நம்ப முடியலையே?’’
‘‘ஹய்யோ சார்! ரியலி... நான் பொய் சொல்லலை. பெங்களூர்ல கோ எஜுகேஷன் காலேஜ்லதான் படிச்சேன். ஆனா, பொண்ணுங்களோட பேசுறதுக்கே கூச்சப் படுவேன். இயல்பா நடிக்கிறதுல வேணா அப்பா மாதிரி இருக்கலாம். ஏன்னா அது ஜீன்ல இருக்கு. ஆனா, ரொமான்ஸ் சீன்ல நடிக்கும்போது கொஞ்சம் பயமாதான் இருந்துச்சு’’ என்று கௌதம் நிறுத்த, கிஸ்ஸிங் சீன் அனுபவத்தை விளக்கினார் துளசி. ‘‘காட்சியோட முக்கியத்துவத்தை மணி சார் விளக்கினதும், நடிப்புதானேன்னு நான் ரெடி ஆகிட்டேன். எதிர்பாராம கொடுத்ததால் நிஜமாவே கௌதம் ஷாக்காகிட்டார்...’’

‘‘அப்பா கார்த்திக் என்ன சொன்னார் கௌதம்?’’
‘‘மணிரத்னம் சார் கூப்பிட்டப்போ நானும் அப்பாவும்தான் போனோம். நடிக்கிறது முடிவானதும், அர்ஜுன் சாருக்கு ஜிம் பயிற்சியாளரா இருக்கிற சிவா எனக்கு டிரெயினிங் கொடுத்தார். மெரினா பீச்சுக்கு போய் பட்டினப்பாக்கம் மீனவர்களிடம் நிறைய கத்துக்கிட்டேன். கட்டுமரத்துல எப்படிப் போகணும், எந்தெந்த அலையை எப்படி எதிர்கொள்றது, கடல் நீச்சல் எப்படி அடிக்கணும்னு ஒரு மாசம் சொல்லித் தந்தாங்க. ‘நான் கார்த்திக் மகன்’னு அப்போ அவங்ககிட்ட சொல்லிக்கல. எப்படி நடிக்கணும்னு அப்பா எதுவும் சொல்லித் தரல. ஷூட்டிங் தொடங்குறதுக்கு முன்னாடியே எனக்கும் துளசிக்கும் நடிப்புப் பயிற்சி கொடுத்தாங்க. எல்லாத்தையும்விட முக்கியமா மணி சார் நிறைய கற்றுக்கொடுத்தார். டிரெய்லரை பார்த்துட்டு என்னைக் கட்டிப் பிடிச்சு அப்பா அழுதுட்டார். ரொம்ப ஹேப்பியா இருக்கார். எனக்கும் பெருமையா இருக்கு.’’



‘‘அம்மா, அக்கா உங்ககிட்ட என்ன சொன்னாங்க துளசி?’’
‘‘நடிப்புன்னா ரொம்ப ஈஸின்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ‘நான் மட்டும் ஸ்கூலுக்குப் போறேன். நீ ஜாலியா ஷூட்டிங் போறே’ன்னு அக்காவை கலாய்ப்பேன். ஆனா, நடிப்பு எவ்வளவு சீரியஸான விஷயம்னு கேமரா முன்னாடி நின்னப்போதான் புரிஞ்சுது. மணி சார் என்னை செலக்ட் பண்ணினப்போ குண்டா இருந்தேன். உடம்பைக் குறைக்கணும், அதே சமயம் பப்ளினஸ் போகக்கூடாதுன்னு மணி சார் கொடுத்த அட்வைஸ்னால டயட்டெல்லாம் இருந்து கொஞ்சம் குறைச்சேன்.’’

‘‘படிப்பு, நடிப்பு தவிர ரெண்டு பேருக்கும் வேறென்ன தெரியும்?’’
‘‘நான் ஹைட்டா இருக்கறத வச்சு கண்டுபிடிங்க பார்ப்போம்...’’ என்று துளசி இமைகளை பட்டாம்பூச்சியாகப் பறக்கவிட, ‘‘என்ன... பாஸ்கெட்பால் பிளேயர்தானே நீ?’’ என்று கௌதம் கரெக்டான பதில் சொல்ல, ‘‘ரொம்ப சாதாரணமா நினைக்காத கௌதம்... நான்தான் ஸ்கூல் டீமோட கேப்டன்’’ என கௌதம் தோளில் செல்லமாகத் தொற்றிய துளசி, ‘‘உன்னப் பத்தி சொல்லலீயே?’’ என்றார்.



‘‘என்னப் பத்தி என்ன சொல்றது? லாங் டிரைவ் போறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். கார், பைக் எது கிடைச்சாலும் போதும்... பெங்களூரிலிருந்து ஊட்டி, ஊட்டியிலிருந்து பெங்களூர். மறுபடியும் பெங்களூரிலிருந்து கோவான்னு என்.ஹெச்சில் பறக்க ஆரம்பிச்சுடுவேன். கடல் ஷூட்டிங் முடிஞ்சதும் அப்பா ஒரு கார் பிரசன்ட் பண்ணியிருக்கார். கூடிய சீக்கிரம் ஒரு லாங் டிரைவ் போகணும்...’’



‘‘துளசிக்கு தமிழ் சினிமாவில் ட்ரீம் ஹீரோ யார்?’’
‘‘மும்பையில இருந்தாலும் தமிழ்ப்படம் ஒண்ணு விடாம பார்த்துடுவேன். என்னோட ட்ரீம் ஹீரோ எப்பவும் ரஜினி சார்தான். மற்றபடி எல்லா ஹீரோக்களையும் பிடிக்கும்’’ என்று வம்பிலிருந்து துளசி நழுவ, கௌதமிடம் திரும்பினோம். ‘‘பெஸ்ட் ஆக்டர்னு நான் நினைக்கிறது மணி சாரைத்தான். ஹய்யோ... எப்படி நடிச்சுக் காட்டுவார் தெரியுமா? அவருக்குள்ள பிரமாதமான நடிகன் இருக்கான். அவர் படத்துல நடிக்க எனக்குத் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கணும்னு ஆசைப்படுறேன்!’’
மணி சார்... கேட்டுச்சா?
- அமலன்
படங்கள்: புதூர் சரவணன்