கர்நாடக சங்கீத உலகில், வாய்ப்பாட்டைத் தாண்டி வாத்தியத்தை மெயினாக வாசித்து பிரமிப்பை ஏற்படுத்திய பல வித்வான்களைப் பார்த்திருக்கிறோம். புல்லாங்குழலின் இனிய இசையால் ரசிகர்களை சொக்க வைத்தவர் வித்வான் மாலி. அவரது திறமையால், புல்லாங்குழல் இசை தெய்வீகமானது. அப்படி மாண்டலின் இசையை தெய்வீகமாக்கி, பல காலமாக ஸ்ரீநிவாஸ் நமக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
என்ன சொல்வது... மாண்டலின் என்கிற அந்த வாத்தியத்தில் நம் இசையின் கமகத்தை அவ்வளவு சுத்தமாகக் கொடுத்து, நம் காதையும், மனசையும் நிரப்பி ஆனந்தத்தில் அவர் திணற வைத்துக் கொண்டிருப்பது உண்மை. அவர் நாரத கான சபையில் ராஜேஷ் உடன் சேர்ந்து வாசித்த இசையைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஜி.என்.பி இயற்றிய ரஞ்சனி கீர்த்தனையை ஸ்ரீநிவாஸ் வாசித்த அழகைக் கேட்கும்போதுதான் ஜி.என்.பியின் இசைப் புலமை, கீர்த்தனை அமைத்த அழகு எல்லாம் புரிகிறது. எஸ்.டி.ஸ்ரீதர் வயலின் ரொம்ப அருமை. பட்டு கத்தரித்தது மாதிரி ஒரு அளவு எல்லாவற்றிலும்! தஞ்சாவூர் முருகபூபதி மிருதங்கம் ரொம்ப அநுசரணை. சஹானா ராகத்தை ஸ்ரீநிவாஸ் வாசிக்க, அந்த ருசியில் கேட்டவர்கள் எல்லாரும் ஸ்ரீநிவாஸுக்கு அந்தரங்க சகாக்கள்தான். ‘கிரிபைநெல’ கீர்த்தனை, தியாகராஜர் உருவாக்கிய பல ரத்தினங்களில் விசேஷமான ஒன்று.
மிருதங்கத்தைப் பொறுத்தவரை தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் ஸ்கூல், பாலக்காடு மணி ஐயர் ஸ்கூல், புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி ஸ்கூல், பழனி சுப்ரமணிய பிள்ளை ஸ்கூல்... இப்படி பல முக்கியமான மேதைகளால் இந்த அருமையான வாத்தியக் கலை உலகமெங்கும் பரவியிருக்கிறது. கஞ்சிரா, மிருதங்கம் இரண்டையும் தேன் போல வாசிக்கும் பிள்ளைவாளுக்கு குருபூஜை கும்பகோணத்தில் குடந்தை சுகுமாரன் தலைமையில் நடந்தது. இப்படி மேதைகளை நாம் நினைக்க நினைக்க... சங்கீதம் வளர்கிறது என்பது தெளிவாகிறது. அந்தப் பரம்பரையில் வந்த மிருதங்க வித்வானான தஞ்சாவூர் உபேந்திரன் அன்று மாண்டலின் ஸ்ரீநிவாஸுக்கு வாசித்துக் கேட்ட ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவருடைய சீடரான தஞ்சாவூர் முருகபூபதி, அப்படியே குருபக்திக்கு ஒரு வித்வான்தான். அன்று கச்சேரியில் ஸ்ரீநிவாஸ் வாசித்த தோடி, அரங்கில் இருந்த பல மேல்நாட்டு ரசிகர்களையும் ரசிக்க வைத்ததை உணர முடிந்தது. நம் தோடி, உலகத்தின் எந்தக் கோடியில் இருக்கும் ரசிகர்களையும் ஈர்க்கத்தான் செய்கிறது. அழகான ராகம், தானம், பல்லவிக்கு ராஜேஷ் கூட சேர்ந்து ஸ்ரீநிவாஸ், வயலினில் ஸ்ரீதர், ஸ்ரீரங்கம் கண்ணன் மோர்சிங், முரளி கடம்... இப்படி எல்லாம் சேர்ந்து வாசித்ததைக் கேட்டபோது, இதை ஸ்ரீரங்கநாதரே நாரத கான சபைக்கு வந்து கேட்டு ஆனந்தப்பட்டிருப்பாரோ என்று தோன்றியது.
இந்தியன் பைன் ஆர்ட்ஸ் அகாடமியில் ப்ரியா சகோதரிகளின் கச்சேரி. அடாணா ராகத்தில் ‘மேலகாதுர’ கீர்த்தனையை அவர்கள் பாடும்போது டாண் டாண் என்று சங்கதிகள் வந்து விழுந்தன. அன்று அவர்கள் பாடிய ஜெயமனோஹரி ராகம் ஜெயமாக இருந்தது. கரஹரப்ரியா ராகத்தின் ஜன்யம் இது. பக்கத்திலிருந்த ஒருத்தர், ‘‘போகும்போது ஆபோகி. வரும்போது ஸ்ரீரஞ்சனி மாதிரி தெரியறது’’ என்றார்.
பக்கத்தில் இருந்தவர், ‘‘ஆமா! போகும்போது அதெல்லாம் யோசிக்க முடியாது. போறதுக்கு ஒரு ராகம், வர்றதுக்கு ஒரு ராகம் அப்படீன்னு யாரும் பண்ணி வைக்கல. ராகத்த முழுசா மனசுல வாங்கிண்டு, அந்த ராகத்துக்கு ஏத்த ஜீவ ஸ்வரங்களைப் பாடணும். இல்லாட்டி ஆஹா! ‘போகி’யில் ஸ்ரீரஞ்சனியைச் சேர்த்து, ஜெயமனோஹரியை பழசான வஸ்துவா அனுப்பி வைச்சுடுவா. தை பிறந்தாவது உமக்கு ஞானம் வருதான்னு பாப்போம்’’ என்றார்.
அதே சமயத்தில் ‘யக்ஞாதுல’ கீர்த்தனை ‘பஹூ ஜென்மம் புலுவாஸன’ பாட ஆரம்பித்தபோது, கேள்வி கேட்டவர் ‘‘எல்லாம் போன ஜென்மத்து வாசனைதான். இவர் பக்கத்துல உக்காந்துண்டேனே” என்று அங்கலாய்த்தார்.
இந்தக் கச்சேரியில் ‘வராளி’ ராகத்துல ‘கருணஜுட’ க்ருதிதான் மெயின். எம்.ஏ.கிருஷ்ணஸ்வாமி வாசித்த ராகம், ‘கூடவே வராள்... இதோ’ என்கிற மாதிரி தொடர்ந்தது. அருமையான வாசிப்பு. நெய்வேலி ஸ்கந்த சுப்ரமணியம் மிருதங்கம் வாசித்த அழகு, மடிப்பாக்கம் முரளி கடம், சுருதி சுத்தம் எல்லாம் கச்சேரியைத் தூக்கி நிறுத்திவிட்டன.
ஓ.எஸ்.அருண் பாட்டு என்றாலே ஒரு தனி மயக்கம்தான் ரசிகர்களுக்கு. ‘நாம அந்த ஸங்கீர்த்தனத்த கேட்டே ஆகணும்’ என ஒரு வைராக்கியம். முல்லைவாசல் சந்திரமௌலி வயலின் வாசிக்கும்போது, பாடுவது மாதிரியே ஓர் உணர்வு. கையிலும், முகத்திலும் ஸங்கதி விழுவது பாவமாகத் தெரிந்து விடும். ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் மிருதங்கம் இருந்தால், பாடுகிறவர்களுக்கு வேலையே இல்லை. மிருதங்கம்தான் பாடி விடுமே!
‘வாதாபி கணபதிம்’, பிறகு ‘வருவாரோ’ என்ற சாமா ராகத்தில் அமைந்த கோபாலகிருஷ்ண கீர்த்தனைக்கு ராஜாராவ் வாசித்தபோது சந்தேகமே எழவில்லை... ‘வந்தாச்சு, வரம் தந்தாச்சு’ என்றுதான் தோன்றியது. யதுகுல காம்போதியை விவரமாகப் பாடியது அருமை. ‘ஹெச்சரிககாரா’ கீர்த்தனை, பிறகு ஸுமனேச ரஞ்சனியில் ருக்மணி ரமணி எழுதிய ‘தாமதம் ஏனோ அம்மா’ கீர்த்தனை இனித்தது. ‘செடே புத்தி மாநுரா’, வாழ்க்கைத் தத்துவம் சொல்லும் அருமையான தியாகராஜ கீர்த்தனை. ‘‘இவ்வுலகத்தாருக்கு அவரவர் செய்த பழவினைப்படியே பலன் கிடைக்கும். இது தெரியாதா? ஓ, மனமே! கெட்டுப்போகும் புத்தியை விட்டுவிடு’’ என்று நடைமுறை வாழ்க்கையின் நிதர்ஸன உண்மைகளை பொருத்தமாக மிரட்டும் ராகத்தில் தந்திருக்கும் அந்த மகானுக்கு என்ன தருவது. தாள விசேஷமாக இந்தப் பாட்டில், வீச்சுல மூணு தள்ளி ஆரம்பிக்கும். புத்தியானது எல்லாத்தையும் தள்ளிப் போடச் சொல்லும். ‘‘அப்படிப் பண்ணாதே... இப்பவே ‘எல்லாம் வாஸுதேவ மயம்’ என்று உணர்ந்துகொள்’’ என்று இதன்மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் தியாகராஜர். அருணின் கரஹரப்ரியா ராகம் அருமை. ராஜாராவ் தனி ஆவர்த்தனம் மோஹனராம் கடத்துடன் கேட்டது காதிலேயே நிற்கிறது இன்னமும்.
இந்த சீஸனில் மியூசிக் அகாடமியில் நடந்த நெய்வேலி சந்தானகோபாலன் கச்சேரி ஒரு நல்ல அனுபவம்தான். பரம சௌக்கியமான, நிதானமான கச்சேரி. ‘ராமநாதம் பஜேஹம்’ கீர்த்தனை, ‘மானஸ குருகுஹ’ கீர்த்தனைகள் எல்லாம் மனதை வருடின. டி.வி.ராமானுஜாச்சார்யலு வயலினில் கொஞ்சினார். மாதிரிமங்கலம் ஸ்வாமிநாதன் மிருதங்கம், பழனி ஸ்கூல் பாணியே ரொம்ப அமிர்தமாக இருந்தது.
சீஸன் முழுக்கவே எல்லா கச்சேரிகளும் களைகட்டின. பாட்டுக்கும் சாப்பாட்டுக்கும் சரியான போட்டி சபாக்களில். இளம் கலைஞர்கள் பலரும் சக்கைப் போடு போட்டனர். ‘ஆஹா, முடிந்து விட்டதா?’ என்று யோசிக்கும் முன்னமே, இதோ வந்துவிட்டது. ‘திருவையாறு உற்சவம்’. அதில் அத்தனை பிரபலங்களும் கலந்து கொண்டு அஞ்சலி செய்ய உள்ளனர் தியாகப்ரம்மத்துக்கு.
பரூர் வயலின் பாணியில் உலகையே நாதமயமாக்கி, நாதப்ரம்மம் அடைந்த சங்கீத கலாநிதி எம்.எஸ்.கோபால கிருஷ்ணனுக்கு இந்த சங்கீத சீஸனை சமர்ப்பணமாக்குவோம்.
படங்கள்: புதூர் சரவணன்