தமிழுக்கு கௌரவம்!





பிப்ரவரி 24ம் தேதி... அமெரிக்காவின் ஹாலிவுட்டில் இருக்கும் டால்ஃபி தியேட்டரில் பட்டுப்புடவை அணிந்தபடி படபடக்கும் இதயத்தோடு காத்திருப்பார் பாம்பே ஜெயஸ்ரீ. ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் அவர் பாடிய பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என்பது அந்தக் கணத்தில் தெரிந்துவிடும்.

எனினும் தமிழர்கள் ஆஸ்கர் குறித்து பெருமிதப்படுவதற்கு அவர் காரணமாகிவிட்டார். 2009ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய இரட்டை விருதுகளுக்குப் பிறகு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார் ஜெயஸ்ரீ. ‘கண்ணே... கண்மணியே...’ என்ற அவரது தாலாட்டுப் பாடல் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இருக்கிறது. ஒரு தமிழ்ப் பாடல் ஆஸ்கர் பரிந்துரை வரை போனதில் ஒவ்வொரு தமிழனும் கர்வம் கொள்ளலாம்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் மிச்செல் டன்னா ஏற்கனவே ஜெயஸ்ரீயின் ஆல்பங்களை ரசித்ததில் வந்த வாய்ப்பு இது. பாடலையும் அவரையே எழுதச் சொல்ல, காலம் காலமாக தமிழ்நாட்டுத் தாய்மார்கள் குழந்தையை எப்படிக் கொஞ்சுவார்களோ, அப்படியான வார்த்தைகளைக் கோர்த்து எளிமையாகப் பாடிவிட்டார் அவர். அமெரிக்கக் குழந்தைகளும்கூட இந்தப் பாடலில் சொக்கித் தூங்கலாம்.
ஒரு தாயின் இதயத்திலிருந்து வெளிப்படும் இசைக்கு மொழி வித்தியாசம் ஏது?
- டி.எம்