வெங்காயம் கிலோ 10 ரூபாய்! ஆசியாவின் மிகப்பெரிய வெங்காயச் சந்தை



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

    ‘உ
ழுதவன் கணக்கு பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது’ என்பார்கள். உரிக்காமலே கண்ணீரை வரவழைக்கும் வெங்காயத்தின் விலை உயர்வால், பயிரிட்ட விவசாயிகளாவது சந்தோஷம் கண்டிருப்பார்களா என்று பார்த்தால் இல்லை! செஞ்சுரி அடித்து இன்னமும் ஐம்பது ரூபாய்க்கும் குறையாமல் விற்றுக்கொண்டிருக்கிறது ஒரு கிலோ வெங்காயம். இந்த நிலையிலும் விளையும் இடத்தில் அதன் விலை 10 ரூபாய்தான். இதற்குக் காரணம் என்ன? உண்மையிலேயே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு லாபம் பார்ப்பவர்கள் யார்? மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய மண்டியிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்...

நாசிக்கிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் லாசல்காவ் என்ற ஊரில்தான் இந்த மண்டி உள்ளது. வெங்காய உற்பத்தியும் அதை சந்தைப்படுத்துவதும்தான் லாசல்காவ் மற்றும் அதை சுற்றியிருக்கும் சுமார் 20 கிராம மக்களின் பிரதான தொழில். தோராயமாக 15 ஆயிரம் மக்கள் வசிக்கும் லாசல்காவ் ஆசிய அளவில் பிரபலமாக விளங்குவதற்கும், அந்த நகரின் வளர்ச்சிக்கும் வெங்காய வியாபாரம் மட்டுமே காரணம். பல மாநிலங்களுக்கும் பல்வேறு வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து வெங்காயம் ஏற்றுமதியாகிறது. (ஏற்றுமதிக்கு இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.)

வெங்காயத்துக்கு இப்போது ஏற்பட்ட கிராக்கி, லாசல்காவை பரபரப்பான பிரதேசமாக்கியிருக்கிறது. இங்கிருக்கும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் வெங்காய மண்டிக்கு நாள்தோறும் சராசரியாக 1,100 டிராக்டர் வெங்காயம் வந்து குவிகிறது. ஒரு நாளில் இரண்டு பகுதியாக 6 மணி நேரம் வெங்காய ஏலம் நடக்கிறது. முதல் ஏலம் காலை 9.30க்கு துவங்கி பகல் 12.30 மணி வரை. காலை 8 மணிக்கெல்லாம் மண்டி முழுவதும் மனிதத் தலைகளாகவும் டிராக்டர்களுமாகவே காட்சி தருகின்றன.

உள்ளூர் வியாபாரிகளும், நாசிக் போன்ற அருகாமை நகரங்களில் இருந்து வரும் வியாபாரிகளும், வெங்காயத்தின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயித்து ஏலம் கேட்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி 100 கிலோவுக்கு ரூ.1,200 வரை விலை கிடைத்தால் விவசாயிகள் ஓரளவு திருப்தியுடன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு பணத்துடன் கிளம்பி விடுகிறார்கள்.

கட்டுப்படியாகாது என்று கருதும் சில விவசாயிகள் பிற்பகல் 2.30 மணிக்கு துவங்கும் இரண்டாவது சுற்று ஏலத்துக்கு காத்திருக்கிறார்கள். மாலை 6.30 மணிக்கு அன்றைய தின வியாபாரம் முடிகிறது.

ஏலத்தின்போது வியாபாரிகளும் விவசாயிகளும் பரஸ்பரம் மோதிக் கொள்வது இங்கு சகஜமான காட்சி. சில வியாபாரிகள் அநியாயத்துக்கு விலையை குறைத்துக் கேட்கும்போது ஆத்திரமடையும் விவசாயிகள் ஒன்றுசேர்ந்து அவரை புரட்டி எடுப்பதுண்டு. இதனால் பல வியாபாரிகள் பாதுகாப்புக்காக தங்களுடன் அடியாட்களைக் கூட்டி வருகிறார்கள்.  

மாற்றுத் திறனாளியான நானா ஜாதவ் என்ற விவசாயி, ‘‘நாங்கள் அதிக லாபம் சம்பாதிக்க விரும்பவில்லை. எனக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த முறை 20 குவிண்டால் வெங்காயம் பயிரிட்டு அறுவடை செய்ய ரூ.25 ஆயிரமும் நான்கு மாத உழைப்பும் தேவைப்பட்டது. இப்போது 1 கிலோ வெங்காயத்தை ரூ.11க்குத்தான் ஏலம் கேட்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் குறைந்தது எனக்கு 3 ஆயிரம் ரூபாய் நஷ்டம்’’ என்றார்.

அசோக் மான்கட் என்ற விவசாயிக்கு மீடியாக்கள் மீது கடுமையான கோபம். ‘‘ஏதோ வெங்காய விலை உயர்வுக்கு விவசாயிகள்தான் காரணம் என்பது போலவும், நாங்கள் கொள்ளை லாபம் பார்ப்பது போலவும் பலரும் விமர்சனம் செய்கிறார்கள். சாதாரண சமயங்களில் ஒரு கிலோ 6 ரூபாய் ஏலம் போவதே பெருங்கஷ்டம். வெங்காயத்துக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டபோது கிலோ 25 ரூபாய்வரை ஏலம் போனது உண்மைதான். அப்போது லாபம் சம்பாதித்தது 50 ஏக்கர், 100 ஏக்கர் என நிலம் வைத்திருக்கும் பெரிய விவசாயிகள்தான்’’ என்கிறார் அவர்.

பாபுராவ் பால்கேவுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. ரூ.35 ஆயிரம் கடன் வாங்கி 32 குவிண்டால் வெங்காயம் பயிர் செய்திருக்கிறார் இவர். தவறான நேரத்தில் பெய்த பருவமழையால், சரி பாதி அழுகி நாசமாகி விட்டது.

ஆனால் வியாபாரிகளோ வேறுவிதமாகக் கூறுகின்றனர். ‘‘விவசாயிகள் எப்போதுமே செலவுக் கணக்கை அதிகமாக சொல்வார்கள். பருவம் தவறிய மழையால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த வெங்காயப் பயிர்கள் அழுகி நஷ்டம் ஏற்பட்டது உண்மைதான். அப்போதும்கூட பலரும் அழுகிய வெங்காயத்தைக்கூட விட்டு வைக்காமல் எங்கள் தலையில் கட்டினார்கள். நஷ்டத்தை சுமந்தது நாங்கள்தான். இப்போது கூட மண்டியில் இருந்து 10 ரூபாய்க்கு வாங்கும் ஒரு கிலோ வெங்காயத்தை அதிகபட்சம் ரூ.15க்குத்தான் விற்கிறோம். இங்கிருந்து வெளி நகரங்களுக்குச் செல்லும்போது வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.50 வரை உயர்வதற்கு நாங்கள் எப்படி பொறுப்பு ஏற்க முடியும். மொத்தத்தில் விவசாயிகளையும் எங்களையும் விட இடைத்தரகர்கள்தான் நல்ல லாபம் பார்க்கிறார்கள்’’ என்கிறார் ராம்ராவ் பவார் என்ற மொத்த வியாபாரி.

பவாரின் கூற்று இப்படி இருந்தாலும், மண்டியில் ஏலத்தில் எடுக்கும் மொத்த வியாபாரி தனது செலவு போக சாதாரணமாக 10 சதவீதம் மார்ஜின் வைத்து, தனக்கு அடுத்த நிலையில் இருக்கும் வியாபாரியிடம் விற்பனை செய்கிறார். அந்த வியாபாரிகளிடம் இருந்து சில்லரை மார்க்கெட்டுக்குப் போகும்போது வெங்காயத்தின் விலை இரண்டு மடங்காகிவிடுகிறது. சில்லரை வியாபாரி தனக்கும் ஒரு குறிப்பிட்ட மார்ஜின் வைத்து வியாபாரம் செய்யும்போது கிலோ வெங்காயத்தின் விலை குறைந்தது ரூ.50 ஆகிவிடுகிறது. லாசல்காவ் மண்டியில் கிலோ ரூ.10க்கு விற்பனையாகும் வெங்காயம் நம் ஏரியாவில் இருக்கும் வியாபாரி கடைக்கு வரும்போது 5 மடங்கு விலை உயர்ந்து விடுவது இப்படித்தான்.

‘‘சீனாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் கிலோவுக்கு ரூ.20 வரை கொடுத்து வெங்காயம் இறக்குமதி செய்யும் அரசாங்கம், எங்களிடமும் நேரடியாக வாங்கினால் தட்டுப்பாடும் ஏற்படாது, இந்த அளவுக்கு விலையும் உயராது’’ என்கிறார் சந்தீப் கோடே என்ற விவசாயி. டிசம்பர் சாகுபடி முடிந்து விட்ட நிலையில், லாசல்காவைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் விளைச்சல் குறைந்து விட்டது. இனி மார்ச் மாதம்தான் அடுத்த அறுவடை. அதுவரை சந்தையில் வெங்காய விலை குறைய வாய்ப்பில்லை என்கின்றனர்.
 லாசல்காவிலிருந்து ராபர்ட் அமல்ராஜ்
படங்கள்:
கோவிந்தன் சேவன்