‘‘நமஸ்காரம் ராமய்யர். சங்கீத சீஸன் முடிஞ்சுதா..?’’
‘‘ஓய் சுப்பண்ணா! முடிஞ்சுதான்னு கேக்காதீரும். புது வருஷத்துல ஆரம்பிச்சுடுத்தானு கேளும். சங்கீத சீஸன் என்னைக்கும் பகுளபஞ்சமி வரைக்கும் ஏதாவது ஒரு சபாவில நடந்துண்டே இருக்கும்...’’
‘‘அதென்ன பகுளபஞ்சமி?’’
‘‘சுப்பண்ணா! தியாகப்ரும்மம் தை மாதம் பகுளபஞ்சமி திதியில் 1847ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதியன்று முக்தி அடைந்தார். அந்த திதி என்னைக்கு வருதோ, அதிலிருந்து அந்த வருஷத்து கச்சேரிகள் தியாகராஜருக்கு அஞ்சலியாக ஆரம்பிக்கும்...’’
‘‘ஐயர்வாள்! இந்த பஞ்சரத்ன கீர்த்தனைகளை எல்லா வித்வான்களும் சேர்ந்து பாட ஆரம்பிச்சதே 1942லேர்ந்துதான்னு சொல்றாளே..?’’
‘‘பெரிய பின்னணியே இந்த உற்சவத்துக்கு இருக்கு சுப்பண்ணா! உமக்கு தஞ்சாவூர் மகிமை தெரியுமா? ஸ்டேஷன்ல இறங்கின உடனே பாம்பே ஸ்வீட்ஸ் கடை கமகமன்னு விடிய கார்த்தாலயே ஸ்வீட்டோட நம்மள அழைக்கிற மாதிரி இருக்கும். நம்ம வித்வான்களுக்கு வெங்கடா லாட்ஜ்ல டிபன், காபி சாப்பிடாம திருவையாறுக்கு போகவே மனசு வராது. இப்படி வயித்துக்கு ஈந்த பிறகு செவிக்கு தியாகராஜர் சந்நதிக்கு வந்தவுடனே ஈயப்படும்.
அஞ்சு நாள் நடந்தது இந்த வருஷ உற்சவம். தேர்த் திருவிழா மாதிரி கூட்டம். இந்த வருஷம் தியாகராஜர் இல்லத்த புதுப்பிச்சு, ரொம்ப அழகா எல்லா வித்வான்களும் பெருமைப்படறா மாதிரி அமைச்ச உற்சவ கமிட்டிக்கு நாம எல்லோரும் நன்றிக்கடன் பட்டிருக்கோம். முதல் நாள் துவக்க விழா முடிஞ்சு உன்னிகிருஷ்ணன், டி.என்.கிருஷ்ணன் வயலின், ஸ்ரீராம் பார்த்தசாரதி, டி.எம்.கிருஷ்ணா பாட்டுன்னு அமர்க்களம். இரண்டாவது நாள் காலைல ஒன்பது மணிக்கு திருவையாறு தமிழ்நாடு இசைக்கல்லூரி மாணவர்களின் நாதஸ்வரத்தோட ஆரம்பிச்சு, சாயங்காலம் ஏ.கே.சி.நடராஜன் பாட்டு, ராஜேஷ் வைத்யா வீணை, டி.என்.எஸ்.கிருஷ்ணா பாட்டு, விஜய் ஜேசுதாஸ் பாட்டு, கர்நாடிகா பிரதர்ஸ் பாட்டு, பிறகு கே.ஜே.ஜேசுதாஸ் பாட்டு. ஜேசுதாஸ் அமர்க்களமா பாடின உடனே ஒரு ரசிகர் பரவசமா கத்த, போலீஸ் வந்துதான் அடக்க முடிஞ்சுது. உடனே ஜேசுதாஸ், ‘இந்த சந்நதில வந்து பாடினா பேட்டரி சார்ஜ் ஆனா மாதிரி ஒரு வருஷத்த ஓட்டலாம். இங்க தியாகராஜர் புகழ்தான் பாடணும்’னு ரொம்ப அழகா சொன்னார்.
மூன்றாவது நாள் சீர்காழி சிவசிதம்பரம், கிருஷ்ணகுமார் தம்பதிகள், காயத்ரி கிரிஷ்னு பல பிரபலங்கள். அன்னிக்கு மெயினா ருத்ரபட்டினம் சகோதரர்களோட நிகழ்ச்சி. நான்காம் நாள் 24ம் தேதி பகுளபஞ்சமி அன்னிக்கு பஞ்சரத்ன கீர்த்தனைய எல்லாக் கலைஞர்களும் பாடினா...’’
‘‘யார் யாரெல்லாம் வந்திருந்தா?’’
‘‘சுதா ரகுநாதன், காயத்ரி, ஆலப்புழை வெங்கடேசன், சாரநாதன், ஓ.எஸ்.அருண், அசோக்ரமணி, அரித்வாரமங்கலம் பழனிவேல், உமையாள்புரம் சிவராமன், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் இப்படி பல வித்வான்கள் வழிநடத்தி பஞ்சரத்ன கீர்த்தனைய தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினா. அந்தப் பந்தல்ல ஆயிரத்துக்கும் மேல கலைஞர்கள் சேர்ந்து பாடற அனுபவமே தனி...’’
‘‘கேக்கிறவாளுக்கு?’’
‘‘அவா எல்லாம் பஞ்சரத்ன கீர்த்தனைல முழுகிடுவா. அன்னிக்கு இரவு சுதா ரகுநாதன் பாட்டு, கதிரி கோபால்நாத் சாக்ஸபோன். கடைசி நாளைக்கு அசோக் ரமணி, ஓ.எஸ்.அருண் கச்சேரிக்குப் பிறகு, மாண்டலின் ஸ்ரீநிவாஸ், ராஜேஷ் இசைக்கு, பழனிவேல் தவில், உஸ்தாத் ஜாகீர்ஹுசேன் தபேலா. மாண்டலின் சும்மா கொஞ்ச நேரம் வாசிச்சுட்டு, அவாளுக்கு தனி விட்டுட்டா. ஒரு 45 நிமிஷம் பழனிவேலும் ஜாகீரும் வாசிச்ச தனி, பிரளயம் வந்தா மாதிரி இருந்தது.’’
‘‘தியாகராஜர் அஞ்சலிக்கும், தனி ஆவர்த்தனத்துக்கும் என்ன சம்பந்தம்?’’
‘‘ஓய்! நான்காம் நாள் சிக்கல் குருசரண் கொஞ்சம் பாடி, உமையாள்புரம் சிவராமன் தனி பிரமாதமா வாசிக்கலயா? அந்தக் காலத்துல உஞ்சவிருத்தி எடுத்து, வீதி பஜனையோட
மிருதங்கம் சேர்ந்து ரசிகாள பரவசப்படுத்திருக்கு. தியாகராஜருக்கு லயத்து மேல ரொம்ப ஈடுபாடு. ‘ஸொகஸீகா ம்ருதங்க தாளமு’ன்னு பாடியிருக்காரோல்லீயோ? இதெல்லாம் சேர்ந்துதான் அஞ்சுநாள் மறக்க முடியாத உற்சவம். காவேரிக் கரையில, தியாகராஜர் சந்நதியில, அத்தனைக் கூட்டத்துக்கு நடுவுல அஞ்சலி செய்யக் குடுத்து வச்சுருக்கணும்!’’
‘‘ஐயர்வாள்! இந்த சீஸன்ல பாடின ஆர்ட்டிஸ்ட்களைப் பத்தி கொஞ்சம் பட்டியல் போட்டுச் சொல்லுங்களேன்...’’
‘‘அது கொஞ்சம் நீளமா போகும். ஒரு சாம்பிள் மட்டும் தர்றேன்...
பக்திக்கு
அருணா சாய்ராம்புத்திக்கு
சுதா ரகுநாதன்சுத்தத்துக்கு
சௌம்யாதன்னை மறந்த நிலைக்கு
பாம்பே ஜெயஸ்ரீஸ்பஷ்டத்துக்கு
நித்யஸ்ரீபுதுமைக்கு
சஞ்சய்இனிமைக்கு
உன்னிகிருஷ்ணன்சம்பிரதாயத்துக்கு
கிருஷ்ணாகற்பனைக்கு
அசோக் ரமணிஉழைப்புக்கு
விஜய்சிவாத்ரிஸ்தாயிக்கு
ஜேசுதாஸ்‘மடி’க்கு
சந்தானகோபாலன்இப்படி இன்னும் பல நட்சத்திரங்களைப் பட்டியல் போடலாம். எத்தனையோ பேர் இந்த வருஷம் தங்களை பிரமாதமா வெளிப்படுத்திண்டா! அடுத்த வருஷ சீஸன்ல அவங்களைப் பத்தி திரும்பவும் பேசுவோம்.’’
‘‘ரொம்ப நன்றி ஐயர்வாள்!’’
சங்கீத சமுத்திரன்