டீ கோஸ்டர், டேபிள் மேட், டெலிபோன் மேட், பிரிட்ஜ் கவர், சோபா கவர், சுவர் அலங்காரம்... இப்படித் திரும்பின பக்கமெல்லாம் கலர் கலராக வரவேற்கிறது ராதாவின் வீடு. அத்தனையும் உல்லன் வேலைப்பாடு!
''என்னதான் பிளாஸ்டிக்லயும் மத்த மெட்டீரியல்லயும் டேபிள் மேட், டி.வி கவரெல்லாம் கிடைச்சாலும், உல்லன்ல செய்யற அழகே தனி. உல்லன் பொருள்கள் உங்க ஒட்டுமொத்த வீட்டையும் அழகாக்கும். நிறைய கைவினைக்கலைகள் கத்துக் கொடுக்கறேன். அதுல உல்லன் மேட் கத்துக்க வர்றவங்க எண்ணிக்கைதான் ரொம்ப அதிகம்’’ என்கிற ராதா, இதைக் கற்றுக்கொண்டு, தொழிலாகத் தொடங்க நினைப்போருக்கு வழிகளைக் காட்டுகிறார்.
என்னென்ன தேவை? முதலீடு?‘‘உல்லன் நூலும் பின்றதுக்கான ஃபிரேமும் மட்டுந்தான் தேவை. உல்லன் நூல், ஒரு பந்து பத்து ரூபாய்க்கே கிடைக்கும். பெரிய முதலீடுனு பார்த்தா ஃபிரேம் மட்டுந்தான். சதுரம், செவ்வகம், அறுகோணம்னு நாலஞ்சு ஷேப்ல ஃபிரேம் தயார் பண்ணி வச்சுக்கணும். அதுக்கு 1500 ரூபாய் வரை செலவாகும். ஒரு முறை செய்து வச்சா, வருஷக்கணக்குல உழைக்கும்.’’
என்னென்ன செய்யலாம்? ‘‘சாதாரண டீ கோஸ்டர்லேர்ந்து, டைனிங் டேபிள் மேட், சோபா, டி.வி கவர்னு என்ன வேணா செய்யலாம். இந்த அடிப்படையைக் கத்துக்கிட்டா, இதே டெக்னிக்ல சணல் அல்லது நைலான் ஒயர் உபயோகிச்சும் பண்ணலாம். சணல்ல பண்றதை மிதியடியாகவும் உபயோகிக்க முடியும். நைலான் ஒயர்லயும், உல்லன்லயும் பண்றதை, கண்ணாடி ஃபிரேம் போட்டு, சுவர்லயும் மாட்டலாம்.’’
விற்பனை வாய்ப்பு? லாபம்?‘‘வீடுகள்ல வாங்குவாங்க. பிளாஸ்டிக் மேட் சீக்கிரமே கிழிஞ்சு போகும். வெளுக்கும். உல்லன் எதுவுமே ஆகாது. அழுக்கானா கழுவிக் காய வச்சா புதுசு போலாயிடும். டி.வி., பிரிட்ஜ் மாதிரி அயிட்டங்களை மூடி வைக்கிறப்ப, கீறல் ஏற்படுத்தாது. குறைஞ்சது 20 ரூபாய்லேர்ந்து 250 ரூபாய் வரைக்கும் விற்கலாம். 50 சதவீத லாபம் நிச்சயம்.’’
பயிற்சி?‘‘ஒரு நாள் பயிற்சில மெட்டீரியலோட சேர்த்து 3 மாடல்கள் கத்துக்க 300 ரூபாய் கட்டணம்.’’
ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்