கரிசலில் வாழ்ந்த காட்டு யானைகள்



2015ன் சென்னை புத்தகக் காட்சி தொடங்கிவிட்டது. புத்தகங்கள் அழைத்துச் செல்லும் வழியில் காணக் கிடைக்கும் தரிசனங்கள் மகத்தானவை. இந்த வருடத்தில் அதிகம் கவனத்துக்குள்ளாகியிருக்கும் சில புத்தகங்களின் அறிமுகம் தருகிறார்கள் அவற்றின் ஆசிரியர்கள்...

‘‘‘சஞ்சாரம்’ என் ஏழாவது நாவல் (வெளியீடு: உயிர்மை பதிப்பகம், விலை: ரூ.370/-). தமிழ் அடையாளமாகக் கருதப்படும் நாதஸ்வரம், மேளம் என்ற மங்கள இசையை, அதை வாசிக்கும் மரபான இசைக்கலைஞர்களை, அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை, சாதீய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளான அவலத்தைப் பற்றிப் பேசக் கூடியது. குறிப்பாக, கரிசல் நிலத்து நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கையை இந்நாவல் முன்னெடுக்கிறது.

இதன் நானூறு பக்கங்களும், அழிந்துபோன கரிசலின் பண்பாட்டு மாற்றங்களை நாதஸ்வரக் கலையின் வழியே பேசுகின்றன. கரிசல் வெயிலின் ஊடே தொலைதூர கிராமத்தை நோக்கி நடந்து செல்லும் நாதஸ்வரக் கலைஞர்களை என் பால்ய காலத்தில் கண்டிருக்கிறேன். கிராமத்து மக்களுக்கு வேறு எந்த வாத்தியத்தை விடவும் நாதஸ்வரம் கேட்பதே பிடித்திருக்கிறது. அதைத் தங்கள் மண்ணின் இசையாகவே விவசாயிகள் நம்புகிறார்கள். எல்லா கரிசல் கிராமங்களிலும் ஒலித்த ஒரே இசை நாயனமும், மேளமும்தான்.

தஞ்சை மண்ணில் கேட்கிற நாதஸ்வரம், கோயில் யானையைக் காண்பது போல வசீகரமானது. கும்பகோணம், மாயவரம், செம்பனார்கோயில், சிதம்பரம், சீர்காழி, தஞ்சாவூர் என எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் மெய்சிலிர்க்க வைக்கும் நாதஸ்வர இசையைக் கேட்க முடியும்.அதே நாதஸ்வர இசை கரிச லில் ஒலிக்கும்போது யானையின் கம்பீரம் கொண்டதாக இல்லை.

மாறாக நாட்டுப்பசுவைப் போல அடக்கமாகவும் நெருக்கமாகவும் இருக்கிறது. விதிவிலக்காக கரிசலிலும் சில காட்டு யானைகள் வாழவே செய்தன. அந்த இசைக் கலைஞர்கள் நிகரற்றவர்கள். தான் யானை என்பதை உணர்ந்தவர்கள்; உக்கிரமான கோடை மழையென இசையைப் பொழிந்தவர்கள். காலத்தின் புகை மூட்டத்தில் அவர்கள் மறைந்து போய்விட்டார்கள்.

இந்த நாவல் நாதஸ்வர இசையின் மேன்மையை மட்டுமே சொல்ல வரவில்லை. இந்த இசைக் கலைஞர்களின் வாழ்க்கைத் துயரத்தை, அலைக்கழிப்பை, தனிமையை, கடந்த காலப் பெருமைகளை, மறக்க முடியாத நினைவுகளைப் பதிவு செய்யவே முற்படுகிறது.வீழ்ச்சியுற்றுக் கொண்டிருக்கும் இக்கலையின் மீது நம்பிக்கை வெளிச்சத்தைப் படர விடுவதே நாவலின் மையம்.

முந்தைய எனது நாவல்களிலிருந்து மாறுபட்ட கதை சொல்லும் முறை, குறிப்பாக நாட்டுப்புறக் கதைகளின் தொடர்ச்சி போன்ற கதை சொல்லலை இந்த நாவலில் முன்னெடுத்திருக்கிறேன். இது வாசிப்பில் புதியதொரு அனுபவத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்!’’

எஸ்.ராமகிருஷ்ணன்