ரஜினி சூப்பர் தனுஷ் ஸ்வீட் சூர்யா அழகு ஆடுகளம் நாயகி ஆனந்தம்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

‘வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாகளா...

உன்னை வெயிலுக்குக் காட்டாம வளத்தாங்களா...’


 தப்ஸி பன்னுவை பார்க்கிற யாருக்கும் இப்படித்தான் பாடத் தோன்றும். பெயருக்கேற்ப ஸ்வீட் அண்ட் சாஃப்ட் பொண்ணு, இந்த மிஸ் பன்னு! ‘ஆடுகள’த்தில் பின்னியெடுத்ததற்காக பொக்கேக்கள் குவிந்து கொண்டிருக்க, ‘நிஜமாவே நல்லா பண்ணியிருக்கேனா? தமிழ்நாடு என்னை  ஏத்துக்குமா?’ என அப்பாவியாகக் கேட்கிறார் தப்ஸி.

அது என்ன தப்ஸி?

‘‘தப்ஸின்னா பெண் துறவின்னு அர்த்தம். எனக்கு என் பேர் ரொம்பப் பிடிக்கும் தெரியுமா?’’ என்கிற பியூட்டிக்கு நேட்டிவிட்டி டெல்லி.

‘‘சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் முடிச்சிருக்கேன். ரெண்டாவது வருஷம் படிக்கிறப்பவே, இன்ஜினியரிங்கெல்லாம் சரிவராதுனு பட்சி சொல்லிடுச்சு. ‘உன் அழகுக்கு நீ மாடலிங் ட்ரை பண்ணலாம்’னு மக்கள் ஆசையைக் கிளப்பிவிட, இன்ஃபோசிஸ் வேலையைக்கூட வேணாம்னு சொல்லிட்டு, மாடலாயிட்டேன். 2008 மிஸ் இந்தியால ஃபைனலிஸ்ட். அப்புறம் நிறைய விளம்பரங்களுக்கு மாடல்... அதுல என்னைப் பார்த்துட்டு வந்த வாய்ப்புதான் ‘ஆடுகளம்’. நடிக்க ஆசைப்பட்டு வந்துட்டேனே தவிர, இண்டஸ்ட்ரி புதுசு... மொழி புதுசு... ஊரு புதுசு... தனுஷ், வெற்றிமாறன் புண்ணியத்துல எப்படியோ மேனேஜ் பண்ணிட்டேன். ரெண்டு பேரும் அவ்ளோ ஸ்வீட் தெரியுமா? நிறைய சொல்லிக் கொடுத்து, என்கரேஜ் பண்ணினாங்க...’’ பூரிக்கிறவரின் சந்தோஷத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது சூப்பர் ஸ்டாரின் பாராட்டு!

‘‘ஆடுகளம் பண்றதுக்கு முன்னாடியே நான் ‘ஜும்மாண்டி நாதம்’னு ஒரு தெலுங்கு படம் பண்ணிருக்கேன். அதுல மோகன்பாபு சார் நடிச்சிருக்கார். படம் பண்றப்ப, அவரைப் பார்க்க வந்த ரஜினி சார்கிட்ட ‘ஹலோ’ சொல்லிருக்கேன். ‘ஆடுகளம்’ ப்ரிவ்யூல ஒரு ஓரத்துல ஒதுங்கி நின்னுட்டிருந்தேன். படம் பார்த்துட்டு வந்த ரஜினி சார் எனக்கு கை கொடுத்து, ‘சூப்பர்ப் ஜாப்’னு பாராட்டினதை, இன்னும்கூட என்னால நம்ப முடியலை... கிள்ளிக் கிள்ளி பார்த்துக்கறேன்...’’ சொல்லும்போதெல்லாம் சிலிர்க்கிறது தப்ஸிக்கு.

அப்புறம்..?

‘‘முதல் படத்துல நல்ல பேர் எடுத்துட்டேன்னு நினைக்கிறேன். அடுத்து ஜீவாகூட ‘வந்தான் வென்றான்’ பண்ணிட்டிருக்கேன். ‘ஆடுகளம்’ல நான்
பண்ணின ஐரின் கிளாடுங்கிற ஆங்கிலோ இந்தியன் பொண்ணு கேரக்டருக்கு அப்படியே ஆப்போசிட்டா அஞ்சனாங்கிற கேரக்டர்... காதலுக்காக சொந்தபந்தங்களை எல்லாம் விட்டுட்டு ஓடற அப்பாவிப்பொண்ணு ஐரின். ஆனா, அஞ்சனா ரொம்ப தைரியசாலி... நிறைய படிச்சவ. கோடீஸ்வரரோட பொண்ணு... அந்தப் படத்துல வேற ஒரு தப்ஸியை பார்க்கலாம்...’’

 நம்பிக்கை தருகிறவர் நிஜ வாழ்க்கையில் எப்படியாம்?

‘‘லவ் பண்றதுல தப்பில்லை. ஆனா அதுக்காக பெத்தவங்களை விட்டு, சொந்தங்களை விட்டு, ஓடிப் போறதுல எனக்கு உடன்பாடில்லை. ஒருவேளை என் வாழ்க்கைல அப்படியொரு லவ் வந்துச்சுன்னா, வீட்டை விட்டு ஓடிப்போயெல்லாம் கல்யாணம் பண்ண மாட்டேன். போராடி, பெரியவங்க மனசை மாத்தி ஜெயிக்கப் பார்ப்பேன்... உடனே யாரு, என்னன்னு கொக்கி போட்டு, ஏதாச்சும் சிக்காதான்னு பார்க்காதீங்க... இதுவரைக்கும் எனக்கு லவ்வெல்லாம் வரலை... அதுக்கு டைமும் இல்லை... சொன்னா நம்புங்கப்பா...’’ &  கெஞ்சலும் கொஞ்சலுமாக சத்தியம் செய்கிறார்.

டெல்லி ஜிலேபிக்கு சென்னையில் ஃபேவரைட் விஷயங்கள் உண்டா?

‘‘நிறைய உண்டே... முதல்ல உங்க ஊரு மக்கள். எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், பந்தா பண்றதில்லை. அப்புறம் சென்னையோட பீச்... ஊத்தப்பமும் சாம்பாரும்!  அப்புறம் சூர்யா... அவருக்கு அழகான நேஷனல் லுக் இருக்கு... அதனாலயே என்னை மாதிரி நார்த் இந்தியன் பொண்ணுங்களுக்கு அவரை ரொம்பப் பிடிக்குது... (அப்படியா ஜோ?) சீக்கிரமே அவர்கூட ஒரு படம் பண்ணணும்.

ரொம்ப ரொம்பப் பிடிச்ச இன்னொரு விஷயம், தமிழ். அதுலயும் குறிப்பா அந்த ‘ழ’ங்கிற எழுத்து... நாக்கை மடக்கி, சுழட்டி ‘ழ’ சொல்ற அழகுக்காகவே தமிழ்நாட்டுல செட்டிலாயிடலாம் போலருக்கு... இப்பத்தான் கத்துக்கிட்டிருக்கேன்... தமிழ் ரொம்ப அழகு!’’

உங்களை மாதிரியேன்னு சொல்லுங்க!
ஆர்.வைதேகி