‘புதுசா கடை திறந்திருக்கான். சின்ன கடைதான். சில்லறை வியாபாரிகளுக்குத்தான் வாய்ப்புக் கொடுக்கணும்...’ என்று எண்ணிய அதே முகுந்தன்தான்... ‘ச்சே... இனிமேல் அந்தக் கடைப் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது’ என்று முடிவெடுத்துவிட்டான். பின்னே? வேலைக்கான விண்ணப்பப் படிவத்தை அனுப்ப கவர் வாங்க வந்தால்... இடது கையால் கடைக்காரன் கவர் எடுத்துக் கொடுக்கிறான். யாருக்குத்தான் கோபம் வராது?

அம்மாவிடம் சொன்னபோது, ‘‘அடப் போடா, இதுல எல்லாமா சகுனம் பார்ப்பாங்க? உன் திறமைக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும்...’’ - என்றாள் ஆறுதலாக.மதிய சாப்பாட்டு நேரம். வீட்டு வாசலில் குரல். கடைக்காரன்தான். ‘‘தம்பி... காலையில உங்க பர்ஸை கடையிலயே விட்டுட்டீங்க. அதுல உங்க போட்டோவும் அட்ரஸும் இருந்துச்சு. சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போறப்ப கண்டு பிடிச்சு வந்தேன்...’’ - என்றபடி அதே இடக்கையால் கொடுத்தான்.
அப்போதுதான் ஊன்றிப் பார்த்தான் முகுந்தன். முழுக்கைச் சட்டைக்குள் மறைந்திருந்த வலக்கரம் உடம்போடு ஒட்டித் தொங்கிக் கொண்டிருந்தது. பிறவிக் குறைபாடோ?கடைக்காரன் போய்விட்டான். பாவம்... அவன் வேறு எந்தக் கையில் கொடுப்பான்? முகுந்தனுக்குள் மனமாற்றம். அன்றிலிருந்து சின்ன குண்டூசி வாங்குவதென்றாலும் அந்தச் சின்னக் கடையைத்தான் தேடிப் போகிறான்.
கே.எம்.சம்சுதீன்