மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீஅரவிந்த அன்னை

ஒரு விவசாயிக்கு விதை நெல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சமுதாயத்திற்கு மகான்கள். அடுத்த போக விவசாயத்திற்கு விதை நெல் அவசியம். அதுபோல, அடுத்த தலைமுறை வீரியமாகவும் விவேகமாகவும் இருக்க மகான்கள் செயலாற்றுகிறார்கள். மகிமை பொருந்திய மகான்களின் இருப்பு, ஒரு பூ மலர்ந்த வாசனை போல தானாகவே தெரிய வரும். சத்திய நெருப்பைப் பொத்தி வைக்க முடியுமா என்ன?

மிராவுக்கு வயது பதினைந்து. படிப்பில் ரத்தினமாய் ஜொலித்தாள். பள்ளியில் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிய பல்வேறு போட்டிகளை நடத்தினார்கள். அதில் மிராவும் கலந்துகொண்டு ஒரு கதை எழுதியிருந்தாள். மாணவர்களின் படைப்புகளை மதிப்பிட அதைப் படித்த ஆசிரியர், மிராவின் கதையைப் படிக்கத் தொடங்கினார்.

 ‘பிறகு’ என்கிற சாலையும் ‘நாளைக்கு’ என்கிற வீதியும் ‘ஒன்றுமில்லை’ என்கிற கோட்டைக்குத்தான் அழைத்துச் செல்லும்.- முதல் வாக்கியமே சோம்பலின் உச்சி மண்டையில் ஓங்கி அடித்தது. ஆசிரியர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

 தாளின் உச்சியின் வலது ஓரத்திற்குப் பார்வையை நகர்த்தினார். ‘யார் எழுதியது’ எனப் பார்த்தார். மிரா என்கிற பெயர் சிரித்தது. மிராவின் அழகு முகம் அவர் மனக்கண்ணில் துளி நேரம் தோன்றி மறைந்தது. தலைப்பை நோட்டமிட்டார்.

‘பிறகு என்னும் பாதை’ - முத்து முத்தாய் எழுதி அடிக்கோடிட்டிருந்தாள். ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினார். ஒவ்வொரு வார்த்தையும் அடுத்த வார்த்தைக்கு அவரது கரம் பிடித்து இழுத்துச் சென்றது. சுவாரஸ்யமாக நகர்ந்தது கதை.... அதிகாலை. பரந்து விரிந்திருந்த அந்தச் சாலையின் இரண்டு பக்கமும் பெர்ரி மரங்கள் வளர்ந்து நின்றன. அதில் செந்நிறப் பூக்கள் பூத்துக் குலுங்கின. அந்த இளைஞன் விழிவிரிய அந்த அதிகாலை அழகை அனுபவித்தான். துறுதுறுவென்றிருந்த அவனது கண்கள் உலகின் அத்தனை சந்தோஷத்தையும் அப்பொழுதே அனுபவித்துவிட வேண்டும் என்கிற வேட்கையோடு பரபரத்தன.

மெல்ல நடந்தான். குளிர்ந்த... பூவாசம் நிறைந்த காற்றை ஆழ உள்ளிழுத்து சுவாசித்தான். குளிர் அவனது காது வழியே உடல் முழுக்க ஆக்கிரமிக்க, தன் இரு கைகளையும் பரபரவென தேய்த்துச் சூடாக்கி, தன் கன்னங்களில் ஒத்திக்கொண்டான். அந்தக் கதகதப்பு அவனுக்குப் பிடித்திருந்தது.

அவன் நடந்துகொண்டிருந்த பாதை ஒரு நாற்சந்தியில் முடிந்தது. அந்த நாற்சந்தியின் மையத்தில் ஏதோ ஒரு தலைவரின் சிலையும் அதையொட்டி உயர்ந்து நிற்கும் விளக்கு கோபுரமும் அவனை அந்த இடத்தில் ஒரு நிமிடம் நிறுத்தியது. சிலையின் பீடத்துக்கு அடியில் சுருண்டு படுத்திருந்த இரண்டு நாய்களில் ஒன்று அவனைத் தலை உயர்த்திப் பார்த்தது. ‘இவனால் நமக்கு ஏதாவது தொந்தரவு வருமா?’ என்பதான அதன் பார்வை, ‘ஆபத்தில்லை’ என உறுதி செய்துகொண்டு தன் இணையோடு இன்னும் இழைத்துக்கொண்டு குறுக்கிப்படுத்தது.

நாய்களை அவன் கவனிக்கவே இல்லை. அந்த இடத்தில் பிரிந்த நான்கு பாதைகளையும் பார்த்தான்.  ஒற்றை விரலை உதட்டின் மீது வைத்தபடி யோசித்தான். ‘எந்தப் பக்கம் போகலாம்?’கிழக்குச் சூரியன் மெல்ல சோம்பல் முறித்து எழத்தொடங்கி இருந்தது. அதன் முதல் கதிரொளி அவனது முகத்தில் கதகதப்பாய் தொட்டு, ‘‘ஏன் நிற்கிறாய்? நட!’’ என்றது. அவனது ஆழ்மனமோ... ‘‘நில். எங்கு போகிறாய்? எதற்குப் போகிறாய்? இலக்கு என்ன? முடிவு செய்துவிட்டு முதல் அடி எடுத்து வை!’’ என்றது.

‘ஹூம்ம்... இப்பதானே விடிஞ்சிருக்கு. இன்னும் நிறைய நேரமிருக்கு. ஏதாவது ஒரு பக்கமா போகலாம். என்ன இருக்குன்னு பார்ப்போம். பிடிச்சிருந்தா தொடரலாம். இல்லாவிட்டால் திரும்பி விடலாம்’ என அலட்சியம் காட்டினான் இளைஞன்.நான்கு பாதைகளையும் கண்களால் துழாவியவன் அதிக பாதச் சுவடுகள் தெரிந்த ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தான். நடக்கத் தொடங்கினான். கொஞ்ச தூரம் நடந்தவன் ஆகாயத்தைப் பார்த்தான். சூரியனின் பிரகாசம் கூடியிருந்தது. ‘மணி எட்டு இருக்குமோ?’ வெப்பத்தை வைத்துக் கணக்குப் போட்டவன், ‘இருக்கும்’ என தனக்குத் தானே சொல்லிக்கொண்டே நடந்தான்.

வினோதமான நிறங்களில் விதவிதமாகப் பாடும் பறவைகளை அவன் பாதை நெடுகக் கண்டான். அழகிய பழத்தோட்டங்களும் புல்வெளிகளும் தென்பட்டன. ‘பாதை நல்லாதானே இருக்கு’ என்றொரு எண்ணம் அவனுள் தோன்றியது. ‘இல்லை... இது சரியான பாதை இல்லை. இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறாய். திரும்பி விடு’ என ஒரு குரல் அவனுள்ளே எச்சரித்தது. அலட்சியப்படுத்தினான். ‘பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என நகர்ந்தான்.

பாதை நெடுக மரங்கள் மாறிக் கொண்டிருந்தன. புதிது புதிதாகத் தோன்றும் காட்சிகளின் அழகு அவன் மனதில் வினோதமான போதையைத் தெளித்திருந்தது. ‘இதுதான் மகிழ்ச்சி. இதுதான் எனக்கான பாதை...’ என்று அவன் நம்பி நடந்தான். பாதை இன்னும் அகலமானது. சூரியன் உச்சிக்கு வந்துவிட்டான். வீதியின் இரண்டு பக்கமும் வித்தியாசமான பூர்ச்ச மரங்கள் நின்றன. தூரத்தில் ஒரு அருவி வெள்ளியை உருக்கி வார்ப்பதுபோல பூமியை நோக்கி குதித்து விழுந்தது.

பாதையில் திடீரென புல்வெளி. அதில் நடக்கும்போதே கால்கள் கூசின. பாதங்கள் வெட்கப்பட்டன. அந்த சுகம் புதிதாய்த் தெரிந்தது. அருவி தொட்டு வரும் காற்றின் கிசுகிசுப்பில் சொக்கிப் போனான். அப்போதும் அவனுள் அந்தக் குரல் கெஞ்சலாய்ப் பேசியது. ‘‘தயவு செய்து நில். நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் தெரியுமா?

முட்டாளே... நீ உன் அழிவை நோக்கி... இது சுகமான இனிய பாதை என்றா நினைக்கிறாய்? இல்லை. இது உன்னை மீளா நரகத்தின் வாசலில் கொண்டுபோய்ச் சேர்க்கும் சாலை. சோம்பலும் பலவீனமும் உன்னை முழுமையாய் ஆக்கிரமித்துக்கொண்டு நாங்கள் சொல்வதைக் கேட்காமல் தடுக்கிறது. இது மாய சுகம். இதில் மூழ்கி அழிந்து போகாதே. நிகழ்கால மயக்கத்தில் கிறங்கிக் கிடக்காதே. நல்ல எதிர்காலத்தை நோக்கித் திரும்பிவிடு. இப்போதும் நேரம் இருக்கிறது’’ என்றது.

அந்த இளைஞன், எதிரே விரிந்த பாதையைக் கண்டான்.அது பசுமை காட்டியது. அந்த ஆழ்மனக் குரலை அப்போதும் புறக்கணித்தான். ராஜநடை போட்டு நடந்த இளைஞனின் முன்னால் திடீரென பாதை முடிவு தெரியாமல் நீண்டது. திடீரென சரளைக் கற்களும் அடுத்ததாய் புல்வெளியுமென மாறி மாறி பாதை விரிய அவன் முதல்முதலாக பயந்தான்.

‘நான் எங்கிருக்கிறேன்... எங்கே போய்க் கொண்டிருக்கிறேன்’ - இப்படியொரு சிந்தனையை அடுத்து வந்த எண்ணம் உதைத்துத் தள்ளியது.‘என்ன திடீர் ஞானோதயம்? ஏன் சிந்திக்க வேண்டும்? இந்தப் பாதை போகிற வரை நடப்போம்.

நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்’ என மாயைக்குக் கட்டுப்பட்டவன் போல நடந்தான்.நல்ல சிந்தனை தோன்றும்போது, தீய சிந்தனை இன்னும் வலிமை கூட்டும் அல்லவா? சின்ன மரங்கள் மறைந்து, உயர்ந்த ஓக் மரங்கள் வரிசை கட்டி நின்று அழகு காட்டின. வழி நெடுக அருவி. நடக்கும் வேகத்தைக் கூட்டினான்.

அந்தி வானம் மஞ்சள் பூசிக்கொண்டது.இன்னொரு பக்கம் நிலா எட்டிப் பார்த்தது. ஓடைகளின் சலசலப்பு அதிகமாய்க் கேட்டது. ஓக் மரங்கள் மறைந்து ஃபர் மரங்கள் வந்தன. இளைஞன் மனதில் பயம் அதிகமானது. நின்றான்.

சுற்றிலும் நோட்டமிட்டான். ஒரு பெரிய பள்ளத்தாக்கு. அதில் மொட்டைப் பாறைகள் துருத்திக்கொண்டு நின்றன. அந்தப் பள்ளத்தாக்கில் ஏராளமான மனித உருவங்கள் வேதனையாடு ஓலமிட்டுக் கொண்டிருந்தன. எழ எத்தனித்து விளிம்பு வரை உந்தி நகர்ந்து, ‘‘அய்யோ’’ என்று அலறியபடி மீண்டும் அந்தப் பள்ளத்திலேயே விழுந்தார்கள்.

வெகு தொலைவிலிருந்து மிக மெல்லிதாய் ஒரு குரல் கேட்டது. ‘‘இப்போதாவது சொல்வதைக் கேள். அந்த நாற்சந்திக்கே ஓடி விடு. இன்னும் காலம் கடந்து விடவில்லை’’ என எச்சரித்தது.
இளைஞன் தயங்கி நின்றான்.

‘பிறகு... நாளைக்கு...’ என்கிற எண்ணம் அப்போதும் அவனை வென்று விட, கண்களை மூடிக்கொண்டு தலை தெறிக்க அந்தப் பாதையிலேயே ஓடினான். கொஞ்ச தூரம் ஓடியவன் கண் திறந்து பார்த்தான். பாதை மறைந்து பாழ்நிலம் விரிந்து கிடந்தது. இறந்த மனிதர்களின் மண்டை ஓடுகள் கால்களில் இடறின. பேய்கள் அலறின. பூதங்கள் உரசிக் கொண்டு நகர்ந்தன.

தூரத்தில் ஒரு கரிய சிதைந்த அரண்மனை தென்பட்டது. பேய் வீடு போல காட்சி தரும் அதனுள் செல்ல அறிவுள்ள எவரும் அஞ்சு வார்கள். ஆனால், அப்போதும் அவன் கண்ணில் பிரகாசம். நாம் இலக்கை அடைந்துவிட்டோம் என எண்ணி அந்தக் கட்டிடத்தை நோக்கி விரைந்தான். கோட்டையுள் நுழைந்தான். மூச்சிரைக்க ஒரு சுவற்றில் ‘அப்பாடா’ என சாய்ந்தான். கட்டிடம் பொலபொலவென சரிந்து விழுந்தது. துளி நேரத்தில் கோட்டை இருந்த இடத்தில் ஒன்றுமே இல்லை.

ஆந்தையும் வௌவால்களும் அவன் தலையை வட்டமிட்டன. உலகின் ஒட்டுமொத்த தீய சக்திகளும் அவன் முன்னால் தலைவிரித்து ஆடி ஓர் இருண்ட பள்ளத்துக்குள் அவனை இழுத்துத் தள்ள முயற்சித்தன. அந்த இளைஞனோ அதிலிருந்து மீண்டு தப்பிக்க முயன்றான். ஆனால் எதுவும் செய்ய முடியாது செயலிழந்து நின்றான்.

கால்களின் கீழே பூமி நழுவிக் கொண்டிருக்க அவன் பாதாளத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தான். ‘‘காப்பாத்துங்க... காப்பாத்துங்க...’’ எனக் கதறினான். அப்போது அவனுள் எச்சரித்துக் கொண்டிருந்த ஆழ்மனம் மௌனம் சாதித்தது. வானம் இருண்டு கிடந்தது. எப்படியும் தப்பித்துவிட வேண்டும் என உந்தி எழும்பி அந்தக் குழியை விட்டு வெளியில் குதித்தான்.

-திடுக்கிட்டு கண்விழித்தவன், தான் கட்டிலில் இருந்து கீழே விழுந்திருப்பதை உணர்ந்தான். அந்த இளம் மாணவன் பள்ளிக்கூடத்தில் இருந்து சலிப்புடன் வீடு திரும்பி இருந்தான். மறுநாள் வகுப்பில் தரவேண்டிய கட்டுரையை அவன் அன்றே எழுத வேண்டும். சோம்பலால் பிறகு எழுதலாம் என தள்ளிப் போட்டான். இரவு வந்ததும் நாளைக்கு எழுதிக்கொள்ளலாம் என்று எண்ணி தூங்கிப் போனான்.

அவனது உறக்கத்தில்தான் இப்படி ஒரு கனவு. எழுந்து உட்கார்ந்து கனவைச் சிந்தித்தான். ‘பிறகு’ என்கிற சாலையும் ‘நாளைக்கு’ என்கிற வீதியும் ‘ஒன்றுமில்லை’ என்கிற கோட்டைக்குத்தான் அழைத்துச் செல்லும். உண்மையை உணர்ந்தவன், ‘இனி நாளைக்கு என்று ஒரு வேலையையும் ஒத்திப் போட மாட்டேன்’ என உறுதி எடுத்துக்கொண்டு தன் வேலையை செய்யத் தொடங்கினான்.-கதையைப் படித்து முடித்த ஆசிரியர் பேச்சற்று மௌனத்தில் கரைந்தார். ‘‘மிரா நீ சாதாரண பெண்ணல்ல...’’ - அவர் வாய் முணுமுணுத்தது.
மிரா யார்?

நோய் நீக்கும் பூவரசம்பூ!


உணவு, உடை, இருப்பிடம், இதற்கு அடுத்ததாக மனிதன் அதிகம் விரும்புவது நோயற்ற வாழ்வைத்தான். எத்தனை வசதி இருந்தாலும் ஒரு மனிதனை நோய் முடக்கிப் போட்டுவிடும். அரவிந்த அன்னை நோய்களில் இருந்து நிவாரணம் தரும் மலராய் பூவரசம் பூவைச் சொல்கிறார். எத்தனை கொடிய நோயாக இருந்தாலும், அரவிந்த அன்னைக்கு பூவரசம் பூவை சமர்ப்பித்து வேண்டிக்கொள்ள, அன்னையின் அருளால் நோயிலிருந்து  மீண்டுவிடலாம்!

(பூ மலரும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்