இது தமிழ் நாள்காட்டி



வருடத்துக்கு 360 நாட்கள் தான்... வாரத்துக்கு 6 நாட்கள் தான்!

JANUARY, FEBRUARY என்றிருந்தால் அது இங்கிலீஷ் காலண்டர்... ஜனவரி, பிப்ரவரி என வரி போட்டால் அது தமிழ் காலண்டர்... இவ்வளவுதான் நமக்குத் தெரியும். ஆனால், ‘‘இந்த ஸ்டேஷனரி அயிட்டமெல்லாம் வருவதற்கு முன் நமக்கே நமக்கென்று ஒரு தமிழ் நாள்காட்டி இருந்தது தெரியுமா?’’ என்கிறது ‘மரபு வழி தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்’ என்ற அமைப்பு.
‘சனிக்கிழமைகளே கிடையாது... வாரத்துக்கு ஆறே நாட்கள்தான்... வருடத்துக்கு 360 நாட்கள்தான்!’ எனப் பல அதிர்ச்சி + ஆச்சரியங்கள் கொண்ட அந்த நாள்காட்டியை திருச்சியில் அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள் இந்த அமைப்பினர்.

‘‘இதுதாங்க நம்ம பாரம்பரியம். ஆரியப் பஞ்சாங்கங்கள் வருவதற்கு முன் தமிழர்கள் இந்த முறைமையைத்தான் பயன்படுத்தினார்கள். தை முதல் நாள்தான் நமக்குப் புத்தாண்டு. அதில் சந்தேகமில்லை. ஆனால், எது தை முதல் நாள் என்பதிலேயே இங்கு குழப்பம் நிலவுகிறது. உண்மையான தமிழர் நாள்காட்டியின்படி, கடந்த டிசம்பர் 24 அன்றே தை மாதம் பிறந்துவிட்டது. நமது புத்தாண்டும் கடந்து விட்டது!’’ என மேலும் அதிர்ச்சி தருகிறார் ‘மரபு வழி தமிழ்த் தேசியத் தக்கார் அவைய’த்தைச் சேர்ந்த முனைவர் விக்கிரம கர்ணன்.

‘‘இது அறிவியல்பூர்வமானதா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். எந்தப் பஞ்சாங்கத்தையும் விட அதிகத் தெளிவும் வானியல் அறிவும் தமிழனுக்கு உண்டு. உண்மையில் நாம் இன்று பயன்படுத்தும் பஞ்சாங்கமும் ஆங்கில வருடமும்தான் அறிவியல் பார்வை அற்றவை’’ என்கிறார் அவர். ‘‘ஒரு முழுநிலவு 15 நாட்கள் தேய்ந்து, மீண்டும் 15 நாட்கள் வளர்ந்து முழுநிலவாகும் காலத்தைத்தான் நாம் ஒரு மாதம் என்கிறோம். ஆங்கிலத்திலும் இந்த சுழற்சியைக் கணக்கிட்டுத்தான் மாதங்கள் வந்தன.

‘Moon’   என்ற சொல்லில் இருந்து பிறந்ததுதான்   month. நிலவின் சுழற்சி 30 நாள். 12 மாதங்கள் என்றால் 12X30=360 நாள்! குழந்தையைக் கேட்டாலும் இந்தக் கணக்கைச் சொல்லிவிடும். ஆனால், ‘வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்’ என்கிற கதையாய் நாம் ஆங்கிலேயர்களின் குழப்பக் கணக்கை நம்ப ஆரம்பித்துவிட்டோம்.

ஜூலியஸ் சீஸருக்காக ஒரு மாதம், அகஸ்டஸ் சீஸருக்காக ஒரு மாதம் எனச் சேர்த்துக்கொண்டார்கள். அவர்கள் யாரென்றே தெரியாமல் நாம் ஒப்புக்கொண்டோம். 7 மாதங்களுக்கு மட்டும் 31 நாட்களைக் கொடுத்தார்கள். அதில் 7 நாட்கள் அதிகரித்து விடுமே எனப் பதறி பிப்ரவரியில் 2 நாட்களைக் குறைத்தார்கள். கடைசியில் ஒரு மாதிரியாக 365 நாட்களில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் இது பரவலாகிவிட்டது. ஓகே! அதற்காக நம் பாரம்பரியத்தை நாம் அறியாமலே போய்விடக் கூடாது. அதற்காகத்தான் இந்த நாள்காட்டி. பழம் பாரம்பரியத்தின் வழி வந்த பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் இந்த நாள்காட்டியை உருவாக்கித் தர, சென்ற வருடமே இதை வெளியிட்டு விட்டோம். இந்த வருடம் மறுபடி இதற்கு அறிமுக விழா நடத்தி புத்தாண்டு பிறப்பை அறிவித்திருக்கிறோம். இதை நாள்காட்டி என்பதை விட, ஒரு பொது வாய்ப்பாடு எனலாம்.

புத்தாண்டு தினம் எதுவென்று தெரிந்துவிட்டால் போதும்... இந்த அட்டவணைப்படி அடுத்து வரும் 360 நாட்களையும் நாமே கணக்கிட்டுக் கொள்ளலாம். அந்தந்த நாளின் நட்சத்திரங்களும் பஞ்சாங்கம் பார்க்காமல் குழந்தைக்குக் கூட விளங்கும்!’’ என்கிற விக்கிரம கர்ணன், ராஜா லிங்கேஸ்வரன் போல லண்டனில் படித்த சிவில் எஞ்சினியர். எனினும் தூய தமிழ் நாவில் விளையாடுகிறது.

‘‘யெஸ்! ஐ ஸ்டடீட் இன் லண்டன். அண்ட் ஃபார் எ லாங் டைம் செட்டில்டு இன் மலேசியா. ஆனால், தமிழ் பேசும்போது தமிழில்தான் பேசவேண்டும் என்பதில் எங்கள் தலைமுறையே தெளிவாக இருக்கிறது. தமிழ் எனக்கு பிழைப்பல்ல... பாட்டன் சொத்து.

தமிழர் ராஜ்ஜியத்தை கடல் தாண்டி விரிவு செய்தவன் ராஜேந்திர சோழன். இங்கிலாந்து அரச குடும்பத்துக்கே இது தெரிகிறது. ஆனால், இந்தியர்கள் - தமிழர்களுக்குத் தெரிவதில்லை. எனவேதான் சோழ மன்னர்களின் பெருமை சொல்லும் பாடல் ஒன்றையும் இதே நிகழ்வில் வெளியிட்டிருக்கிறேன்’’ என்கிற விக்கிரம கர்ணனைத் தொடர்கிறார் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்...

‘‘பகலில் நிழலைக் கொண்டும் இரவில் விண்மீன்களின் நிலையைக் கண்டும் கிழமையைக் குறித்தவன் தமிழன். தை முதல் நாள் எதுவென கணியர்கள் கணித்துச் சொல்ல, அதை மக்களுக்கு பறையறைந்து அறிவித்தார்கள் மூவேந்தர்கள்.

மார்கழி மாத உவா நாள்... அதாவது அமாவாசை... அது முடிந்து வானில் தெற்கு முகமாய் மூன்றாம் பிறை தெரியும் நாளே தை முதல் நாள். பிறை தெரியும் முன்பே, பகலில் நிழல் விழும் திசை அடிப்படையில் இந்நாளை அறிய முடியும். பிறை பார்ப்பது சாமானியருக்கும் எளிது.

பிறை கண்ட நாள் முதல், பௌர்ணமி வரை அடுத்த 12 நாட்களுமே நாம் புத்தாண்டைக் கொண்டாடலாம். இந்தக் கணக்கின்படி எல்லா பூரணை... அதாவது எல்லா பௌர்ணமிகளும் செவ்வாய்க்கிழமைகளில் வரும். எல்லா உவா நாட்களும் வெள்ளிக்கிழமைகளில் வரும். இதனால்தான் நாம் மரபுப் பழக்கமாகவே வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் விளக்கேற்றுகிறோம். உலகம் முழுதும் பயன்பாட்டில் இருக்கும் எந்த நாள்காட்டியும் இப்படியொரு கணிதத் துல்லியத்தை தந்ததில்லை.

இந்த மண்ணில் சோழன் வீர ராஜேந்திரன் காலம் வரை இந்த நாள்காட்டி பயன்பாட்டில் இருந்தது! தஞ்சை பெரிய கோயிலில் இறைவனுக்கு வாழைப்பழம் படைக்க செலவுக்கு தினம் ஒரு காசு வீதம் ஆண்டுக்கு 360 காசுகள் கொடுத்ததாகக் கல்வெட்டு கூட இருக்கிறது!’’ என்கிறார் அவர்.சரி, திடீரென இப்படியொரு நாள்காட்டியைப் பின்பற்ற முடியுமா?

‘‘இதுதான் இனிமேல் காலண்டர் என நாங்கள் சொல்ல வரவில்லை. என்னதான் ஆங்கில நாள்காட்டி வந்தாலும், திருமணம் போன்ற நற்காரியங்களில் இன்றும் தை, மாசி என தமிழ் மாதங்களையும் தேதிகளையும்தான் இடுகிறோம்.

என்ன... சமஸ்கிருதப் பஞ்சாங்கங்களின் அடிப்படையில் இந்தத் தேதிகளை வரையறுக்கிறோம். அதற்கு பதில் நமது தமிழ் நாள்காட்டியின் அடிப்படையில் தமிழ்த் தேதிகளை குறிப்பிட பழகிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்! தமிழுக்காக எவ்வளவோ செய்யும் நம் தமிழ்ச் சமூகத்தால் இது முடியாதா?’’ என்கிறார் விக்ரம கர்ணன் ஆதங்கம் பொங்க! எத்தனை கச்சி தமான வஞ்சப் புகழ்ச்சி!

‘‘உண்மையான தமிழர் நாள்காட்டியின்படி, கடந்த டிசம்பர் 24 அன்றே தை மாதம் பிறந்துவிட்டது. நமது புத்தாண்டும் கடந்து விட்டது!’’

கோகுலவாச நவநீதன்
படங்கள்: சுந்தர்