வாரிசு ஹீரோக்களின் வரிசையில் இலக்கியத்துக்கான பங்களிப்பும் நிகழ்ந்தாயிற்று. கவியரசர் கண்ணதாசனின் பேரனும், தயாரிப்பாளர் கலைவாணன் கண்ணதாசனின் மகனுமான ஆதவ் கண்ணதாசன் அடுத்து ஏ.ஜி.கிரியேஷன்ஸின் ‘பொன்மாலைப் பொழுது’ படத்தில் ஹீரோவாகிறார்.
கண்ணதாசனின் பேரன் அறிமுகமாகும் படத்துக்கு வைரமுத்துவின் ‘பொன்மாலைப் பொழுது’ டைட்டிலானது பற்றி ஆதவ்வை ஹீரோவாக அறிமுகம் செய்யும் படத்தின் இயக்குநர் ஏ.சி.துரை விளக்கம் சொன்னார். இவர் ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ கிருஷ்ணாவின் அசோஸியேட்டாக இருந்தவர்.
‘‘இந்தக்கதையை எழுதி எட்டு வருஷமாச்சு. அப்ப ஃபிரஷ்ஷா எழுதி முடிச்சப்ப வைரமுத்துங்கிற பெரும் கவிஞருக்கு வாழ்க்கையை வசந்தமாக்கித் தந்த ‘பொன்மாலைப் பொழுது...’ங்கிற வரி டைட்டிலுக்குப் பொருத்தமா வந்து விழுந்தது. ‘ஜில்லுன்னு ஒரு காதலும்’ நான் எழுதிய கதைதான். ஸ்கிரிப்ட்டோட தன்மையை தலைப்பு சொல்லணும்.
அந்தவகையில இது கதைக்குப் பொருத்தமான தலைப்பு. இதுக்கான ஹீரோவா ஆதவ் பேசப்பட்டப்ப, அவரை நேர்ல பார்த்தேன். கதையை சொல்லிட்டு ரெண்டுநாள் கழிச்சு அதுக்குப் பொருத்தமா வரச்சொன்னேன். அவர் கதையைப் புரிஞ்சுக்கிட்ட விதம் பிடிச்சுப் போகவே, அவரையே ஹீரோவாக்க முடிவு செஞ்சேன். வைரமுத்துவும் இந்தப் படத்துக்குப் பாடல்கள் எழுதித் தர்றதா சொல்லியிருக்கார்...’’ என்ற துரை படத்தைப் பற்றித் தொடர்ந்தார்.
‘‘காதலும் மாலையும் பிரிக்கமுடியாத சொந்தங்கள். இந்த இனிமையான காதல் கதைக்கு ஆதவ்வும், காயுவும் அழகான இளம்ஜோடியா பொருந்தி வந்தது ஸ்டில் செஷன்லயே தெரிஞ்சது. ஏற்கனவே கிருஷ்ணாவோட நான் வேலை செய்த ‘ஏன் இப்படி மயக்கினாய்’ படத்திலும், ‘ரேணிகுண்டா’ பன்னீர்செல்வம் டைரக்ட் பண்ற ‘18 வயசு’ படத்திலும் ஹீரோயின் ‘காயு’தான்.
காதல்தான் படத்தோட லைனா இருந்தாலும் ஒரு அப்பாவுக்கும், மகனுக்குமான உறவும் படத்தோட அடிநாதமான செய்தியா இருக்கும். படத்தில ஆதவ்வோட அப்பாவா கிஷோரும், காயுவோட அப்பாவா தாஸும் நடிக்கிறாங்க. படத்தைப் பாத்து முடிச்சதும் ஒரு மகனுக்குத் தன்னோட அப்பாவையும், ஒரு அப்பாவுக்குத் தன் மகனையும் உடனே பாக்கணும்னு தோணும்.’’
ஆதவ் பற்றி இன்னொரு ஆச்சரியமான விஷயம், சினிமாவில் அவர் உதவி இயக்குநராகவும் இருந்திருப்பது. ‘நினைத்தாலே இனிக்கும்’ ஜி.என்.ஆர்.குமரவேலிடம் உதவி இயக்குநராக இருக்க நேர்ந்ததைப் பற்றி விளக்கினார் ஆதவ்.
‘‘எங்க குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் எப்பவுமே நெருங்கிய தொடர்பு இருந்தது. எல்லாரும் என்கிட்ட கேட்கிறது, ‘தாத்தா மாதிரி ஏன் இலக்கியம் பக்கம் வரலை’ங்கிறதுதான். சொல்லப்போனா இலக்கியமும் எங்க மூச்சு போலத்தான் இருக்குதுன்னு சொல்லலாம். நான், லண்டன்ல பல் டாக்டரா இருக்க என்னோட அக்கா சத்யலட்சுமி... எல்லாருக்கும் எழுத்தில ஈடுபாடு உண்டு. நான் கவிதைகள் எழுதுவேன். அக்காவுக்கு ஸ்கிரிப்ட் எழுதறதில ஈடுபாடு இருக்கு. இருந்தாலும் அவங்கவங்களுக்குப் பிடிச்ச துறைகளைத் தேர்ந்தெடுக்க ஆசைப்பட்டோம்.
நான் நடிக்க ஆசைப்பட்டதுக்கு அம்மா அமிர்தாகௌரியோட ஆதரவு இருந்தாலும், என் படிப்பு முக்கியம்னு அவங்க சொன்னதால லயோலாவில பி.காம் முடிச்சேன். நடிகனாக ஆசைப்பட்டாலும் சினிமாவைப் பற்றித் தெரிஞ்சுக்க அசிஸ்டன்ட் டைரக்டரா இருக்கிறது நல்லவழிங்கிறதால ஜி.என்.ஆர்.குமரவேலன்கிட்ட அஸிஸ்டன்டா வேலை செய்தேன். அப்பா படங்கள் தயாரிக்கும்போது கதை இலாகாவில ஏ.ஆர்.முருகதாஸ் இருந்தார். அதேபோல ஒவ்வொரு பட பூஜைக்கும் வந்து வாழ்த்தியவர் கமல் சார். அதனால என்னை ஹீரோவா அறிமுகம் செய்யற நிகழ்ச்சிக்கான பொறுப்பை என் அண்ணன் போலான முருகதாஸ் ஏத்துக்கிட்டார். அந்த நிகழ்ச்சிக்குக் கமல் சார் தவிர்க்க முடியாத காரணங்களால வரலை. இருந்தாலும் அவரைச் சந்திச்ச என்னை வாழ்த்தினார்...’’
தாத்தா பாடல்களில் எல்லாமே பிடிக்குமென்றாலும் ஒரே பாடலைச் சொல்லச் சொன்னால் ஆதவ்வின் சாய்ஸ், ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..!’
யாருக்குத்தான் பிடிக்காது, கோப்பையையும் கோல மயிலையும்..? வேணுஜி