வாரிசு



என் பழைய டிரங்குப் பெட்டியைத் திறந்து அதன் நினைவுகளில் மூழ்கிப் போயிருந்தேன். அம்மா சாப்பிடக் கூப்பிட்டபோது மணி ஒன்று. சரி, பெட்டியை மூடிவிட்டு சாப்பிடலாம் என நினைத்தால் பூட்டைக் காணோம்.

அதைத் தேடப் போய் வீட்டையே இரண்டாக்கிவிட்டேன். சாயந்திரம் வரை சாப்பிடவே முடியவில்லை. தீவிரமான இந்தப் பூட்டுத் தேடலில், என் மொபைல் போனுடைய ஒரிஜினல் சார்ஜர், தொலைத்துவிட்டதாய் நினைத்திருந்த பல புத்தகங்கள் என அனைத்தும் கிடைத்தன. ஆனால் தொலைந்த பூட்டு மட்டும் கிடைக்கவில்லை.

‘‘சாப்பிடாம அப்படி என்னத்த தேடற?’’ என்றார் அம்மா. ‘‘பூட்டைக் காணோம்மா.’’‘‘ஆமா... தோள் மேல ஆட்டைப் போட்டுக்கிட்டு ஊரெல்லாம் தேடுறதே உன் பொழப்பு’’ என்றார்.
எனக்கு அதில் ஏதோ துப்பு கிடைத்தது மாதிரி இருந்தது. அழுக்காகிவிடுமோ என்று நான் கழற்றிப் போட்ட டி-ஷர்ட் பாக்கெட்டில் பார்த்தேன்.

பூட்டு இருந்தது. அந்த நேரம் பார்த்து அங்கே வந்த என் பையன், ‘‘அப்பா என் எரேஸரைக் காணோம்’’ என்றான். ‘‘உன் சட்டை பையைப் பாரு!’’ என்றேன். அதில் துழாவி எடுத்து, ‘‘ஐ கிடைச்சுடிச்சு...’’ என சந்தோஷப்பட்டவன், ‘‘எப்படி கண்டு
பிடிச்சே?’’ என்றான் என்னிடம். ‘‘நீ என்னோட பையனாக்கும்!’’ என்றேன் நான்.

என்.டி.என்.பிரபு