கவிதைக்காரர்கள் வீதி



வாழ்க தமிழ் பேசுவோர்!

வாட்ச் பக்கெட் தேங்க்ஸ் சாரியிலிருந்து
துவங்குகிறது தமிழிற்கான தினக்கொலை
அம்மா அப்பா மாறி
மம்மி டாடியானது மட்டுமல்ல

டிவி ரேடியோ கூட வெகுவாய்
தமிழைத் தின்றுதான்
பசியாறிக்கொண்டுள்ளது
சுடுகாட்டுப் பிணத்தைக் கூட
டெட்பாடி ஆக்கும் ஆசையை

எந்தக் கொள்ளியிலிட்டுக் கொளுத்தினால்
என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க
தமிழாகித் தொலையுமோ
பேன்ட் சூட்டும் ஃபாரின் காரும்
ஃபேஸ்புக் பீட்சாவும் கூட

மாற்றத்தின் புள்ளிகளுக்குள் அடங்கிய
காலமாற்றத்தின் காட்சிகளாகிப் போகட்டும்
பெயர்ச்சொல்லாய் வாழட்டும்
மீறி மொழியைத் தொலைப்பதையோ 

பாதி குறைத்து
தங்கிலீஷ் எழுதுவதையோ
நியாயமென்றுரைப்போர் நஞ்சினை
எந்த வாளிட்டு அறுப்பது?
ஆங்கிலம் முக்கியம்

அந்நிய மொழிகள் முக்கியம்
அதையெல்லாம் அதுவாகப் பேசுவது போல்
தாய்மொழியும் தமிழர்க்கு அழகில்லையா?
அங்கமங்கமாக பிறமொழி கலந்து
குழந்தைக்கு

மில்க்கோடு ஹாட்கப்பில் தருவோரே
தமிழை தினம் தினம் பிளேட்டில்
ரைஸோடு போட்டுக் கொல்வோரே
கொஞ்சம் கொஞ்சமாக மாறுங்கள்
தமிழை இனியேனும்

அழகு கொஞ்சப் பேசுங்கள்
மொழி நமக்கு உயிராக வேண்டாம்
மொழியாகவே இருக்கட்டும்
முழுதாகப் பேச மட்டும்
முப்பொழுதும் கிடைக்கட்டும்
வாழ்க தமிழ் பேசுவோர்!

வித்யாசாகர்