நான் சாதாரண ஆளில்ல... நகைக் கடைக்காரர் மகன்!
சாம்ஸ் ‘‘இவங்கிட்ட ஈஸியா நகைக் கடையை எழுதி வாங்கலாம்டா’’ என நிஜமாகவே நினைக்க வைக்கிற அப்பாவித் தோற்றம் சாம்ஸுக்கு. ‘‘ஆனா, எழுதி வாங்க என்கிட்ட ஒரு பொட்டிக்கடை கூட இல்ல சார்... மன்னிச்சூ!’’ என ஆதிவாசி ‘சாரி’ சொல்லி வரவேற்கிறார் மனிதர். ஐயப்பன்தாங்கலில் மிடில் கிளாஸில் இருந்து அப்பர் மி.கிளாஸை எட்டிப் பார்க்கும் வீடு அது!

‘‘ஃபுல்நேம் சுவாமிநாதன். கிரேஸி மோகன் சார் ட்ரூப்ல அதை ‘சாமா’ன்னு ஆக்கினேன். அப்புறம் ‘சாம்ஸ்’ ஆகிடுச்சு. பிறந்து, வளர்ந்து, படிச்சி, ஊர் பொறுக்கினதெல்லாம் திருச்சி. டிப்ளமோ படிச்சிருக்கேன். சென்னையில வேலையும் பார்த்துக்கிட்டிருந்தேன். சின்ன வயசுல எங்க அண்ணன் லென்ஸ் - துண்டு ஃபிலிம் வச்சி வீட்டையே தியேட்டராக்கிட்டிருப்பார். என் சினிமா ஆசைக்கு அவரும் என் கூட வேலை பார்த்த ஜெயப்பிரகாஷ்னு ஒரு நண்பரும்தான் அடித்தளம் போட்டாங்க.
‘பயணம்’ படத்துல, ‘பாஞ்சு வந்த புல்லட்டை பல்லால கடிச்சித் துப்பினீங்களே... சூப்பர் சார்’னு நான் ஷைனிங் ஸ்டாரை ஏத்தி விடுவேன். அதே மாதிரிதான் என்னையும் ‘அசப்புல சந்திர பாபு மாதிரியே இருக்கே’ன்னு சுத்தியிருக்கவங்க உசுப்பேத்தினாங்க.
அவ்ளோ பெரிய கனவைத் தூக்கிக்கிட்டு தினமும் ஆபீஸ் போயிட்டு வர முடியல. ஒரு ஷிஃப்ட் வேலை... மத்த ஷிஃப்ட் எல்லாம் வாய்ப்பு தேடுறதுன்னு ஆரம்பிச்சேன். எடுத்ததும், ‘எத்தனை ரோல் ஃபிலிம் வாங்கித் தருவே’ன்னு கேக்குற உப்புமா கம்பெனிகளாதான் கண்ல பட்டுச்சு. ‘காசு கொடுத்து நடிக்கக் கூடாது... திறமையால வரணும்னு ஒரு வைராக்கியம்’... இப்படிச் சொல்லத்தான் எனக்கும் ஆசை. ஆனா, கையில காசு இல்லாததால இப்படி ஒரு வைராக்கியத்தை நானா வளர்த்துக்கிட்டேன். அதுதான் உண்மை.
‘ஏக்நாத் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்’னு ஒரு விளம்பரம் பார்த்தேன். கையில இருந்ததைக் கட்டி அதுல சேர்ந்தேன். அதுல நாங்க தான் முதல் பேட்ச். கடைசி பேட்ச்சும் நாங்கதான். அதுக்காக அதை வேஸ்ட்னு சொல்ல முடியாது. ‘கன்னிப்பருவத்திலே’ பட இயக்குநர் பாலகுரு அங்க தான் அறிமுகமானார். அவரோட இன்ட்ரோவால ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி சார் சீரியல்ல ஒரே ஒரு சீன் நடிச்சேன்.
பாலசந்தர் சார் ஆபீஸ் போய் பார்த்தேன். அவர் அசிஸ்டன்ட் சரண் சாரைப் பார்க்கச் சொன்னார். காலேஜ் பொண்ணை விட அதிகமா நான் துரத்தி டார்ச்சர் கொடுத்தது சரணுக்குத்தான். அதைத் தாங்க முடியாம அவரோட முதல் படம் ‘காதல் மன்னன்’ல ஒரு பிட்டு சீன் கொடுத்தார். அப்புறம் ‘அவ்வை சண்முகி’யில ஒரு சீன்ல தலை காட்ட கூப்பிட்டாங்க. அந்த ஷூட்லதான் கிரேஸி மோகன் சாரை மீட் பண்ணினேன். அடுத்த நாள் அவர் டிராமா நடக்குற இடத்துக்கே போய் வாய்ப்பு கேட்டேன். ‘அடுத்த வருஷம் புது டிராமா போடும்போது பார்க்கலாமே’ன்னார்.
‘சும்மா சேர் இழுத்து போடுற வேலை இருந்தா கூட பரவாயில்லை... செய்ய ரெடி!’ன்னேன். வரச்சொன்னார். ஒரு டிராமாவுக்கு 30 ரூபா கொடுத்தாங்க. மாசத்துக்கு 10 டிராமான்னா முந்நூறு ரூபா. ஆனா, நல்ல எக்ஸ்பீரியன்ஸ். அங்கே, சீனுமோகன்னு ஒரு ஆர்ட்டிஸ்ட் ‘என்னடா தண்டமா நின்னுட்டிருகே...’ன்னு அவர் ரோலை எனக்குக் கொடுத்து என்கரேஜ் பண்ணினார். அப்படியே வளர்ந்தேன். ஒரு கட்டத்துல ‘எந்த ரோல்னாலும் சாமா பண்ணுவான்’ங்கிற நம்பிக்கை கிரேஸி சாருக்கே வந்துச்சு. பத்து வருஷம் கிரேஸி கிரியேஷன்ஸ் வாழ்க்கை.
அப்போதான் எனக்குக் கல்யாணம் ஆச்சு. அன்பான மனைவி உமா மகேஸ்வரி கிடைச்சாங்க. சண்டே கூட வீட்ல இல்லாம டிராமாவுக்குப் போனா கடுப்பாவாங்களா, மாட்டாங்களா? வீட்ல பிரச்னை. கிரேஸி சார்கிட்ட சொன்னேன். ‘முதல்ல குடும்பத்தைப் பாரு’னு அனுப்பி வச்சாரு. மாசக்கணக்குல டிராமாவுக்கு பிரேக் விட்டுட்டு மனைவியோட டைம் ஸ்பெண்ட் பண்ணினதுக்குப் பலன்... அய்யோ, குழந்தை பிறந்ததைச் சொல்லலைங்க!
ஒரு கட்டத்துல, ‘நீங்க உங்க சினிமா கனவை நிறைவேத்துங்க. நான் வேலைக்குப் போறேன்’னு அவங்களே சொன்னாங்க. அவங்களுக்கு டீச்சர் வேலையும் கிடைச்சதால நான் தைரியமா வேலையை விட்டேன்! ‘நாகேஷ் சார் மாதிரி பெரிய காமெடி நடிகரா வர வாழ்த்துக்கள்’னு கிரேஸி மோகன் சார் கைப்பட எழுதிக் கொடுத்து ஆசீர்வதிச்சார்.
சின்னச் சின்னதா அங்கங்க வர ஆரம்பிச்சு, இப்போ 70 படங்கள் நடிச்சிட்டேன். ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ல நகைக்கடைக்காரர் காமெடி குக்கிராமம் வரை என் முகத்தை ரீச் பண்ண வச்சிருக்கு. இப்போ தனி காமெடியனாவே நிறைய படங்கள் பண்றேன். ‘49ஓ’ படத்துல நடிக்கும்போது கவுண்டமணி சார், ‘டேய், நான் இந்தப் படத்துல ஹீரோ... நீதான் காமெடியன்’னு சொன்னார். அது பெரிய சர்ட்டிபிகேட். ‘மெல்ல நடப்போர்... நீண்ட தூரம் நடப்பர்’னு சொல்வாங்க.
அதான் மெதுவா நடக்கறேன்’’ என்கிற அப்பாவைக் கட்டிக்கொள்கிறார்கள் மகன் அஸ்வத்தும் மகள் அக்ஷயாவும்!‘‘அப்பாவோட காமெடிகள்ல எங்களுக்கு ‘பயணம்’ படத்து காமெடிதான் பிடிக்கும். அதுல தான் அப்பா கீழ விழாம, யார்கிட்டேயும் அடி வாங்காம காமெடி பண்ணுவார்’’ என்கின்றன அந்தப் பிஞ்சுகள்!அந்த வார்த்தைகள் நம்மை என்னவோ செய்கின்றன!
‘அசப்புல சந்திரபாபு மாதிரியே இருக்கே’ன்னு சுத்தியிருக்கவங்க உசுப்பேத்தினாங்க!
மை.பாரதிராஜா
படங்கள்: புதூர் சரவணன்