அவன் அவள் unlimited



குட் பாய் பிடிக்குமா? ப்ளே பாய் பிடிக்குமா? பெண்கள் சைக்காலஜி

‘நீ நல்லவனானால் திருமணம் செய்வோம்... கெட்டவனானால் காதலிப்போம்’ - ‘விசில்’ படத்தில் இப்படியொரு பாடல் வரும். ‘சும்மா பாட்டுக்காக சொல்றாங்க’ என்றுதான் இதைப் பற்றி நாமெல்லாம் நினைத்திருப்போம். நமக்குத் தெரிந்த உளவியல் ஆலோசகர் ஒருவரிடம் வந்த இளம் பெண்ணொருத்தி, அந்த எண்ணத்தை மாற்றினாள்...

‘‘யெஸ்... அவன் ப்ளே பாய்தான். அப்படிப்பட்டவனை லவ் பண்றதுதான் நல்லது. நாளைக்கே அவனைக் கட்டிக்க முடியாம போயிட்டா, என்னை கத்தியால குத்த மாட்டான்... ஆசிட் அடிக்க மாட்டான்... தற்கொலை மிரட்டல் விட மாட்டான். அவன் அவ்ளோ சின்ஸியர் இல்ல. அதுதான் ப்ளஸ் பாயின்ட். நம்ம ஊர்ல பொண்ணுங்க சுயமா முடிவெடுக்க முடியாது. கல்யாணம் பண்ணிக்கலாம்னு நாம பண்ற ப்ராமிஸ் எப்ப வேணாலும் மாறலாம். அதுக்கெல்லாம் இவன்தான் சரியா வருவான்!’’

- இவ்வளவு தெளிவாகக் காதலித்தவள், ஒரு கட்டத்தில் ‘நிஜமாகவே’ அந்தப் பையனைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டாள். அவனைத் ‘திருத்தும்’ நோக்கத்தோடு தான் சைக்காலஜிஸ்ட்டை நாடினாள். அவர்கள் இணைந்தார்களா என்பது நமக்கு வேண்டாம். அவள் பேசிய அந்த டயலாக்... அதுதான் நம்ம சப்ஜெக்ட். உண்மையிலேயே பல பெண்களோடு ஊர் சுற்றும் கெட்ட பையன், காதலிக்க வசதியானவனா?

‘‘ஆமாம்’’ என்கிறார் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர் ஸ்காட் பெர்ரி கஃப்மென். சுருக்கமாக எஸ்.பி.கே. ‘ப்ளே பாய் கேரக்டர்களை ஏன் பெண்கள் விரும்புகிறார்கள்’ என்பதைப் பற்றி இவரைப் போல் ஆராய்ந்தவர்கள் எவருமில்லை. முடிவாக, கெட்ட பையன்களுக்குள் இருக்கும் சில நல்ல விஷயங்களை இப்படிப்
பட்டியலிடுகிறார் எஸ்.பி.கே.

1. விளைவு எதுவானாலும் தன்னால் சமாளிக்க முடியும் என்பவனே தவறு செய்கிறான். ஆக, ‘ப்ளேபாய்த்தனம்’ என்பது தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தின் அடையாளம்.

2. எந்த ஆணையும் தன்னால் மாற்ற முடியும் என்ற ஈகோ பெண்களின் ஆழ்மனதில் இருக்கிறது. அப்படி மாற்றுவது அவர்களின் அழகிற்கும் திறமைக்கும் ஏற்ற சவால். கடினமான இரையைத் தேடி ஓடுவது போன்ற அடிப்படை விலங்கு குணம் இது. (ரெஃபரன்ஸ் - ‘புதிய பாதை’ சீதா டூ ‘பருத்தி வீரன்’ பிரியாமணி)

3. ‘நிறைய பசங்களோட பழகலாமா? பார்ட்டிக்கு போலாமா?’ - இப்படி சின்னதாக எல்லை தாண்டத் தயங்கிக் கொண்டிருக்கும் பெண்கள், ‘ஒழுங்குப்புள்ள’ ஆண்களைக் கண்டால் குற்றவுணர்ச்சி அடைகிறார்கள். பேட் பாய், அவர்களை ஊக்குவிக்கிறான்.

4. தான் அழகாக இல்லை... ஆண்களுக்குத் தங்களைப் பிடிக்காது என்ற தாழ்வு மனப்பான்மை உள்ள பெண்களை ‘மன்மத லீலை’ கமல்ஹாசன்கள் மாற்று கிறார்கள்.

எஸ்.பி.கே சொல்லும் இந்த நான்காவது காரணம், மிக முக்கியமானது. பொதுவாக சமூக ஒழுக்கத்தைக் கட்டிக் காக்கும் ஆண்கள், ஒரே பெண்ணோடு தான் காதல் என்பதையும் ‘கஷ்டப்பட்டு’ கடைப்பிடிப்பார்கள். ஸோ, அவர்கள் கண்டிப்பாக சில பெண்களை நிராகரித்தே ஆக வேண்டும். ராமன் - சூர்ப்பனகை ஸ்டோரியை மனதில் ஓட விடுவோமே...

நவீன காலத்தில் மூக்கை அறுப்பது மட்டுமே நிராகரிப்பு அல்ல. ‘தங்கச்சி மாதிரி...’, ‘பெஸ்ட் ஃப்ரெண்ட்...’, ‘ஜஸ்ட் ஃப்ரெண்ட்’ என்பது போன்ற வார்த்தைகளும் நிராகரிப்புதான். இந்த நிராகரிப்புக்கு பயப்படுகிற பெண்கள் ராமன்களை விரும்புவதில்லை. கிருஷ்ணனே அவர்களின் ஹீரோ!

அப்போ, ‘எல்லாருமே தீராத விளையாட்டுப் பிள்ளையாக மாறிவிடுங்கள்’ என்பதுதான் ஆண்களுக்கு நிபுணர்கள் தரும் அட்வைஸா? இல்லை! ஆக்சுவலி, ஒழுக்கமான ஆண் என்ற கேரக்டரே உலகில் இல்லை என்பதுதான் நிபுணர்களின் நிலைப்பாடு. ‘‘பெண்களை மடக்கும் விளையாட்டில் ராமனாக இருப்பது ஒருவகை ஸ்டைல்’’ என்கிறார் இஸ்ரேலைச் சேர்ந்த டாக்டர் குரிட் பிரின்பேல்.காதல் என்பது கிட்டத்தட்ட தெருநாய் மாதிரிதான். துரத்தினால் ஓடும்... ஓடினால் துரத்தும்.

இந்த சூட்சமத்துக்கு playing hard to get... அதாவது நம்மை ‘கிடைத்தற்கரிய பொருளாக்கி’ விளையாடுதல் எனப் பெயரிட்டிருக்கிறார்கள் உளவியலாளர்கள். இந்தக் கலை பெண்களுக்கு கூடவே பிறந்தது. அவர்கள் அளவுக்கு ஆண்கள் இதை அறிந்திருப்பதில்லை. அறிந்திருக்கும் ஒன்றிரண்டு ஆண்களே, ராமன் எனப் பெயர் வாங்குகிறார்கள். பட், இதுவும் ஒருவகை தூண்டிலே... மிதிலை பெண்கள் ராமனிடம் மெர்சல் ஆனது இதனால்தான்.

ஹார்ட் டூ கெட் விளையாட்டு ஒன்றும் கஷ்டமில்லை. ‘கூகுள் கூகுள்’ பாடலில் வருமே... ‘நான் டேட்டிங் கேட்டால் வாட்ச்சைப் பார்த்து ஓகே சொன்னானே...’ அதுதான் விஷயம்! பெண் கூப்பிட்டதும், ‘போலாம்...

போலாம்...’ எனத் துடிக்காமல், தன் பிஸி ஷெட்யூலில் அதற்கு இடமிருக்கிறதா எனப் பார்ப்பது ஒருவித மேன்லி செயல்.பொதுவாகவே, ‘இவன் தன்னை விரும்புகிறான்’ என உறுதியாகத் தெரிந்த ஆண்களை விட, ‘விரும்புகிறானா... இல்லையா?’ எனத் தெரியாத ஆண்கள்தான் பெண்களை அதிகமாய்க் கவர்வதாகச் சொல்கிறார் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அடோரி துரையப்பா.

பல்கலைக்கழக மாணவிகளிடம் இவர் செய்த ஆய்வுப்படி, பெரும்பாலான பெண்கள் இதை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார்கள். ஆக, முதல் பார்வையில் ஒருத்தியிடம் பத்து ஆண்கள் வலிய வந்து பழகலாம். ‘நீங்க அழகா இருக்கீங்க’ என வழியலாம்.

ஆனால், பதினோராவதாக ஒரே ஒருவன் கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல் நின்றால், அவன்தான் அந்தப் பெண்ணின் மனதை அசைப்பான். ‘என்னவாம் அவனுக்கு..? திமிரா?’ என்ற ரீதியில் அந்தப் பெண் அவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பாள். ‘‘ஒரு பெண்ணால் தவிர்க்க முடியாத சாலியன்ட் சிந்தனைகள் இவை’’ என்கிறார் அடோரி துரையப்பா.

ஆனால், இந்த டெக்னிக்கை ரொம்பவும் பயன்படுத் தக் கூடாதாம். முதல் பார்வையில் பெண்களைக் கவர்ந்து இழுக்க மட்டும் இப்படி அம்பியாக ஆக்ட் பண்ண வேண்டுமாம். அறிமுகம் ஆன பின், ‘அந்நியன்’ விக்ரம் போல சடாரென தலையைச் சிலுப்பி ரெமோவாகிவிட வேண்டும்.

இல்லாவிட்டால் காதலிக்கு சுவாரஸ்யம் குறைந்து விடும். ஒருவனே காதல் விளையாட்டுக்காக ராமனாகவும் கிருஷ்ணனாகவும் மாறிக் கொள்ள வேண்டும் எனில், உண்மையான ஒழுக்கசீலன் யார்? சின்ன வயது முதல் நமக்குச் சொல்லித் தரப்படும் ஒழுக்கங்களுக்கு என்ன வேல்யூ?

காதல் என்பது கிட்டத்தட்ட தெருநாய் மாதிரிதான்.துரத்தினால் ஓடும்... ஓடினால் துரத்தும்.

ப்ராமிஸாசொல்றேன்... உன்னைத் தவிர வேற எந்தப் பொண்ணுக்கும் என் இன்பாக்ஸ்ல இடமில்ல ஸ்வேதா!

முதல்ல மெமரி பவரை வளர்த்துக்கோடா ஃப்ராடு! என் பேரு கவிதா!

- தேடுவோம்...

கோகுலவாச நவநீதன்