வீட்டுக்கடன் A to Z



தெரிஞ்ச விஷயம்... தெரியாத விஷயம்!

சொந்தமாக ஒரு வீடு...’ எனும் மிடில் கிளாஸ் கனவை ‘பறக்காஸ்’ செய்துவிடுகிறது பணம் என்கிற மந்திரச்சொல். ‘‘இல்லவே இல்லைங்க... மிடில் கிளாஸுக்காகவே வீட்டுக்கடன்களை வங்கிகள் விதவிதமாகத் தருகின்றன.

வெள்ளையடிக்கக் கூட இம்ப்ரூவ்மென்ட் லோன் என்று ஒன்று உண்டு. ஸ்டாம்ப் டியூட்டி செலுத்தக் கூட வங்கிக் கடன் இருக்கிறது. மக்களுக்குத்தான் இதுபற்றித் தெரிவதில்லை!’’ என்கிறார் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான எம்.எஸ்.கோவிந்தன். வீட்டுக் கடன் பற்றி அத்தியாவசியமாய் நாம் அறிய வேண்டியவற்றை அவரே இங்கு தொகுத்தளிக்கிறார்...

நிலம் வாங்க கடன்...

புதிதாக வீடு கட்டுவதற்குத் தேவையான நிலம் வாங்கவும் லோன் தரப்படுகிறது. ஆனால், இதில் முக்கிய வங்கிகள் பலவும் விவசாயத்திற்கு நிலம் வாங்கவே முன்னுரிமை அளிக்கின்றன.

வீடு கட்டுவதற்காக கடன்...

புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் இந்த லோனை பரிசீலிக்கலாம். இதில் விண்ணப்பம் செய்யும் முன்பே நிலத்தின் மொத்த மதிப்பை கணக்கிட்டு, வீடு கட்ட எவ்வளவு செலவாகும் என்பதை குறிப்பிட வேண்டும். அப்போதுதான் லோன் ஒப்புதல் கிடைக்கும். 

வீடு வாங்க கடன்...

புதிதோ, பழையதோ... முழுதாகக் கட்டி முடிக்கப்பட்ட ஒரு வீட்டை வாங்க இந்தக் கடன் வழங்கப்படுகின்றது. இதில், வீட்டின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் கொடுக்கப்படும்.

வீட்டை விரிவாக்க கடன்...

ஒருவர் தனது வீட்டை விரிவாக்க நினைத்தால் அவருக்கும் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. வீட்டைச் சுற்றி விடப்பட்ட நிலத்தில் கட்டிடம் எழுப்புவது, வீட்டுக்கு மேல் மாடி கட்டுவது, உள்ளேயே ஓர் அறையைப் பெரிதாக்குவது என வீட்டின் அனைத்து விரிவாக்கத்துக்கும் இந்த லோன் தரப்படுகிறது.

வீட்டை மேம்படுத்த கடன்...

இதனை இம்ப்ரூவ்மென்ட் லோன் என்பார்கள். அதாவது, ஒருவர் தனது வீட்டினை வெள்ளையடிக்க வேண்டும் என்றாலோ, வேறு ஏதேனும் ரிப்பேர் செய்ய வேண்டும் என நினைத்தாலோ இந்த லோனிற்கு விண்ணப்பிக்கலாம். மொத்தத்தில் வீட்டினை சீரமைப்பதற்காக தரப்படும் கடன்.

வீட்டை மாற்ற கடன்...

ஒருவர் லோன் மூலம் வீடு வாங்கியிருக்கிறார் எனக் கொள்வோம். பிறகு, அவருக்கு இன்னொரு வீடு பிடித்திருக்கிறது. அதனை வாங்க வேண்டும் என நினைக்கிறார். என்ன செய்வது? அவர் பழைய வீட்டோடு, அந்தக் கடனையும் சேர்த்து வேறு நபருக்குக் கொடுத்துவிட்டு, தனது வீட்டுக் கடனை புது வீட்டிற்கு மாற்றிக்கொள்ள வழி செய்கின்றன சில வங்கிகள்.

முத்திரைக் கட்டணம் செலுத்த கடன்...

வீடு அல்லது சொத்துகள் வாங்கும்போது குறிப்பிட்ட சதவீதம் முத்திரைக் கட்டணம் அரசுக்கு செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு 10 லட்சம் ரூபாய்க்கு 8 சதவீதம் என்றால், 80 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். 80 ஆயிரம் ரூபாய் வரை இந்த முத்திரைக் கட்டணம் செலுத்தவும் லோன் தருகின்றன சில வங்கிகள். நீங்கள் கவனிக்க வேண்டியதும்... வங்கிகளிடம் சமர்ப்பிக்க வேண்டியதும்...

* வீடு அல்லது நிலம் பிடித்திருந்தால் அதற்கான அப்ரூவல் சரியாக இருக்கிறதா என முதலில் கவனிக்க வேண்டும். எந்த இடத்தில் நிலம் இருக்கிறதோ அங்குள்ள சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் விசாரிக்கலாம். உதாரணத்திற்கு, சென்னை என்றால் சி.எம்.டி.ஏ அப்ரூவல் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.

*விவசாய நிலத்திற்கு வீட்டுக் கடன் தரமாட்டார்கள். எனவே, விவசாயம் இந்த நிலத்தில் செய்யவில்லை என்பதற்கான ஒரு சான்று சம்பந்தப்பட்ட தாலுக்கா அலுவலகத்தில் வாங்க வேண்டியது அவசியம்.

* சொத்தில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதை இ.சி போட்டுப் பார்த்து, அதற்கான சான்றும் பெற வேண்டும்.

*வங்கி அங்கீகரிக்கும் எஞ்சி னியர்களிடம் வீட்டின் மதிப்பீட்டிற்கு ஒரு சான்று வாங்க வேண்டும்.

*இதன் பிறகு, சொத்தின் மூலப் பத்திரம், இ.சி சான்று, அப்ரூவல் சான்று போன்றவற்றின் நகலை வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வக்கீலிடம் காண்பித்து, ‘லீகல் ஒப்பீனியன்’ ஒன்றை வாங்க வேண்டும்.

*அடுத்து, விற்பனை ஒப்பந்தம் -அதாவது விற்பவர்-வாங்குபவர் போட்டுக்கொள்ளும் sணீறீமீ ணீரீக்ஷீமீமீனீமீஸீt கொடுக்க வேண்டும்.

*இந்தச் சான்றுகளின் ஒரிஜினல் அனைத்தையும் வங்கிகளிடம் சமர்ப்பித்தபிறகுதான் வங்கிகள் கடன் வழங்கும். மொத்தமாக வீட்டின் உரிமை வங்கியின் பெயருக்கு மாறிவிடும். கடன் முழுவதையும் திரும்பச் செலுத்திய பிறகே வீட்டின் உரிமை உங்கள் பெயருக்கு மாறும். லோன் வாங்கும் முன்...

*பொதுவாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்தான் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் என்பதால், அப்படிப்பட்ட வங்கிகளைத் தேர்வு செய்வது நல்லது. ஒருவேளை தனியார் வங்கிகள் என்றால், எந்த வங்கி குறைவான வட்டி விகிதம் அளிக்கிறதோ அதனைத் தேர்வு செய்யலாம். உங்களால் மாதம் எவ்வளவு இ.எம்.ஐ கட்ட முடியும் என்பதைப் பார்த்து வங்கிகளைத் தேர்வு செய்வதும் அவசியம்.

*லோன் ப்ராஸசிங் ஃபீஸ் என்பதை எல்லா வங்கிகளும் நடைமுறையில் வைத்திருக்கின்றன. அதாவது, லோனை செயல்முறைப்படுத்துவதற்குக் கட்டணம். இது ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடும். சில வங்கிகள் லாப நோக்கோடு அதிக கட்டணம் வசூலிக்கலாம். இதனையும் கடன் வாங்கும்போது கருத்தில் கொள்ளவேண்டும்.

-பேராச்சி கண்ணன்