ஒரு புதுமை
‘‘ஏறிக்கிட்டே இருந்த பெட்ரோல் விலை வேணும்னா கொஞ்சம் இறங்கியிருக்கலாம். ஆனா, வேலைப்பளுவால மனுஷனுக்கு ஏறுற பிளட்பிரஷர் லெவல் அப்படியேதான் இருக்கு. ஆரோக்கியத்தைக் காப்பாத்த சைக்கிளிங் ரொம்ப நல்லது... ஆனா, அதை பேலன்ஸ் பண்ணி ஓட்டக் கஷ்டப்படுறாங்க வயசான வங்க. அவங்களுக்காகக் கண்டுபிடிச்ச சைக்கிள்தான் இது!’’ - கிட்டத்தட்ட கார் போல பிரமாண்டம் காட்டும் தன் நான்கு சக்கர சைக்கிளைக் காட்டிப் பேசுகிறார் குமார் நடராஜன்.
பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான பிரமிட் நடராஜனின் மகன்தான் இவர். ஆனால், அதற்கான பெருமிதங்கள் ஏதும் இன்றி ஒரு பொறியாளர் தோரணையிலேயே ஸ்ட்ரிக்ட்டாக இருக்கிறது பேச்சு.‘‘அட... நான் எஞ்சினியரெல்லாம் இல்லைங்க. தி.நகர் ராமகிருஷ்ணா ஸ்கூல்லதான் பிளஸ் 2 படிச்சேன். டி.பி.ஜெயின் காலேஜ்ல பி.காம் சேர்ந்தேன்;
ஆனா, முடிக்கல. தனுஷ் ஒரு படத்துல சொல்ற மாதிரி, ‘வராத படிப்பை வா வான்னா எப்படி வரும்?’ படிக்கிறதும் எழுதுறதும் எனக்குக் கஷ்டம். ஆனா, எந்த ஒரு வேலையையும் கண்ணால பார்த்தா அப்படியே செய்துவிடுவேன். அப்படி வெளிநாடுகள்ல கிடைச்ச அனுபவத்தை வச்சித்தான் NAT Infotechனு ஒரு கம்பெனியைத் தொடங்கி நடத்திக்கிட்டிருக்கேன். இன்னொரு வீடியோ டேட்டா மைனிங் கம்பெனியும் எனக்கு இருக்கு!’’ என்கிற குமார், மெல்ல தனது சைக்கிள் ஆர்வத்துக்கு வருகிறார்.
‘‘2007ல ஒருமுறை குடும்பத்தோட ஆஸ்திரேலியாவுக்குப் போயிருந்தோம். அங்க மூணு பேர், நாலு பேர் ஓட்டுற மாதிரி ட்ரை சைக்கிள்களைப் பார்க்க முடிஞ்சுது. ரெண்டு சக்கர சைக்கிளை ஓட்ட பயப்படுற என் பொண்ணு அதை சந்தோஷமா ஓட்டினா. இது மாதிரி சைக்கிள் நம்ம நாட்டுல இல்லையேன்னு அப்ப தோணிச்சு. அதுல ஒரு சைக்கிளை வாங்கிப் போட்டுட்டு வந்துடலாம். ஆனா, இங்க அப்படிப்பட்ட சைக்கிள் எல்லாருக்கும் கிடைக்கணும்னு நினைச்சேன்.
உடம்புக்கு நல்லதுன்னாலும் வயசானவங்க ஏன் சைக்கிள் ஓட்டுறதில்ல? ‘பேலன்ஸ் பண்ண கஷ்டமா இருக்கும்... காலை ஊன்றி நிக்க முடியாது... எதுலயாவது லேசா இடிச்சாலும் கீழே விழுந்துடுவோம்’னுதானே! அந்தப் பிரச்னை மூணு சக்கர சைக்கிள்ல இல்ல. அதனாலயே எல்லாருக்கும் இதைக் கொண்டு வந்து சேர்க்கணும்னு தோணிச்சு.
இங்க வந்து நானா சில கம்பெனி களை அணுகி, ‘எனக்கு மூணு அல்லது நாலு சக்கரத்தோட சைக்கிள் வேணும்’னு கேட்டேன். பலர் இதைப் புரிஞ்சிக்கவே இல்லை. சிலர் புரிஞ்சிக்கிட்டாலும் ஒரு சைக்கிளை உருவாக்க சுமார் 40 ஆயிரம் ரூபாய் ஆகும்னாங்க. இது இறக்குமதி பண்றதை விட அதிக ரேட்!’’ என்கிற குமார், இந்த சைக்கிளை உருவாக்கியே தீருவேன் எனக் களமிறங்கக் காரணம், அவரது உடல்நிலைதானாம்.
‘‘போன வருஷம் எனக்கு ஹார்ட் அட்டாக். ட்ரீட்மென்ட் முடிஞ்சு வரும்போது டாக்டர்கள் எனக்கு எழுதித் தந்த முக்கியமான மாத்திரை, உடற்பயிற்சி தான். சைக்கிளிங் ரொம்ப நல்லதுன்னாங்க... அதுவும் எனக்கே எனக்கான சைக்கிள்... நாலு சக்கர சைக்கிள்னா ரொம்ப நல்லதாச்சே! வடபழனியில் உள்ள நண்பர் ஒருத்தர் உதவியோட முதல்ல ஒரு ட்ரை சைக்கிள் செய்து, அதுல சில மாற்றங்கள் பண்ணி உருவாக்கினது தான் இந்த சைக்கிள். இதுவரை சைக்கிளே ஓட்டாதவங்க கூட இதை ஓட்டலாம்.
மிதிக்க ஈஸியாதான் இருக்கும். நானே தினமும் இதுல சுமார் 10 கி.மீ வரை போறேன். மெரினா பீச்சுக்குப் போனா ஊரே ஃபாலோ பண்ணி வந்து விசாரிக்கும். ‘எனக்கு ஒண்ணு... எங்க அப்பாவுக்கு ஒண்ணு’ன்னு அங்கேயே ஆர்டர் குவியும். இந்த சைக்கிள் தயாரிப்புக்காகவே இப்ப ‘பெடல் டூ கோ’னு ஒரு பிராண்டை உருவாக்கியிருக்கேன். இப்ப இதுல ஒரு சைக்கிள் தயாரிக்க எனக்கு இருபதாயிரம் ரூபாய் வரை செலவாகுது.
உற்பத்தி அதிகமானா ரொம்பக் குறைஞ்ச விலையில இதை தயாரிக்க முடியும். வர்ற தை மாசத்துல இருந்து இதை விற்பனைக்குக் கொண்டு வரலாம்னு இருக்கேன்!’’ என்கிற குமார், பார்ட் டைம் டப்பிங் கலைஞரும் கூட. ‘ஆரம்பம்’, ‘மாற்றான்’, ‘லிங்கா’, ‘ஐ’ உள்ளிட்ட 87 படங்களில் பணியாற்றியிருக்கிறார்.‘‘எத்தனை வேலை செய்தாலும் ஆத்மார்த்தமா, ஆர்வமா செய்யணும் சார்!’’ - முத்தாய்ப்பாய் அவர் வழியனுப்ப, சைக்கிளிங் போய் வந்த புத்துணர்ச்சி கிடைக்கிறது மனதுக்கு!
எம்.நாகமணி
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்