எனக்குஅவளும் அவளுக்கு நானும்தான் உலகம்!



‘‘பிறவியிலேயே இப்படித்தான்... கை ஒரு பக்கம் காலு ஒரு பக்கம்னு வளைஞ்ச மேனிக்குத்தான் பெறந்திருக்¢கேன். பாத்த மாத்திரத்திலேயே அம்மாவுக்கு பிடிக்கலே போலருக்கு... தூக்கி பாட்டிகிட்டே கொடுத்திருச்சு! பாட்டிதான் அம்மாவுக்கு அம்மாவா,

அப்பாவுக்கு அப்பாவா, தெய்வத்துக்குத் தெய்வமா இருந்து வளர்த்துச்சு. டவுசர் தேயத் தேய தவழ்ந்து திரிஞ்ச பய இன்னைக்கு தனியா எழுந்து நின்னு பத்தடி எடுத்து வைக்க முடியுதுன்னா அது எங்க பாட்டி எனக்குக் கொடுத்த வரம்...’’


- நெகிழ்வாகப் பேசுகிறார் பாலாஜிபாபு. குழந்தை போலத் தெரிபவரின் பேச்சில் அனுபவங்கள் போதித்த முதிர்ச்சி. 48 வயதாகிறது. கைகளும், கால்களும் இயல்பை மீறி வளைந்திருக்கின்றன. ஆனால் வாழ்க்கையில் வளைவில்லை. சுயமாகப் பொருளீட்டும் அளவுக்கு தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அடித்தட்டுக் குழந்தைகளைத் தேடிப் பிடித்து இந்தியும் ஆங்கிலமும் கற்றுக் கொடுக்கிறார். சமூகத்தில் எல்லா அளவீடுகளிலும் புறக்கணிக்கப்படுகிற மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பேசுவதற்காக ‘மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பு நல சங்கம்’ என்ற அமைப்பையும் தொடங்கியிருக்கிறார். எல்லா விதத்திலும் முன்னுதாரணமாகக் கொள்ளத் தக்கவராக இருக்கிறார்.

மணலி, புதுநகரில் வசிக்கிறார் பாலாஜிபாபு. அவரைப் போலவே மனைவி மல்லிகாவும் வெள்ளந்தியாக இருக்கிறார். கணவரின் கண்ணசைவில் இயங்குகிறார். ‘‘2 தம்பிங்க, 1 அக்கா, 1 தங்கைன்னு குடும்பம் நிறைய பிள்ளைங்க. யாருக்கும் எந்தக் குறையும் இல்லை. அப்பா, தாய்மாமன் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டார்.

அதுக்கான தண்டனை எனக்கு. பாட்டி பேரு சரோஜா. அது பேரைச் சொல்லும்போதே கண்ணு கலங்குது. பாட்டி மட்டும் இல்லேன்னா என்னைக்கோ போய்ச் சேர்ந்திருப்பேன். கொஞ்சம் கூட நம்பிக்கை இழக்க விடாம காப்பாத்துச்சு.

ஒரு நாளைக்கு அண்ணா நகர், அசோக் நகர், எக்மோர்னு மூணு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு அலையும். ஒரு ஆஸ்பத்திரியில பிசியோதெரபி, இன்னொரு ஆஸ்பத்திரியில ஆயுர்வேத சிகிச்சை... இன்னொண்ணுல அலோபதி வைத்தியம். காலையில 6 மணிக்கு பீச்சுக்கு தூக்கிட்டுப் போயி மணலைத் தோண்டி என்னைக் கழுத்து வரைக்கும் புதைச்சு வச்சிடும். இரும்புல ஒரு பெல்ட் இருக்கு. அதை மாட்டினா எந்த இடத்துலயும் கூன் இருக்காது. அதை மாட்டி ஒரு மரக்கட்டையை விட்டு ‘நடடா’ன்னு விரட்டும். வேப்பெண்ணெய் தடவி உடம்பு முழுதும் நீவி விடும்.

எந்த ஸ்கூல்லயும் சேத்துக்கலே. எங்க வீட்டுக்கு எதிர்ல பள்ளிக்கூடம்... சுவத்தைப் புடிச்சுக்கிட்டு நின்னு பாத்தா புள்ளைங்கல்லாம் உக்காந்து படிச்சுக்கிட்டிருக்குங்க. ஆசை ஆசையா வரும். என் பள்ளிக்கூடக் கனவு பன்னிரண்டு வயசுலதான் நிறைவேறுச்சு. எங்க வீட்டுக்குப் பக்கத்துல இலாஹி அன்புமணின்னு ஒரு அரசியல் பிரமுகர் இருந்தாரு. அவரு பெரியமேடு அய்யா ஸ்கூல்ல சேத்து விட்டாரு. ‘தினமும் மத்தியானம் ஸ்கூலுக்கு வந்து பையனை பாத்ரூம் அழைச்சுக்கிட்டுப் போயிடணும்’ங்கிற நிபந்தனையை பாட்டிக்கு விதிச்சு என்னை சேத்துக்கிட்டாங்க.

தினமும் ஏதாவது ஒரு மாமா ஸ்கூல்ல கொண்டு போய் விடுவாங்க. ஸ்கூல் டைம்ல பாத்ரூம் வந்தா அடக்கிக்க பழகிக்கிட்டேன். இன்னைக்கு வரைக்கும் அது யூஸ்ஃபுல்லா இருக்கு. ஸ்கூல்ல நொண்டி, சப்பாணின்னு கேலிகள் இருந்தாலும், சரஸ்வதி டீச்சர், ஜெகதா டீச்சர்னு நல்ல ஆசிரியைகளும் இருந்தாங்க. ஜெகதா டீச்சர் அவங்க போற ரிக்ஷாவுலயே என்னையும் ஸ்கூலுக்கு கூட்டிக்கிட்டுப் போவாங்க.

ஆறாம் வகுப்பு வந்தபோதே முட்டி மோதி எழுந்து நிக்கத் தொடங்கிட்டேன். யாராவது ஒருத்தரைப் புடிச்சுக்கிட்டு நடக்கவும் ஆரம்பிச்சுட்டேன். காலு கையை வளைச்சுப் போட்ட ஆண்டவன், ஏனோ நல்ல படிப்பைக் கொடுத்தான். எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் எல்லா வகுப்புலயும் நான்தான் முதல் மதிப்பெண். மேலே படிக்க ஆசையிருந்துச்சு... ஆனா, பாட்டியால முடியல.
 
ஒரு அரசு வேலை வாங்கிக் கொடுத்துடணும்னு அதுக்கு ஆசை. ஆனா அது அவ்வளவு சாதாரணமா கிடைச்சுடல. இவ்வளவு நாள் நமக்காக கஷ்டப்பட்ட பாட்டிக்கு சம்பாதித்து சோறு போடணும்ங்கிற ஆசை வந்துச்சு. டைப் ரைட்டிங் கத்துக்கிட்டா வேலை கிடைக்கும்னு ஒருத்தர் சொன்னாரு. சேர்ந்தேன். என் விரலால ஒரு பட்டனைக் கூட அழுத்த முடியல. ‘சரி, அது போகட்டும்’னு இந்தி கத்துக்கிட்டேன்.

இன்னைக்கு அதுதான் சோறு போடுது. கம்ப்யூட்டர் கத்துக்கிட்டா நிறைய வேலைவாய்ப்புன்னு ஒருத்தர் சொன்னார். அதையும் கத்துக்கிட்டேன். கோர்ஸ் முடிஞ்சதும் அந்த கம்ப்யூட்டர் சென்டர்லயே வேலையும் கிடைச்சுச்சு. கொஞ்ச நாள் வேலை செஞ்சபிறகு ஒரு பழைய கம்ப்யூட்டரை வாங்கிப் போட்டு நானே டேட்டா என்ட்ரி வேலை பார்க்க ஆரம்பிச்சேன்.

அப்சர் ஷரீப்னு ஒரு நண்பர்... பாட்டிக்குப் பிறகு நான் ரொம் பவும் மதிக்கிற நண்பர்... நான் எங்காவது வெளியில போகணும்னு சொன்னா, வேலைக்கு லீவு போட்டுட்டு என்னை அழைச்சுக்கிட்டுப் போவார். அவர் மூலமா கம்ப்யூட்டர் ஸ்டேஷனரிஸ் விக்கிற தொழில் அறிமுகமாச்சு. அதையும் செய்ய ஆரம்பிச்சேன். ஓரளவுக்கு வருமானம் வந்துச்சு. அதே வேகத்துல ஒரு கம்ப்யூட்டர் கோச்சிங் சென்டரையும் ஆரம்பிச்சுட்டேன். வாழ்க்கை பரபரப்பா மாறிடுச்சு.

அந்தத் தருணத்துலதான் திருமணம். பொதுவா எனக்கு திருமணம் பத்தின எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. ஆனா கனவு மாதிரி எல்லாம் நடந்துச்சு. மல்லிகா, திருவாரூர் பொண்ணு. முழு மனதோட என்னை ஏத்துக்கிட்டா. அவ வந்ததுக்கப்புறம் வாழ்க்கையில இன்னும் கூடுதல் பிடிப்பு வந்திடுச்சு...’’ - மல்லிகாவின் கரத்தைப் பற்றிக் கொள்கிறார் பாலாஜிபாபு.

‘‘உறவுக்காரங்ககிட்ட நிறைய கத்துக்கிட்டிருக்கேன். நிறைய ஏமாத்தப்பட்டிருக்கேன். ஆனா அதைப்பத்தியெல்லாம் பேச விரும்பல. எல்லாருமே ஏதோ ஒரு விதத்துல என் வாழ்க்கைக்கு உதவியிருக்காங்க. ஏதோ ஒருநாள் அவங்க தோளைப் பிடிச்சு நான் நடந்திருப்பேன். நல்ல மனைவி, நல்ல நண்பர்கள், நல்ல வாழ்க்கை எனக்கு அமைஞ்சிருக்கும்போது மத்ததைப் பத்தியெல்லாம் நினைக்கவே விரும்பலே. 

இப்போ கம்ப்யூட்டர் சென்டரை விட்டுட்டேன். இந்தி டியூஷன்... கம்ப்யூட்டர் ஸ்டேஷனரி விற்பனை... ரெண்டும் பண்றேன். மாற்றுத் திறனாளிகளுக்கு நிறைய செய்ய வேண்டியிருக்கு. உறவு, சமூகம், அரசு... எல்லாமே அவங்களை மூன்றாந்தர மக்களாத்தான் பாக்குது... சின்ன பரிதாபத்தோட எல்லாரும் கடந்து போயிடுறாங்க. ஓரளவுக்கு உறவுகளோட ஆதரவும் கல்வியும் இருந்த நானே மனசு முழுக்க வலியைச் சுமந்துக்கிட்டிருக்கேன்.

படிக்காத, உறவுகளால புறக்கணிக்கப்படுற மாற்றுத்திறனாளிகள் நிலையை நினைச்சுக்கூடப் பார்க்க முடியல. எல்லா வேலைகளையும் விட இப்போ அவங்களுக்கான வேலைகள்தான் முக்கியமா படுது. அரசு சலுகைகளை வாங்கிக் கொடுக்கிறது, தொழிற்பயிற்சிகள்ல சேத்து விடுறதுன்னு பல வேலைகள் நடக்குது... சுயமா யாரோட சார்பும் இல்லாம அவங்க வாழ என்ன தேவையோ, அதையெல்லாம் கேட்டுப் போராடுறேன்.

எனக்கு 48 வயசு ஆச்சு. ஒரு வாகனம் வச்சிருந்தேன். கெட்டுப்போயிக் கிடக்கு. இப்போ எங்கே போனாலும் இவளோட கையைப் பிடிச்சுக்கிட்டுத்தான் நடக்கிறேன். சின்ன முகச்சுளிப்பு கூட இல்லாம என் கூடவே நடந்துக்கிட்டிருக்கா. என்னையவே நம்பி வந்த என் மல்லிகாவுக்கு கர்ப்பப்பையில பிரச்னை... ரெண்டு மூணு ஆபரேஷன் பண்ணியும் சரியாகல. கடைசியில கருப்பையை எடுத்தாச்சு. எனக்கு அவளும் அவளுக்கு நானும்தான் உலகம்.

சராசரித்தனமான கனவுகள் எதுவும் எங்களுக்குக் கிடையாது. இருக்கிற வரைக்கும் அப்படியே வாழ்ந்து முடிஞ்சிருவோம். படிப்பையும், தன்னம்பிக்கையையும், தந்து இப்படியொரு மனைவியையும் தந்துட்டுத்தான் என் பாட்டி என்னை விட்டுப் போயிருக்கு... என்னைப் பொறுத்தவரைக் கும் அதுதான் எனக்கு சாமி!’’-கையெடுத்து வணங்குகிற பாலாஜி பாபுவின் கண்களில் நீர் ததும்புகிறது!

ஓரளவுக்கு உறவுகளோட ஆதரவும் கல்வியும் இருந்த நானே மனசு முழுக்க வலியைச் சுமந்துக்கிட்டிருக்கேன். படிக்காத, உறவுகளால புறக்கணிக்கப்படுற மாற்றுத்திறனாளிகள் நிலையை நினைச்சுக்கூடப் பார்க்க முடியல.

-வெ.நீலகண்டன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்