சமுதாய நிகழ்வுகளைக் காலக்கண்ணாடியாகக் காட்டிக்கொண்டிருந்த படங்களைத் தந்தவங்க, மலையாளப் படைப்பாளிகள் கூட ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்ட நிலையில் 30 வருடங்களாக தமிழ்சினிமாவில் ஆரோக்கியமான செய்திகளைச் சொல்லும் படங்களை மட்டுமே இயக்கிவருபவர் ஜெயபாரதி. 'குடிசை ஜெயபாரதி’ என்றால் பளிச்சென்று விளங்கும்.
1979ல் ஜெயபாரதி இயக்கிய ‘குடிசை’, சிறந்த படத்துக்கான தேசியவிருதைப் பெற்றது. அத்துடன் தகவல் ஒலிபரப்புத்துறை அந்தப்படத்தைப் பாடமாகவே வைத்திருக்கிறது. 90ல் இவர் இயக்கிய ‘உச்சி வெயில்’ சர்வதேசப் படவிழாக்களில் கலந்துகொண்டதுடன், சமகால உலக சினிமாவுக்கான இதழில் விமர்சிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 2002ல் சிறந்த துணை ‘சப்போர்டடிங் ஆக்டர்’ தேசிய விருதை சந்திரசேகர் பெற்ற ‘நண்பா நண்பா’ படமும் ஜெயபாரதியின் உருவாக்கம்தான். மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் ஆவணப்படங்களை இயக்கித் தந்திருக்கும் அவர், இப்போது குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றிய ‘புத்ரன்’ படத்தைத் தயாரித்து, இயக்கி முடித்திருக்கிறார்.
‘‘இது குழந்தைத் தொழிலாளர் பிரச்னைகளை சொல்றது மட்டுமில்லாம, சமீப காலங்கள்ல பெரிய சவாலா இருக்க குழந்தைக் கடத்தல் சம்பந்தப்பட்டும் பயணிக்குது. இதில முக்கியக் கதாபாத்திரங்களா ஒய்.ஜி.மகேந்திராவும், சங்கீதாவும் நடிச்சிருக்காங்க.
காமெடியனா அறியப்பட்டாலும் ஒய்.ஜி.மகேந்திராவுக்கு நடிப்பில சீரியஸ் முகமும் இருக்குங்கிறதை ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ படம் நிரூபிச்சது. இப்ப இந்தப்படம் அவரோட ஆற்றலை முழுக்க வெளிக்கொண்டு வந்திருக்கு.
‘மன்மதன் அம்பு’ன்னு பிரமாண்ட படம் பண்ணிக்கிட்டிருந்த சங்கீதாகிட்ட இந்தக்கதையை சொன்னேன். கதையைக் கேட்டுட்டு ‘கண்டிப்பா நடிக்கிறேன்...’னு அவங்க சொன்னப்பவும், நான் ‘இது வழக்கமான கமர்ஷியல் படமில்லை. நீங்க எதிர்பார்க்கிற சம்பளம், மற்ற விஷயங்கள் பற்றிப் பேசிடலாம்...’னு சொன்னேன். ‘எதுவா இருந்தாலும் கண்டிப்பா இந்தப்படம் பண்றேன்...’னு சொல்லி நடிச்சுக் கொடுத்தாங்க. நடுத்தர வயசு மற்றும் பத்து வயசுப் பையனுக்குத் தாயா நடிக்கிறதால மேக்கப் போட்டுக்காம முகத்தில இருந்த பருக்களின் அடையாளத்தோட நடிச்சதுல அவங்க நடிப்புக்கான அர்ப்பணிப்பைப் பார்த்தேன். படத்தில மகனைப் பிரிஞ்ச அவங்களோட தவிப்பான நடிப்புக்கு உரிய அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.
மேற்படி ரெண்டு பேருக்கும் மகனா வருண் நடிச்சிருக்கான். ஐந்து தேசிய விருதுகள் வாங்கிய இசையமைப்பாளர் ஐசக்தாமஸோட அசோஸியேட்டான தர்ஷன் இதுக்கு இசையமைக்க, முத்ரா ஒளிப்பதிவு செஞ்சிருக்கார். படத்தில வர்ற ஒரு பாடலை வெ.இறையன்பு எழுத, அதை சங்கீதாவோட கணவர் கிரிஷ் பாடியிருக்கார். நல்லவனுக்கு துன்பம் வர்றது மத்தவங்களுக்கான நன்மைக்குதான்னு சொல்ற இந்தப்படம், இந்தக் காலகட்டத்துக்கான செய்தியை முன்வைக்குது..!’’ என்றார் ஜெயபாரதி.
ஜி