சென்ற வருடம் +2 பொதுத்தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல், கணிப்பொறி அறிவியல் பாடங்களில் சென்டம் அடித்து முத்து நகரான தூத்துக்குடிக்கு மகுடம் சூட்டியவர் பாண்டியன். 1187 மதிப்பெண்களை அள்ளிய தமிழகத்தின் டாப்ஸ்கோரர்.
தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பயின்ற பாண்டியன், இப்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாண்டு மாணவர். கணக்கில் 200/200 மதிப்பெண்களை வேட்டையாடிய வித்தையை உற்சாகமாகப் பகிர்ந்து கொள்கிறார் பாண்டியன்.
‘‘முதல் மதிப்பெண்ணை குறியாகக் கொண்டு படிக்கவில்லை. எல்லாவற்றையும் புரிந்துகொண்டு படித்தேன். கணக்குப் பாடத்தைப் பொறுத்தவரை ஃபார்முலாக்களை தெளிவா புரிஞ்சுக்கிட்டாலே போதும். அடிப்படையே அதுதானே? பள்ளியிலயும் டியூஷன்லயும் கணக்கு பாடம் நடத்தும்போது நல்லா கவனிக்கணும். அப்படிச் செய்தால் கணக்கும் இனிக்கும்.
ஒதுக்கி வைக்காம எல்லா கணக்குகளையும் போட்டுப் பார்த்துடுவேன். இப்படி அப்பப்ப சரி செய்து கொள்வதால்தான் மற்ற பாடங்கள்லயும் என்னால கவனம் செலுத்த முடிஞ்சது.
சில கணக்குகள் நடத்தும்போது புரியும்; பிறகு குழப்பமாக இருக்கும். அந்த மாதிரி கணக்குகளை நேரம் கிடைக்கும்போது மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்து தெளிவாக்குவேன்.
கலப்பு எண்கள் , வகைநுண் கணிதம் 2 பாடங்கள் கொஞ்சம் கஷ்டம். அப்படிப்பட்ட கணக்குகளை இரண்டு அல்லது மூன்று முறை போட்டுப் பார்ப்பேன். எளிமையாகி விடும். 10 மார்க் கணக்குகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கோ, அதே அளவு ஒரு மதிப்பெண் கணக்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன்.
ஆசிரியர்கள் நடத்தும்போதே தெளிவா புரிஞ்சுக்கிறதால நான் அதிக நேரம் ஒதுக்கி படிக்க அவசியம் ஏற்படலை. புத்தகத்துல எந்தக் கணக்கைக் கேட்டாலும் பதில் தெரியற அளவுக்கு படிச்சேன்.
தேர்வு அறைக்குப் போகும் முன்னால் ஃபார்முலாவை ஒருமுறை திருப்பிப் பார்ப்பேன். தெளிவாக இருக்கிறோம் என்ற மனநிலை ஏற்படும். அந்த மனநிலை இருந்தால் குழப்பங்களைத் தவிர்த்து விடலாம்.
வினாத்தாளைப் படிக்கும்போதே எந்தக் கேள்விகளுக்குச் சரியாக பதில் எழுத முடியும் என்பதைத் தீர்மானித்து விடுவேன்.
இரண்டு மணி நேரத்துல தேர்வை எழுதி முடிச்சிடுவேன். மீதமுள்ள ஒரு மணி நேரத்தில், எழுதிய பதில்கள் சரியாக இருக்கிறதா என சோதிப்பேன்.
1 மதிப்பெண் பதில்களுக்கு தனியாக தாள் ஒதுக்கி விடையெல்லாம் சரியானதுதானா என எழுதிப் பார்ப்பேன்.
எல்லாவற்றையும்விட முக்கியம், பதில்களை வெளிப்படுத்துற விதம். எல்லாருக்கும் எல்லா பதிலும் நல்லா தெரிந்திருந்தும் மதிப்பெண் குறைவது அவங்க பதிலை வெளிப்படுத்துகிற விதத்தில்தானே? சரியாக வெளிப்படுத்தினால்தான் முழு மதிப்பெண் பெற முடியும்.
இடையில் ஒரு சில வார்த்தை, எண்களில் மட்டும் தவறுகள் இருந்தால் அதை அடித்து விட்டு எழுதுவேன். அதிக தவறுகள் இருந்தால் அந்தப்பக்கத்தை அடித்து விட்டு வேறு தாளில் தெளிவாக எழுதி இணைப்பேன்.
ஒவ்வொன்றிலும் எழுதியதை சரிபார்த்துக் கொண்டேன்.
ஒரு பாடத்துக்கான தேர்வை சரியாக எழுதாவிட்டாலும் அது மற்ற பாடங்களின் தேர்வையும் பாதிக்கும். அதற்கு இடம் கொடுக்காததால்தான் மற்ற பாடங்களிலும் சென்டம் வாங்க முடிந்தது’’ என்கிறார் முத்து நகரத்துக்காரர்.
பாண்டியனின் முதல் மதிப்பெண் சாதனையில் முக்கிய பங்கு வகிப்பவர் அவரது கணித ஆசிரியர் சுந்தர் மகாராஜன். ‘‘கணக்கை கஷ்டமான பாடமா நினைக்கிறாங்க. சரியா புரிஞ்சு படிச்சா, சொல்லி வச்சு கணக்குல சென்டம் அடிக்கலாம்’’ என்கிற அவர் தன் வெற்றிச் சூத்திரத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.
‘‘மொத்த மாணவர்களை மூன்று பிரிவா பிரிச்சு பாடம் நடத்தினேன். அதன்மூலம் சரியாகப் புரிந்து கொண்டவர்கள், குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெரிந்துகொண்டேன். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு என்னென்ன பயிற்சிகள் தேவை என்பதை உணர்ந்து சரி செய்தேன்.
ஒரு மதிப்பெண் கேள்விகள், 10 மதிப்பெண் கேள்விகள், 5 மதிப்பெண் கேள்விகள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தினேன். நிறைய தேர்வுகள் வைப்பது மாணவர்களைச் சோதிக்க மட்டுமல்ல... அது விரைவாக தேர்வு எழுதுவதற்கான பயிற்சியாகவும் அமையும்.
வினாக்களை தேர்வு செய்வதைப் பொறுத்தே மதிப்பெண்கள் கிடைக்கும். சில கேள்விகளுக்கு சுருக்கமாக விடையளித்தால் போதும். சில கேள்விகளுக்கு விரிவான பதில் வேண்டியதிருக்கும். விரிவாக எழுதும்போது சில நேரங்களில் தவறான பதிலாக மாறிவிடக்கூடும். படித்ததை அவ்வப்போது யோசித்துப் பார்த்து பயிற்சி செய்தால் இந்தப் பிரச்னை வராது.
விடைத்தாளில் அடித்தல், திருத்தல் கூடாது. கூடுதல் பக்கங்களில் விளக்கங்களை எழுதி தெளிவுபடுத்த வேண்டும். ஒரு மதிப்பெண் விடைக்கும் இது அவசியம்.
அவசரம் காட்டினால் ஃபார்முலாவையோ, எண்களையோ மாற்றி எழுதும் வாய்ப்புகள் அதிகம்.
கவனம் மிக அவசியம். எழுதி முடித்தபின் இரண்டு முறையாவது விடைத்தாளைத் திருப்பிப் பார்க்க வேண்டும்.
புரிதலும் முயற்சியும் திட்டமிடலும் இருந்தால் எல்லோருக்குமே 200/200 சாத்தியம்தான்’’ என்கிறார் கணித ஆசிரியர்
சுந்தர்மகாராஜன்.
ஆர்.எம்.திரவியராஜ்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்