பட்டிமன்றமும் இந்த பாப்பையாவும்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

     அ
ப்போ ஜார்ஜ்டவுன்ல ரூம் எடுத்து தங்கியிருந்தான் தியாகராஜன். என்னையும் அவன்கூடவே தங்க வச்சுக்கிட்டான். அந்தக் காலத்தில, சில அரசுத்துறைகள்ல தற்காலிக ஊழியர்களா ஆட்களை நியமிச்சுக்கலாம். அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சு என்னை அரசாங்க வேலைக்குள்ள தள்ளிவிட முடியுமாங்கிறதுதான் தியாகராஜனோட எதிர்பார்ப்பு. அதிகபட்சம் ஒரு கிளார்க் வேலை. பத்து, பதினைஞ்சு நாளு சுத்தியடிச்சுப் பாத்தேன். தியாகராஜனும் சில இடங்களுக்கு அழைச்சிட்டுப் போனான். இப்போ வேலை காலி இல்லேன்னு எல்லாரும் ஒரேமாதிரி சொல்லிட்டாங்க.

எனக்கு சென்னை வெறுத்துப் போச்சு. இதெல்லாம் சரிவராது தியாகு... ஊருக்கே போறேன்Õனு சொல்றேன். தியாகராஜன் விடலே... பொறுமையா இரு... ஏதாவது கிடைக்கும்னு நம்பிக்கையாச் சொல்றான். அய்யா வேற ஊர்லயிருந்து கடிதத்துக்கு மேல கடிதமா எழுதுறார். சும்மா உக்காந்துக்கிட்டு, தியாகராஜனுக்கு சிரமம் குடுக்க எனக்கு விருப்பமில்லே. அவனை சமாதானப்படுத்திட்டு மதுரைக்கு கிளம்பிட்டேன்.

ஊருக்கு வந்தும், வீட்டில சும்மா இருக்கப் பிடிக்கலே. ‘சரி, சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதிப் பாக்கலாம்’னு ஒரு யோசனை. எழுதினேன். ரிசல்ட் வர்றதுக்குள்ள, எம்.ஏ. கிடைச்சு தியாகராஜர் கல்லூரிக்கு போகத் தொடங்கிட்டேன். கல்லூரி தொடங்கி நாலைஞ்சு மாசம் கழிச்சு ரிசல்ட் வருது. கூடவே, ‘செங்கல்பட்டு தாசில்தார் ஆபீஸ்ல கிளார்க் வேலையில வந்து சேருங்க’ன்னு கடிதமும் வருது.

என்னால திடீர்னு எந்த முடிவும் எடுக்க முடியலே. ‘படிப்பை நிறுத்திட்டு வேலைக்கு போறதா? எம்.ஏ. முடிச்சுட்டு வாத்தியார் ஆகிறதா’ன்னு குழப்பம். அய்யாவோ, ‘அரைக்காசானாலும் அரசாங்க காசுய்யா... படிப்பை நிறுத்திருவோம். கட்டின காசு வேணா போயிட்டுப் போகுது. வேலைக்கு போய்யா’ங்கிறார்.

ஆனா, நான் படிப்புதான் முக்கியம்னு முடிவெடுத்தேன். வேலையில வந்து சேருங்கன்னு நாலஞ்சு நினைவூட்டல் கடிதங்கள் வந்துச்சு. எல்லாத்தையும் தூரப் போட்டுட்டு கல்லூரிக்குப் போகத் தொடங்கிட்டேன். அப்போ நான் எடுத்த முடிவுதான் இவ்வளவு தூரத்துக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்கு. ஒருவேளை அந்த வேலையை தேர்ந்தெடுத்திருந்தா, என்னோட வாழ்க்கை எந்தத் திசையில போயிருக்கும்னு நினைச்சுப் பார்க்க கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.

ஒருவழியா, தட்டுத்தடுமாறி எம்.ஏ. முடிச்சிட்டேன். எம்.ஏ. முடிச்சா, வீட்டைத் தேடிவந்து வேலை குடுத்து கூட்டிக்கிட்டுப் போயிருவாங்கன்னு அய்யா எதிர்பாத்தார். ரிசல்ட் வந்த நாலஞ்சு நாள்லயே என் மூஞ்சியைப் பாத்து, ‘அய்யா... என்னய்யா ஆச்சு... முடிச்ச உடனே வேலை கிடைச்சிரும்னு சொன்னியே’ங்கிறார்.

அப்போ கல்லூரிகள்ல ‘டியூட்டர்’னு ஒரு வேலை உண்டு. அதாவது பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு அடுத்த பதவி. பயிற்றுனர் மாதிரி. பிழை திருத்துறது, எப்பவாவது ஆசிரியர்கள் இல்லைன்னா வகுப்பு எடுக்கிறது, விரிவுரையாளர்களுக்கு உதவி செய்றது... இந்த மாதிரி வேலை. ரெண்டு அல்லது மூணு வருஷத்துக்கு மட்டும் நியமனம் செய்வாங்க. நான் படிக்கும்போது முதல்வரா இருந்தாரே பேராசிரியர் சவுரிராயன்... அவருதான் அப்பவும் முதல்வர். எப்படியும் அவர் என்னை அமெரிக்கன் கல்லூரியில டியூட்டரா சேத்துக்குவாருங்கிற நம்பிக்கை எனக்கு.
என்னோட நேரமோ என்னவோ, அந்த வருஷம் அங்கே டியூட்டர் வேலை காலியில்லே... இருந்தாலும் ஒரு மரியாதைக்காக சவுரிராயன் சாரைப் பார்த்தேன்.

 ‘அய்யா, எம்.ஏ. முடிச்சிட்டேன்யா. வேலை தேடிக்கிட்டு இருக்கேங்கய்யா’ன்னு சொன்னேன். ‘ரொம்ப மகிழ்ச்சி பாப்பையா... உன்னை இங்கேயே வேலைக்கி வச்சுக்கிடணும்னு ஆசை... ஆனா, இப்போ வேலை இல்லேய்யா. வேலூர் ஊரிஸ் கல்லூரியில ஒரு டியூட்டர் வேலை காலியாயிருக்கு. நான் ஒரு கடிதம் தர்றேன். அதை எடுத்துக்கிட்டுப் போயி அந்த வேலையில சேந்திரு. அடுத்த வருஷம் இங்கே கிடைக்குதான்னு பாப்போம்’னு சொல்லி கடிதமும் குடுத்தார்.

அப்போ என் நண்பர் ராஜமாணிக்கமும் எம்.ஏ. முடிச்சுட்டு வேலைக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தார். என்னைவிட அவர் நல்ல மதிப்பெண் எடுத்தவர். கையெழுத்தும் முத்துபோல இருக்கும். அவருக்கும் தகவல் சொல்லி, ‘ஒண்ணு எனக்குக் கிடைக்கணும்... இல்லைன்னா உனக்குக் கிடைக்கணும்’னு ரெண்டு பேரும் விண்ணப்பம் அனுப்புனோம். அதிர்ஷ்டவசமா அந்த வேலை ராஜமாணிக்கத்துக்கு கிடைச்சுருச்சு. அதில எனக்கு எந்த வருத்தமும் இல்லே. என்னை விட எல்லா வகையிலயும் தகுதியானவரு அவர்.

ஆனா, மனசுல சின்ன பாதிப்பு... இப்படியே பொழுதுகள் போயிடுமோங்கிற பயம். அய்யா வேற நெருக்க ஆரம்பிச்சிட்டாரு. ‘பெரிசா நீ சம்பாதிச்சுத் தர வேண்டாமுய்யா. வாங்குன கடனையாவது கட்டலாமுல்ல? எம்.ஏ. படிச்சா பெரிசா கிடைக்கும்னு சொன்னியே... என்ன ஆச்சு’ங்கிறார்.

இனிமே சும்மா இருக்கக்கூடாதுன்னு, ஒரு டுடோரியல் காலேஜ்ல போயி வேலைக்குச் சேந்துட்டேன். விக்டரி டுடோரியல் காலேஜ்னு பேரு. 150 ரூவா சம்பளம். அதை நடத்தின ஆசிரியருக்கு எம்மேல பெரிய நம்பிக்கை. அப்போவெல்லாம் இளவட்டப் பசங்களை மாணவிகள் இருக்கிற வகுப்புக்கு அனுப்ப மாட்டாங்க. இவரு என்னை தைரியமா அனுப்பினார். ரொம்ப உற்சாகமாக வேலை செஞ்சேன்.

இங்கே வேலைக்குச் சேந்த 20வது நாள்... ஊரிஸ் கல்லூரியில இன்னொரு டியூட்டர் போஸ்ட் காலியாகுது. உடனடியா ராஜமாணிக்கம் எனக்குத் தகவல் சொன்னார். சொன்னதோட மட்டுமில்லாம, எனக்குத்தான் அந்த வேலையைக் கொடுக்கணும்னு துறைத்தலைவர்கிட்ட போராடியிருக்கார். ஒருவழியா, கல்லூரியில இருந்து எனக்கு அழைப்பு வந்துச்சு.
டுடோரியல் காலேஜ்ல 25 நாளு வேலை செஞ்சிருக்கேன். அதை நடத்துற ஆசிரியர் என்னை விடமாட்டேங்குறாரு... ‘வகுப்பு நல்லா எடுக்கிறீங்க. நானே உங்களை வேற கல்லூரியில சேத்துவிடுறேன். கொஞ்ச நாளைக்கி இங்கேயே இருங்க’ங்கிறார். ஆனா, ‘கல்லூரியில வேலை செய்றது என்னோட கனவு சார். நான் போயித்தான் ஆகணும்’னு சொல்லிட்டு சம்பளம்கூட வாங்காம கிளம்பிட்டேன்.

கிளம்பும்போது இன்னொரு பிரச்னை. என்கிட்ட இருந்தது ஒரே ஒரு பேன்ட்தான். அதுவும் எம்.ஏ. முதல் வருடம் சேரும்போது அய்யா எடுத்துக்குடுத்தது. கிழியுற நிலையில இருக்கு. அய்யாகிட்ட போயி, ‘அய்யா... வாத்தியாரு வேலைக்குப் போறேன். இந்த ஒரு பேன்டை மட்டும் வச்சுக்கிட்டு எப்பிடிப் போறதுய்யா’ன்னு கேட்டேன். அய்யாவுக்கு கோபம் வந்திருச்சு. ‘இந்தாப்பா... பேன்ட் வாங்கல்லாம் வழியில்லே. மதுரையிலயே வேலை கிடைச்சிருந்தா பரவாயில்லே. வேலூர் போகணுங்கிறே... அங்கே போறதுக்கே யாருக்கிட்ட கடன் வாங்கித் தர்றதுன்னு தெரியலே. இதுல பேன்ட், சட்டையெல்லாம் வாங்கமுடியாது’ன்னு கறாராச் சொல்லிட்டார். நாங்க பேசிக்கிறதைப் பாத்துட்டு, பக்கத்து வீட்டில குடியிருந்த என் நண்பன் குருபாதத்தோட அண்ணன், ஒரு பேன்ட் தச்சுக் கொடுத்தார்.

தியாகராஜர் கல்லூரியில சங்கரநாராயணன்னு ஒரு பேராசிரியர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஊரிஸ் கல்லூரியோட தமிழ்த்துறைத் தலைவர் நண்பர். அவர் ஒரு பரிந்துரைக் கடிதம் குடுத்தாரு. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வேலூருக்கு பஸ் ஏறிட்டேன்.

ஊரிஸ் கல்லூரியோட தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் யோகசுந்தரம். பெரிய படிப்பாளி. ரொம்ப தங்கமான மனிதர். அதிகம் பேசமாட்டார். நிதானமா, வார்த்தைகளை அளந்து அளந்துதான் பேசுவார். பாத்தவுடனேயே அவர் பேர்ல பெரிய மரியாதை வந்திருச்சு. அவருக்குக் கீழே ரெண்டு விரிவுரையாளர்கள் இருந்தாங்க. அவங்களுக்குக் கீழே ராஜமாணிக்கமும் நானும். எங்களுக்கு 102 ரூபா சம்பளம்.

போன அன்னிக்கே என்னைக் கூப்பிட்ட துறைத்தலைவர், ‘இப்போ உங்களுக்கு எந்த வேலையும் இல்லே பாப்பையா... தினமும் காலையில வந்து நூலகத்தில உக்காந்திருங்க. சாயங்காலம் வீட்டுக்குக் கிளம்பிருங்க. திடீர்னு ஏதாவது தேவைப்பட்டா கூப்பிடுறேன்’னு சொல்லிட்டார். கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு.

ரெண்டாவது நாளே எனக்கு சோதனைக்கட்டம் ஆரம்பமாயிடுச்சு. சாயங்காலம் மூணரை மணி. பியூன் வந்து, குறிப்பிட்ட ஒரு பேராசிரியரோட பேரைச் சொல்லி, ‘அவர் உங்களைக் கூப்பிடுறார்’னு சொன்னாரு. அவர் பேரைக் குறிப்பிட விரும்பலே. நான் எழுந்து அவரோட அறைக்குப் போனேன். அங்கே ராஜமாணிக்கம் ரொம்ப பதற்றமா நிக்கிறாரு. என்னை அலட்சியமா பாத்த அந்த வாத்தியார், ‘ஆங்... பாப்பையா... நான் அவசரமா வெளியில போறேன். நாலு மணிக்கு பெல் அடிச்சவுடனே என்னோட வகுப்புக்குப் போயி இந்தப் பாட்டை நடத்திருங்க’ன்னு சொல்லி ஒரு பாடலைக் குடுத்தாரு. புறநானூற்றுல, ‘படைப்பு பல படைத்து பலரோடு உண்ணும்’னு தொடங்குற பாட்டு அது. பாண்டியன் அறிவுடை நம்பி குழந்தைப்பேற்றைப் பற்றி பாடுற பாட்டு.

பொதுவா அனுபவமுள்ள பேராசிரியர்களே, பாடம் நடத்துறதுக்கு முன்னாடி அந்தப் பாடத்தைப் பத்தின தயாரித்தலோடதான் வகுப்புக்குள்ள போவாங்க. ஏன்னா, தமிழ்ங்கிறது பெரிய கடல். அந்தக் கடல்ல ஏதாவது ஒரு துறையில லேசா உடல் நனைச்சிருக்கோமே தவிர, முழுசா மூழ்கி முத்துக் குளிச்சவங்க யாருமில்லே. ‘கற்றது கைமண் அளவு’ம்பாங்களே... அதுகூட இங்கே பொருந்தாது... சுண்டுவிரல் நகம் அளவுக்குக்கூட இல்லேங்கறதுதான் உண்மை.

அதுவும் கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்துறது இருக்கே... அது தனிக் கலை. கொஞ்சம் இடறி நின்னாலும் அந்த புள்ளைக நமக்கு பாடம் நடத்திருங்க. புறநானூற்றை அங்கங்கே சில இடங்கள்ல தொட்டுருக்கேனே ஒழிய, தனிச்சு ஒரு பாட்டைப் பத்தி பாடம் நடத்துற அளவுக்கு என்கிட்ட எந்த தயாரிப்பும் இல்லே.

இது அந்தப் பேராசிரியருக்கும் நல்லா தெரியும். இருந்தும், என்னைப் பத்தி கேள்விப்பட்ட தகவல்கள், நான் கொண்டு போன பரிந்துரைக் கடிதங்கள் எல்லாம் சேந்து அவருக்குள்ள ஏற்படுத்துன எரிச்சலோ என்னவோ... எனக்கு அந்த பரீட்சையை வச்சார். அந்த பரீட்சையில நான் எப்படி ஜெயிச்சேங்கிறது பெரிய கதை.
அடுத்த வாரம் சந்திப்போமா!

சாலமன் பாப்பையா