நடைவெளிப் பயணம்



ருத்ரையா

இன்று பலர் கூறுவது போல ருத்ரையா எனக்கும் நண்பர். எனக்கு அவரை முதலில் சந்தித்தது எப்போது, எப்படி என்று சரியாக நினைவில்லை. ஆனால் 1973 அக்டோபரில் என்னை ஊருக்கு அனுப்ப வந்த குழுவில் அவர் இருந்தார்.

அதன் பின் நடுநடுவில் பார்த்திருக்கலாம். ஒரு புகழ்பெற்ற சோழ மன்னன் பெயர் கொண்ட நண்பர் மூலம் பல சினிமாத் துறைக்காரர்களைச் சந்தித்திருக்கிறேன். ஒரு முறை அவரிடம் சற்றுக் கடுமையாகக் கூட பேசியிருக்கிறேன்: ‘‘வெறுமனே ‘நினைத்திருக்கிறேன்’, ‘திட்டம் வைத்திருக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டு காலை ஏழு மணிக்கும் இரவு தூங்கப்போகும் நேரத்திலும் யாரையும் அழைத்து வராதீர்கள்.

(அவர் ஒருமுறை சசிகுமாரை இரவு ஒன்பது மணிக்கு அழைத்து வந்தார்!) ஒழுங்காக வேலையைத் தொடங்கிய பின் தகவல் தாரும். நான் உங்கள் வெற்றிக்கு மனமார வாழ்த்துவேன்’’ என்று சொன்னேன்.

 அப்புறம் அவரே ஒரு படம் தயாரித்து டைரக்டும் செய்தார். பணப் பற்றாக்குறை அப்படத்தில் கண்கூடாகத் தெரிந்தாலும், அது ஒரு நல்ல முயற்சி. இன்று ‘நில அபகரிப்பு’ என்ற சொல் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வரை சென்றிருக்கிறது. என் நண்பரின் படம் அதை மையமாகக் கொண்டது. அவரும் ஒரு காரணம், ருத்ரையா என் நண்பரானதற்கு.

‘அவள் அப்படித்தான்’ படம் வெளியானபோதே, ஒரு வித்தியாசமான, கூர்ந்து கவனிக்க வேண்டிய படம் என்ற எண்ணத்தைப் படம் பார்த்தவர்களிடம் ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அப்
படத்தில் சில முக்கியமான பாத்திரங்கள் முரண்பாடுகள் கொண்டவை. கதாநாயகி மட்டும் அல்ல. அவளை உதவியாளராக அமர்த்தி இருந்த முதலாளியும் முரண்பாடுகள் கொண்டவன். அப்பாத்திரத்தில் நடித்தவர் ரஜினிகாந்த். அவர் எல்லாக் காட்சிகளிலும் விபூதி தரித்தவராக வருவார். ஆனால் ஒரு முறையும் ஒழுங்காகத் தரித்திருக்க மாட்டார். அவர் தளைகளை உடைத்தவராக இருக்கலாம். ஆனால் நெற்றியில் விபூதி வேண்டும். அதை ஏன் ஒரு முறை கூட ஒழுங்காகப் பூசியிருக்கவில்லை? உண்மையில் பார்த்தால் படத்தை ‘அவள் அப்படித்தான்’ என்பதோடு, ‘அவன் அப்படித்தான்’ என்றும் அழைக்கலாம்.

அப்போது ருத்ரையா இளைஞர். சில கலாசார அம்சங்களில் அவருக்கு அதிகப் பரிச்சயம் இல்லாது போயிருக்கலாம். ருத்ரையா மறைந்தபோது அவருக்கு வந்த இரங்கல் கட்டுரைகள் போல சினிமாத் துறையில் ராஜ்கபூருக்கு வரவில்லை. நாகைய்யாவுக்கு வரவில்லை. ஒரு நண்பர் சொன்னார், ‘‘இப்படி அழுது புலம்புவதற்கு அவர் என்ன செய்தார்? அந்த ஒரே படத்தைத் தவிர!’’ என் பதில், ‘‘ருத்ரையாவின் ‘கிராமத்து அத்தியாயம்’, முதல் படத்தை விட இன்னும் சிறப்பாக இருந்தது.’’

அவர் ஒத்துக்கொள்ளவில்லை. படம் வெளியாகி, தோல்வி என்று அறிந்தபின் ருத்ரையாவே படத்தில் நிறைய குற்றங்களைக் கண்டுபிடித்தார். அவர் என்னிடம் சொன்ன பல ‘குற்றங்கள்’, உண்மையில் குற்றங்களல்ல. நான் அவருக்கு ஆறுதல் கூறுகிறேன் என்று தான் அவர் நினைத்தார். திரைப்படங்கள் இந்த வெற்றி - தோல்வி தர்க்கத்திலிருந்து நழுவிப்போகிற பொருள்.

எனக்குச் சட்டென்று சொல்லத் தோன்றுவது, பாரமவுண்ட் நிறுவனம் எடுத்த ‘வார் அண்ட் பீஸ்’ (டால்ஸ்டாய் எழுதிய மகா நாவல்). ஒரு வடிவமற்ற கதையிலிருந்து, டைரக்டர் கிங்க் விடார் கிட்டத்தட்ட நூறு முக்கிய பாத்திரங்களுக்கும் உயிரும் சதையும் கொடுத்து படத்தையும் சிறப்பான வடிவம் கொண்டதாக அமைத்திருந்தார்.

கதாநாயகனான பியருடைய போக்கிரி முதல் மனைவியின் அயோக்கிய சகோதரன், பியர் மிகுந்த மதிப்பு வைத்திருந்த நடாஷாவை மயக்கி அழைத்துச் செல்லும்போது துரத்திச் சென்று அச்சிறு பெண்ணை பெரிய விபத்திலிருந்து காப்பாற்றுகிறான். இவ்வளவுக்கும் அவன் ஒரு  திட மனமில்லாதவன், ஒன்றுக்கும் பயனில்லாதவன் என்ற பெயரைப் பெற்றவன். அயோக்கிய அண்ணன் - தங்கையாக வந்தவர்கள் நட்சத்திரங்கள்.

அனிடா எக்பெர்க் அன்று மர்லின் மன்ரோவுக்குப் போட்டியாகக் கருதப்பட்டவர். விட்டோரியோ காஸ்மன் அன்று இத்தாலி திரைப்படத் துறையில் ஒரு நட்சத்திரம்.எனக்கும் சாதனையாளர்கள் பற்றிப் பெருமையும் பரிதாபமும் உண்டு. ஆனால் கழிவிரக்கம் ஒரு ஆட்கொல்லி. ருத்ரையா உயிருடன் இருந்தபோது எவ்வளவு பேர் அவரைக் கவனித்து விட்டார்கள்? கமல்ஹாசன் - ரஜினி சேர்ந்து நடித்த படங்கள் என்று பல முறை பட்டியல்களும், மறுபரிசீலனைகளும் வந்திருக்கின்றன. பலருக்கு ‘அவள் அப்படித்தான்’ நினைவில் இருந்ததில்லை.

இன்று நாம் ருத்ரையாவின் படத்தைப் புகழ்ந்தாலும் அது மறக்கப்படுவதை தற்செயல் நிகழ்ச்சி என்று ஒதுக்கி விடுவதற்கில்லை. நீளக்கட்டுப்பாடு உள்ள காலத்தில் சுருக்கமான படத்தை ஏராளமான நட்சத்திரங்களை வைத்து எடுத்து, அனைவருக்கும் கவனம் கிடைத்த தமிழ்ப் படங்களில் ‘ஹரிதாஸ்’ ஒரு சாதனை. அந்த டைரக்டர் பெயர் எவ்வளவு பேருக்கு நினைவில் இருக்கிறது? அன்று விருதுகள், பரிசுகள் கிடையாது. மக்கள் பாராட்டு, நீண்ட நாள் ஓடுதல்... இவைதான் பரிசும் விருதும்.

எவ்வளவோ பணச்செலவில் தயாரிக்கப்பட்டு, நிறைய பத்திரிகை, தொலைக்காட்சி  கவனத்துடன் வெளியிடப்பட்டாலும், திரைப்படங்கள் மறக்கப்படுபவை. பெரிய நட்சத்திரங்களுக்கு நிறைய தோல்விப் படங்களும் உண்டு. ‘மாபெரும் நாடாகிய ரஷ்யாவின் ஆன்மாவைப் பிரதிபலித்தவர்கள்’ என்று டால்ஸ்டாயும் தாஸ்தாவெஸ்கியும் கொண்டாடப்படும் அளவுக்கு, ‘ஆன்மாவே இல்லாது எழுதப்பட்டவை’ என்று கூறக்கூடிய, சிறு சிறு நூல்கள் சிலவே எழுதிய ஆல்பெர் காம்யூவும் காஃப்காவும் நீண்ட காலம் கொண்டாடப்படுவார்கள்.

 சினிமாவில் அந்த அளவுக்குக் கொண்டாடக்கூடிய நபர் ஒரே ஒருவர். அவர், சார்லி சாப்ளின். சர்க்கஸை வைத்துத்தான் எவ்வளவு பெரிய படங்கள்! இந்தியாவில் ராஜ்கபூர் தொடங்கி ஹாலிவுட்டில் செசில் பி.டிமில்லி வரை பெரிய பெரிய படங்கள். ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு மிகக்குறைந்த தொழில்நுட்பத்துடன் மவுனப் படமாக எடுக்கப்பட்ட ‘சர்க்கஸ்’ என்ற சாப்ளினின் 72 நிமிடப் படம் இன்றும் கொடுக்கக்கூடிய மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அந்த மகாப் படங்கள் தர இயலவில்லை.

ருத்ரையா முதல் படத்தில் நிறைய நம்பிக்கை தந்தார். ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு சிறிது சிறிதாக மறக்கத் தொடங்கினார்கள். ருத்ரையாவின் நலம்விரும்பியான நான் அவர் பற்றிய எதிர்பார்ப்பு களைக் குறைத்துக் கொண்டேன். என் நண்பர் ஒருவரின் உறவினர் என் நண்பர் பற்றியே ஒரு கருத்துத் தெரிவித்தார். ‘‘நீ ஆறு மாதங்களுக்குள் ஒரு வேலையில் அமராவிட்டால் நீ என்றுமே வேலை செய்யும் திறமையிழந்தவனாகி விடுவாய்.’’ ஆங்கிலத்தில் இன்னும் சுருக்கமாகச் சொல்லலாம். If you are unemployed for six months, you will become unemployable forever.

சர்க்கஸை வைத்துத்தான் எவ்வளவு பெரிய படங்கள்! ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு மிகக்குறைந்த தொழில்நுட்பத்துடன் மவுனப் படமாக எடுக்கப்பட்ட சார்லி சாப்ளினின் 72 நிமிடப் படம் இன்றும் கொடுக்கக்கூடிய மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அந்த மகாப் படங்கள் தர இயலவில்லை.

படிக்க


இம்முறை இரு வரலாற்று நூல்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுப் பேராசிரியர் கே.கே.பிள்ளை எழுதிய ‘தென் இந்திய வரலாறு’. முதலில் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட ஆங்கில மூலத்தின் தமிழாக்கத்தை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள்.

கே.கே.பிள்ளை வரலாற்றுத் துறையில் உலகப் புகழ்பெற்ற ஆசான். (தென் இந்திய வரலாறு - முதல் பாகம்: ரூ.84/-, இரண்டாம் பாகம்: ரூ.115/-, வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், புதிய எண்.25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600014. பேச: 044-43408010)

இரண்டாவது, கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட ‘முகலாயர்கள்’. இதை எழுதியவர் முகில். இவர் நிறைய வாழ்க்கை வரலாறுகளும் எழுதியிருப்பவர். சுமார் ஐந்நூறு பக்கங்கள் கொண்ட ‘முகலாயர்கள்’ மிக சுவாரசியமான நூல். வரலாற்று நூல்களில் கால அட்டவணை, பெயர் - பொருள் அகராதி மிகவும் முக்கியம். முகில் மிகச் சிறப்பாக, விரிவாக கால வரிசை தந்திருக்கிறார்.

அத்துடன் இந்த நூலை எழுத உதவிய நூல்கள், இணைய தளக் குறிப்புகளும் தந்திருக்கிறார். தமிழ் வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். (முகலாயர்கள் - விலை: ரூ.350/-, வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 177/103, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-600014. பேச: 9445901234)

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்