‘‘உங்க பொண்ணு ஒரு ஸ்போர்ட்ஸ் மேனைத்தான் கட்டிப்பேன்னு அடம் பிடிக்கிறதா சொன்னீங்க. கஷ்டப்பட்டு ரெண்டு பேரைக் கண்டுபிடிச்சேன்...’’ என்று தரகர் சொன்னதும் முருகதாஸ் நிமிர்ந்தார்.‘‘ஒருத்தன் ஓட்டப் பந்தய வீரன்.
மாவட்ட அளவில் தடகளப் போட்டியில கலந்துக்கிட்டு ரெண்டாவதா வந்திருக்கான். அடுத்தவன் குத்துச்சண்டைக்காரன். நேஷனல் லெவல்ல போட்டி போட்டு தங்கப் பதக்கம் வாங்கியிருக்கான். சீக்கிரமே ஒலிம்பிக்குக்குப் போகவும் சான்ஸ் இருக்கு...’’
‘‘அப்புறம் என்ன? ஒலிம்பிக் சான்ஸ் உள்ளவரையே பேசி முடிங்க’’ என்று முருகதாஸ் சொன்னதும் உள்ளேயிருந்து மிரட்டுவது போல், ‘‘நோ..!’’ என்று ஒரு குரல்... மணப்பெண் சோனாதான்!
‘‘ஓடி ஜெயிக்கிறவன்தான் ரியல் ஸ்போர்ட்ஸ்மேன்! அடுத்தவன் முகத்தில குத்தோ குத்துன்னு குத்தி பல்லை உடைக்கிறவன் எல்லாம் பேட்டை ரௌடி போலத்தான்பா. வீட்டுலயும் அவன் அதே ரௌடித்தனத்தைக் காட்டினா நான் கண்ணைக் கசக்கிட்டு வந்து நிக்கணும்!’’
‘‘சோனா பேச்சுக்கு மறுப்பேது? ஓட்டக்காரனையே பேசி முடிக்கலாம்’’ என்று தடம் மாறினார் முருகதாஸ்.உள்ளே போன சோனா செல்லில் கிசுகிசுத்தாள்... ‘‘டேய், பிளான் பண்ணினபடி உன்னைக் கட்டிக்கிறதுக்காக ‘அடுத்த முகமது அலி’யையே பேட்டை ரௌடின்னுட்டேன்டா!’’‘‘நீ யாரு? வீட்டு ரௌடில்ல!’’ என்றான் காதலன்.
சுபமி