நடிகன் ராமநாதன் என்னுடன் பள்ளியில் படித்த ஒரு பல்கலை மன்னன். மறைந்து விட்டாலும் மறக்க முடியாத நண்பன். ரயில்வேயில் நிலைய நிர்வாகியான பிறகும் தொலைபேசி மூலமாவது தொடர்பு கொண்டு நட்பைத் தொடர்ந்தவன்.
அந்த நாட்களில், அடிக்கடி ராமநாதன் வீட்டுக்குச் சென்று, அவனிடம் அவன் தாய் வைத்திருந்த பிரியத்தைப் பார்த்து ஏங்குவேன். என் தாயோ, புகுந்த வீட்டுக் கொடுமை மோசமா அல்லது பிறந்த வீட்டு அலட்சியம் கடுமையா என்று புரியாத நாட்களில்; 8 வயது வரை அனா, ஆவன்னா தெரியாத; சரியாக நடமாடித் திரிய முடியாத, இடது கால் சற்றே முடமான, மங்கல் மூளை கொண்ட பிள்ளையிடம் என்ன பிரியத்தைக் கொட்டுவாள்?
ராமநாதன் வெகு அழகாகப் பாடுவான். அவன் தாயார் மங்களூரில் வளர்ந்தவராம். தந்தை குளத்து அய்யர்... ராமநாதனின் தாய்வழித் தாத்தா திருநெல்வேலியிலிருந்து வந்து ஹோட்டலில் சர்வராக வேலை செய்தாராம். இருவரும் காதலித்து ஓடி வந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்துகொண்டு, ‘நகரங்களில் இருந்தால் போலீஸ் தொந்தரவு வரலாம்’ என்று குக்கிராமமான பரமக்குடியில் செட்டில் ஆகி மறைந்து வாழ்ந்திருக்கிறார்கள்.
அவன் தாய் 1930ம் ஆண்டுக்கு முன்பே முதலாண்டு பி.ஏ படித்தவர் காதலில் வீழ்ந்திருக்கிறார். ராமநாதனுக்கு அவன் தாய், புரந்தரதாஸரின் ‘கிருஷ்ணா நீ பேகனே.... பாரோ!’ என்ற பாடலுக்கு ஆடும் நடனமும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவன் ஆடுவதையும் பாடுவதையும் கண்டு பொறாமையில் பலமுறை கண் கலங்கியவன் நான்.
மதுரை பால கான சபாவின் ‘கிருஷ்ணாவதாரம்’ நாடகத்தில் குட்டிக் கிருஷ்ணனாக நடித்து ராமநாதன் எல்லோரையும் அசத்தி விட்டான். அதே நாடகத்தில் கம்சனாக நடித்த நடிகவேள் எம்.ஆர்.ராதா, என் நண்பனைத் தூக்கிக்கொண்டு வந்து, மேடையில் ‘பொத்’தென்று போட்டதும் நான் பயந்துவிட்டேன்.
ராமநாதன் விழுந்த வேகத்தில் பந்து போல் தவ்வி எழுந்து கை தட்டலைப் பெற்றது இன்றும் நினைவில் நிற்கிறது. மறுநாள் ராமநாதன் அவர்கள் தங்கியிருந்த சின்னக்கடை ஆற்றோரம் இருந்த மஞ்சப்புத்தூர் செட்டியார் சத்திரத்தில், என்னை நடிகர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.
நடிகவேள் அவனிடம், ‘‘என்னடா கொளத்து அய்யர் மகனே? நீ வெளுத்து வாங்கறே! இந்த வக்கீலய்யங்கார் மகன் மக்கு மாதிரி முழிக்கிறானேடா..?’’ என்றது இன்றும் ஞாபகம் இருக்கிறது.
என் தந்தை ஒரு நாடகப்பிரியர். நடிகவேள் என் தந்தையின் சட்ட அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தபோது திருதிருவென்று முழித்த என்னை, நடிகவேளுக்கு வணக்கம் சொல்லச் சொல்லி என் தந்தையார் திட்டியதையும் நான் மறக்கவில்லை. ‘மாயா மாயவன்’ என்ற படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு பாக்கி நின்ற 300 ரூபாயையும் காசோலை மூலம் பெற்று, எங்கள் வீட்டுப் பக்கத்தில் உள்ள பரமக்குடி கூட்டுறவு வங்கியில் நடிகவேளுக்கு அப்பா மாற்றிக் கொடுத்ததும் நினைவில் நிற்கிறது.
சில சமயம் ராமநாதன் வீட்டிலேயே இரவில் நான் தங்கவேண்டி வரும். குளத்து அய்யர் கணேச பவன் ஹோட்டலில் சரக்கு மாஸ்டர். வேலை முடித்து வந்து, குளித்துவிட்டு வெளியே புறப்படும்போது என் நண்பனின் தாய், ‘‘சாரு நம்மாத்தில் சாப்பிடறான்.
நீங்களும் அவன்கூட சாப்பிடுங்கோ!’’ என்பார். குளத்துஅய்யர் வள்ளென்று விழுந்து விட்டு, மல்லிகை மணக்கும் ஒரு சென்ட்டை தன் உடலில் அடித்துக்கொண்டு, ஒரு வெள்ளைத் துண்டைப் போர்த்திக் கொண்டு, விடுவிடுவென்று ‘பவுண்டுத் தெரு’ என்ற மோசமான பெயர் கொண்ட தெருவை நோக்கி நடப்பார். நானும் ராமநாதனும் வாசலில் நின்று அவர் தெருக்கோடி போன பிறகு அழாக்குறையாக சாப்பிட உட்காருவோம்.
அந்த குளத்து அய்யர் பவுண்டுத் தெருவில் ஒரு சின்ன வீடு செட்டப் செய்து வைத்திருந்தது எனக்குப் பின்னால்தான் தெரிந்தது. இருந்தும் அவர் வேலை செய்த கணேச பவன் முதலாளியின் பிரதான வக்கீலின் மகன் என்ற காரணத்துக்காக அவர் என்னிடமும், நண்பன் ராமநாதனின் தந்தை என்பதற்காக நான் அவரிடமும் பல வருடங்கள் ஒரு கோபம் கலந்த அரைகுறை நட்புடன் தொடர்ந்து பழகினோம். இதன் காரணமாகவோ என்னவோ, வெகு நாட்கள் வரை எனக்கு வாசனைத் திரவியங் களைக் கண்டாலே பிடிக்காமல் இருந்தது. ‘குளத்து அய்யர் சென்ட்’ என்று வாசனைப் பொருள் பயன்படுத்திய பலரைக் கேலி செய்திருக்கிறேன்.
ராமநாதனும் அவன் குடும்பத்தாரும், என் கல்லூரி நாட்களிலேயே பரமக்குடியை விட்டு திருநெல்வேலி பக்கம் போய்விட்டார்கள். ரயில்வேயில் சேர்ந்த பிறகும் என்னைச் சந்திக்க பல முறை பரமக்குடி வருவான்.
நான் ஓரளவு பெயர் பெற்ற பிறகு ஒருமுறை, தென்னிந்திய பிராந்திய ஜெனரல் மேனேஜர் கங்கூலி என்பவரை அழைத்து வந்து, ஒரு ரயில்வே சிவில் வழக்கை என்னிடம் கொடுத்து நடத்தச் சொன்னான். நான் கிரிமினல் வழக்குகளில் அதிகம் ஈடுபாடு கொண்டு இருந்ததால், வேறு ஒரு வக்கீலிடம் ஏற்பாடு செய்துவிட்டு ‘இன்னும் என்னை அவன் தயவில் வாழச் சொல்கிறான்..!’ என்ற ஒரு ஆத்திரம் கூட எனக்குள் தோன்றியது.
பிறகு நாங்கள் தனியாக இருந்தபோது அவனிடம் ஒரு மணம் கமழ்ந்ததை மனதில் கொண்டு, ‘‘என்ன... நீயும் சின்ன வீடு ஒன்று ஆரம்பித்திருக்கிறாயா?’’ என்றேன்.
‘‘ஏன் இப்படி உனக்கு ஒரு சந்தேகம்?’’ என அவன் கேட்டதும், ‘‘தேவடியா சென்ட்டு மணக்குதேடா!’’ என்று தெரிந்தே அவன் மனதைப் புண்படுத்தினேன். அவன் முகம் கறுத்து விட்டது. சிரமப்பட்டு பேச்சை மாற்றினேன். ‘ஸ்டேஷன் மாஸ்டர் ராமநாதன் மறைந்துவிட்டார்’ என்ற செய்தி வந்தது ஞாபகம் இருக்கிறது.
அது என் பெயர் திரையுலகத்தில் தேசிய விருது மூலம் ஓரளவு பிரபலமான பிறகுதான் என்று நினைக்கிறேன். பின்னால், தியாகராய நகர் மனமகிழ் மன்றத்தில் ஒரு இளைஞர் தன்னை ஸ்டேஷன் மாஸ்டர் ராமநாதன் மகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அவரிடம் என் நண்பன் ராமநாதன் என்னைவிட எல்லாக் கலைகளிலும் சிறந்தவன் என்று ஒப்புக் கொண்டதாக ஞாபகம். தன்னைவிட சிறந்தவர்களைக் கண்டு இளம் வயதில் பொறாமைப்பட்டுவிட்டு, முதுமைப் பருவத்தில் உண்மையை ஒப்புக்கொள்ளும் பலரில் நானும் ஒருவன்.
பள்ளிக் காலத்தில் ஒருமுறை... பின்விளைவுகள் பற்றிச் சிந்திக்காமல் நானும் ராமநாதனும் ஆளுக்கொரு கற்குவியலுக்கரு கில் சற்று தூரத்திலிருந்து, ஒருவரை நோக்கி ஒருவர் கல்லெறிந்து விளையாடிக் கொண்டிருந்தோம். நான் எறிந்த கல் அவன் தலையில் பட்டு ரத்தம் வழிய மயங்கி விழுந்து விட்டான். மருந்தகத்தில் பயத்துடன் தள்ளி நின்றேன். விழித்தெழுந்த அவன் என் பக்கம் பார்த்து ‘‘எதையும் சொல்லாதே!’’ என்று பொருள்பட என்னைப் பார்த்து தலையை ஆட்டிவிட்டு,
‘‘அடிக்காதீங்க சார்! நான் வேணும்னு விழலே! கால் தடுக்கி விட்டிருச்சு’’ என்று அங்கேயும் அவன் நடிப்புத் திறனைக் காட்டினான். மறுநாள் நான் அவனிடம் காரணம் கேட்டதில், ‘‘நான் எறிஞ்ச கல், உன் தலையில் பட்டு உனக்கு ரத்தம் வந்தால் என்னைக் காட்டிக் கொடுப்பாயா? அதே போல்தான்’’ என்றான். அன்று நான் அவனைப் போல் சிந்தித்திருக்க மாட்டேன்.
இன்று சிந்தித்துப் பார்க்கிறேன். அவன் நட்பின் ஆழத்தையும் சரி... மயக்கம் தெளிந்தவுடன் அவன் காட்டிய நடிப்புத் திறனையும் சரி... என்னால் என்றும் எட்டிக் கூட தொட முடியாது. நடிகவேள் எம்.ஆர்.ராதா அவனிடம், ‘‘என்னடா கொளத்து அய்யர் மகனே? நீ வெளுத்து வாங்கறே! இந்த வக்கீலய்யங்கார் மகன் மக்கு மாதிரி முழிக்கிறானேடா..?’’ என்றது இன்றும் ஞாபகம் இருக்கிறது.
(நீளும்...)
சாருஹாசன்