கோபம்



வங்கிக்குள் நுழைந்த தினேஷ், போட்டோவில் உள்ள முகத்தைத் தேடினான். அதோ அந்த கேஷ் கவுன்டருக்கு அருகில் உள்ள சீட்டில் இருக்கும் பெண் கிளார்க்தான். அவளையே நோட்டம் விட்டான்.

‘‘மேடம்! இந்த நகைக்கடனுக்கு வட்டி கட்டணும். எவ்ளோன்னு பார்த்துச் சொல்லுங்களேன்!’’ - ஒரு பெரிய வர் பணிவாகக் கேட்க, ‘‘இப்பத்தானே வந்தீங்க, தொரைக்கு அதுக்குள்ளே அவசரமா? அப்படி இருங்க, கூப்பிடுறேன்!’’ - வெட்டெனப் பேசினாள் அந்தப் பெண். அடுத்து ஒரு ஆள் வந்தார்.

‘‘ஏம்மா! லோனுக்கு பணம் கட்டணும். இந்த சலானை நிரப்பித் தர முடியுமா?’’‘‘அதுக்கா உக்கார்ந்திருக்கோம்? பக்கத்துல யாரையாச்சும் ஃபில் பண்ணித் தரச் சொல்லுங்க!’’ என எரிந்து விழுந்தாள். ‘ச்சே! இவ என்ன பொம்பள? இவளை நான் கல்யாணம் பண்ணிக்கவே வேண்டாம்’ என முடிவெடுத்துக் கிளம்பினான் தினேஷ். அவன் போனதும் அவள் தன் செல்போனில் ஒரு நம்பரைத் தட்டினாள்.

‘‘ஹலோ, உமா! உன்னைப் பொண்ணு பார்க்க வந்த வன் என்ன சொன்னான்?’’ - மறுமுனை கேட்டது.‘‘குமார், நம்ம திட்டப்படி நான் கோவக்காரியா நடிச்சேன். ஓடியே போயிட்டான். சீக்கிரம் நம்ம கல்யாணத்துக்காக வீட்ல வந்து பேசு!’’ எனச் சொல்லி வைத்தாள் அவள்.                        

கு.அருணாசலம்