பேசும் சித்திரங்கள்



தமிழ் ஸ்டுடியோ 35 அருண்

மொட்டுக்களின் தனிமை... ‘‘ஒரு சினிமாவிற்கான உள் தூண்டலை புத்தகங்கள், நாவல்களிலிருந்தோ, அல்லது வாழ்க்கையிலிருந்தோ எடுத்துக் கொள்ளலாம். ஈரானியர்கள் மீன்கள் நிறைந்த ஓடைக்குப் பக்கத்தில்தான் வசித்துக் கொண்டிருப்பார்கள்; ஆனால் டப்பாவில் அடைக்கப்பட்ட மீன்களைத்தான் சாப்பிடுவார்கள்.

இதுபோல இயக்குனர்களாகிய இவர்கள் புத்தகங்களிலிருக்கும் கதைகளைத்தான் தேடுவார்கள். நான் நம்புவது, நம்மைச் சுற்றிலும் வசித்துக்கொண்டிருக்கும் மக்களை. உண்மையில் நாமும் அவர்கள் போலத்தான். அவர்கள் வாழ்வு முழுவதிலும் கதைகள் இருக்கின்றன. ‘நம் வாழ்க்கையே படம்தான்’ என்று மக்கள் சொல்வது மிகச் சரியே. எனக்கு யதார்த்தத்தை ஊடுருவும் கற்பனைதான் சினிமா...’’

- ஈரானிய இயக்குனர் அப்பாஸ் கியோரஸ்டமிபடைப்பாளிகள் எப்போதும் பிறருடன் உரையாட விரும்புகிறார்கள். அந்த உரையாடலின் வடிவம் அவ்வப்போது மாறிக்கொண்டே வருகிறது. ஓவியங்கள் மூலம், எழுத்து மூலம், இசை மூலம், நடிப்பின் மூலம் அவர்கள் தொடர்ந்து மற்றவர்களுடன் உரையாடிக்கொண்டே இருக்கிறார்கள். இத்தகைய உரையாடலை இன்னொரு விதத்தில் முன்னெடுத்ததுதான் சினிமா.

இதில் கதைகள் மூலம், காட்சிகள் மூலம், வெவ்வேறு பரிமாணங்கள் கொண்ட நுட்பக் கலைகளின் மூலம், அவர்கள் மக்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வப்போது காட்சிகளின் தீவிரத்தை உண்மைக்கு மிக அருகில் கொண்டு வருவதன் வாயிலாக, பார்வையாளர்களோடு இன்னும் நெருக்கமாக அவர்களால் உரையாட முடிகிறது. அந்த உரையாடல் பல்வேறு மாற்றங்களை சாத்தியப்படுத்துகிறது.

புத்தகங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் கதைகளைத் தேடாமல், நம் எதிரில் இருக்கும் சக மனிதனின் இன்னொரு பக்கத்தைப் பார்க்கும்போது, அல்லது அவனோடு சற்று நேரம் உரையாடும்போது நமக்குக் கிடைக்கும் கதைகளும், சம்பவங்களும் உண்மைக்கு இன்னும் நெருக்கமாக இருக்கும். அத்தகைய நெருக்கத்தைக் காட்சிகள் மூலம் நமக்கு உணர்த்துகிறது ‘ஒற்றைப்பூ’ குறும்படம்.

மலைக் கிராமம் ஒன்றில் சிறிய வீட்டில் வசிக்கிறார்கள் சிட்டுவும் அவளது பாட்டியும். சிட்டுவின் ஒருநாள் வாழ்க்கையையும் அவளோடு தொடர்புடைய இன்னும் சிலரையும் மையப்படுத்தி இந்தக் கதை நகர்கிறது. சிட்டுவின் பாட்டி மூச்சுத் திணறலால் அவதிப்படுகிறார். அவர் பயன்படுத்தும் மருந்து தீர்ந்துவிட்டதால், சந்தைக்குச் சென்று மருந்தை வாங்கிவரச் சொல்லிப் பக்கத்து வீட்டு நபர் ஒருவரிடம் பணிக்கிறார் பாட்டி.

அன்று சிட்டு படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு மேஜிக் சொல்லித் தர பெரியவர் ஒருவர் வேலூரில் இருந்து வருகிறார். மாலை நேரமாகிவிட்ட காரணத்தால் அவரால் திரும்பிச் செல்ல இயலவில்லை. பள்ளி முடிந்து வரும் வழியில் அவரைச் சந்திக்கும் சிட்டு, ‘‘எங்களுடைய வீட்டிற்கு வந்து தங்கிக்கொள்ளுங்கள். காலையில் பேருந்து வரும், அதில் உங்கள் ஊருக்குச் செல்லலாம்’’ என்று சொல்கிறாள். அந்த மேஜிக் கலைஞரும் ஒப்புக்கொண்டு சிட்டுவின் வீட்டிற்கு வருகிறார்.

இதற்கிடையில் மருந்து வாங்கி வரச் சென்ற நபர், குடித்து விட்டு போதையில் தெருவில் விழுந்து கிடக்கிறார். அதனைப் பார்த்து கோபமடையும் சிட்டுவை மேஜிக் செய்யும் நபர் சமாதானப்படுத்துகிறார். மறுநாள் காலையில் பாட்டிக்கு மூச்சுத் திணறல் அதிகமாகிறது. ‘‘மேஜிக் தாத்தா! எப்படியாவது மேஜிக் செய்து, பாட்டிக்குத் தேவையான மருந்தை வர வைக்க முடியுமா’’ என்று கேட்கிறாள் சிட்டு. ‘மேஜிக் என்பது, ஒருவகையான கண்கட்டி வித்தைதான்’ என்பதை அவளுக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது என்று தெரியாமல் விழிக்கிறார் அவர்.

அப்படிச் சொல்லி புரியவைக்கும் நேரமும் இதுவல்ல என்பதை உணர்ந்த அவர், ‘‘சரி’’ என்று சொல்லிவிட்டு, மேஜிக் செய்வது போல் நடித்து, பாட்டிக்குத் தேவையான மருந்தை வரவழைத்துக் கொடுக்கிறார்.

 சிட்டு சந்தோஷத்தில் திளைக்கிறாள். சிறிது நேரம் கழித்து, மேஜிக் செய்யும் நபருக்கு மூச்சுத் திணறல் வருகிறது. பாட்டியிடம் கொடுத்த மருந்தை வாங்கிக்கொள்கிறார். மேஜிக் மூலம் கொடுத்தது அவருடைய மருந்துதான் என்பதை பாட்டி உணர்ந்து கொள்கிறார். ‘‘நீயே வச்சிக்கோ’’ என்று பாட்டி சொல்லியும் கேட்காமல், ‘‘மலைக் காட்டில் இருக்கீங்க, நீங்களே வச்சிக்குங்க’’ என்று சொல்லிவிட்டு மேஜிக் செய்யும் நபர் தன்னுடைய ஊரை நோக்கிச் செல்கிறார்.

மிகச் சாதாரணமான கதைதான். ஆனால் எவ்வித ஜோடனையும் இல்லாமல், உண்மையான மலைக் கிராமத்து மனிதர்களை வைத்துக்கொண்டு படமாக்கி இருக்கிறார்கள். ஒரு சிறுமியின் ஒருநாள் வாழ்க்கை எப்படி இருக்கிறது, தனிமை எப்படியெல்லாம் அவளை அலைக்கழிக்கிறது என்பதைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு முகட்டில், தனித்த ஒரு வீடு காட்டப்படுகிறது. அதில்தான் பாட்டியும், பேத்தியும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறுமியின் தனிமையை படம் முழுக்க பல காட்சிகளில் விவரிக்கிறார்கள். சிகரெட் லைட்டரை அவள் சேகரிப்பதும், செடிகளுக்கு நீர் ஊற்றி அவற்றோடு உரையாட முயல்வதும், அவளின் தனிமையைப் பார்வையாளர்களுக்கு உணர்த்தும் விதமாகவே இருக்கிறது.

மலைக் கிராமத்தின் யதார்த்தத்தை ஒரே ஒரு காட்சியில் மிகச் சிறப்பாகப் பதிவு செய்திருப்பார் இயக்குனர். பேருந்தை தவற விட்ட மேஜிக் செய்யும் நபரை தன்னோடு அழைத்து வரும் பேத்தியிடம், ‘‘இவன் யார்?’’ என்பார் பாட்டி. பேத்தி நடந்தவற்றைச் சொல்லி முடித்ததும், ‘‘நம்மளே அரைகுறையா கெடக்கோம், இதுல விருந்தாளி வேறயா?’’ என்று கேட்பார்.

அந்த மேஜிக் கலைஞர் தலைகுனிந்தபடி, ‘‘சரிங்க! அப்படின்னா நான் கிளம்புறேன்’’ என்று சொன்னதும், ‘‘அதான் வந்துட்ட இல்ல, சாப்பிட்டு தூங்கிட்டு காலையிலே எழுந்து போ’’ என்று அதட்டுவார் பாட்டி. இதுதான் எளிய மக்களின் யதார்த்தமான வாழ்க்கை. அங்கே இலக்கிய அதீதங்களுக்கு எல்லாம் இடமில்லை. ஆனாலும் மனிதம் செழித்து வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அப்பாஸ் கியோரஸ்டமியின் ‘Life, and Nothing More’ திரைப்படத்தில் ஒரு குழந்தை முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. இதில் சிறுவனின் தந்தை முன் ஈடுபட்ட வேலையின் இழப்பிற்காக கடுமையாக   வேலை செய்து கொண்டிருக்கிறார்.   சிறுவன் தன்னுடைய தந்தையின், துயர் களைய இரக்கம் கொண்டும், அக்கறை கொண்டும் அவருடைய வேலைகளில் பங்கெடுத்துக் கொள்கிறான்.

இருந்தாலும் அவன் இன்னும் வெட்டுக்கிளி களைப் பிடித்துக் கொண்டு திரிவதை நிறுத்திவிடவில்லை. அதாவது அவனது பால்யத்தை ஒருபோதும் தொலைத்துவிட எத்தனிப்பதில்லை. ‘ஒற்றைப்பூ’ படத்தில் வரும் சிறுமியும், பெற்றோர் இல்லாமல், பாட்டியின் நோய்மையினூடே பயணித்துக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் அவள் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், அந்த பருவத்துக்கே உரிய குதூகலத்துடன்தான் கழிக்கிறாள்.

படம்: ஒற்றைப்பூ
இயக்கம்: பாஸ்கர் சக்தி
நேரம்: 18.52 நிமிடங்கள்
ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்
இசை: ஜூன் ஜியூரட்
படத்தொகுப்பு: கிஷோர் டி.இ

‘‘நம்மளே அரைகுறையா கெடக்கோம், இதுல விருந்தாளி வேறயா?’’ என்று பாட்டி கேட்க, அந்த மேஜிக் கலைஞர்
தலைகுனிந்தபடி, ‘‘அப்படின்னா நான் கிளம்புறேன்’’ என்பார்.

‘‘ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒரு அழகிய புகைப்படத்தைக் காண்பித்தார். நீண்ட மலைப்பிரதேசத்தின் சரிவில் ஒரு தனியான வீடு மட்டும் காட்சியளித்தது. அந்தப் புகைப்படத்திலிருந்து தான் ‘ஒற்றைப்பூ’ குறும்படத்திற்கான கதைக்களம் உருவானது. ஒரு கதைக்கான தூண்டல் எங்கிருந்து வேண்டுமானாலும் ஜனிக்கலாம். அம்மாதிரியான இழைகளை வைத்துக்கொண்டு நெய்யப்பட்ட குறும்படம்தான் ‘ஒற்றைப்பூ’.

நான் சின்னத்திரைக்கு வசனம் எழுதுகிறவன். அதனால் குறும்படத்திலும் அதிகப்படியான வசனங்களைப் பயன்படுத்துவேன் என்று நண்பர்கள் கணித்துவிட்டனர். அதை உடைக்க விரும்பினேன். இதில் இயற்கையான ஒளியையே அதிகம் பயன்படுத்திக் கொண்டோம். மேலும் பின்னணியில் கூட பறவைகளின் ஒலிதான் அதிகமாக ஒலிக்கும்.

 பின்னணி இசை, கதை நகரத் துவங்கிய பின்புதான் உருவாகும்’’ என்று விவரிக்கும் ‘ஒற்றைப்பூ’ குறும்படத்தின் இயக்குனர் பாஸ்கர் சக்தி, ‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘நான் மகன் அல்ல’ போன்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர். இவரது சிறுகதையான ‘அழகர்சாமியின் குதிரை’, பின்னர் திரைப்படமாக்கப்பட்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தமிழுக்குப் பெற்றுக் கொடுத்தது.

(சித்திரங்கள் பேசும்...)
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி