‘‘சூப்பர்...’’ என்று கத்தினாள் நிஜ தேவதை.‘‘எதுக்கு ஓநாய் உருவத்தை எடுத்திருக்கேன்னு கேட்டியே மகேஷ்... இதோ, இதுக்குத்தான்...’’ சொன்னவள் முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட ஆடாக மாறியிருந்த டார்க் லார்ட் மீது பாய்ந்தாள்.
‘‘தெரியும் நீ இப்படித்தான் செய்வேன்னு... அதனாலதான் மந்திரவாதி தாத்தா என்னையும் ஓநாயா மாற்றியிருக்கார். வாடி வா...’’கர்ஜித்த தேவதையின் தங்கை, டார்க் லார்ட் பக்கம் திரும்பினாள்.
‘‘கவலைப்படாத வாத்தியாரே... உனக்கு துணையா நான் இருக்கேன்...’’
‘‘அப்படியா விஷயம்... பார்த்துடலாம்... நீங்களா நானான்னு...’’
பற்களை கடித்த ரியல் ஏஞ்சல் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்தாள்.
டார்க் லார்டும், டூப் ஏஞ்சலும் ஒன்று சேர்ந்து அவளை எதிர்த்தார்கள்.
மகேஷ் செய்வதறியாமல் திகைத்து நின்றான். என்ன நடக்கிறது என்றே அவனுக்கு புரியவில்லை. டபிள்யூ டபிள்யூ எஃப் சேனல் எல்லாம் பிச்சை எடுக்க வேண்டும். அந்தளவுக்கு மூவரும் கட்டிப் புரண்டார்கள். ஒருவரையொருவர் கடித்துக் கொண்டார்கள்.
விலகி விலகி பாய்ந்தார்கள். ஒரு ஓநாயை இன்னொரு ஓநாயும், முழங்கை அளவுக்கு கொம்புகளை கொண்ட ஆடும் சேர்ந்தும் விலகியும் வழி விட்டும் எதிர்த்தன. குதறின. இந்த உக்கிரமான சண்டை இப்போதைக்கு ஓயாது என்று தெளிவாகப் புரிந்தது. சமபலம். எனவே வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தன. தராசு முள் எந்தப் பக்கமும் சாயவேயில்லை. சண்டைக்கு அந்தப் பக்கம் அருவி கொட்டிக் கொண்டிருந்தது.
அதே அருவிதான். அலாவுதீனுக்கு சாப விமோசனம் கொடுக்க வேண்டுமென்றால் அந்த அருவி நீரை சொம்பில் எடுக்க வேண்டும். எடுத்ததுமே செவியில் குரல் ஒலிக்கும். உடனே அந்தத் தண்ணீரை குரல் வந்த திசையில் தெளிக்க வேண்டும்.முடியுமா?
வாய்ப்பில்லை என்றுதான் மகேஷுக்கு தோன்றியது. சண்டைக்கு இடையிலும் தேவதையின் தங்கையும், டார்க் லார்டும் அருவிப் பக்கம் அவன் செல்கிறானா என கண்காணித்துக் கொண்டே இருந்தார்கள். தவிர, ஹாரி பார்ட்டரின் உயிர் வேறு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அருவி நீரை, தான் தொட்டதுமே இவன் சாம்பலாகி விடுவான் என தாத்தா சாபமிட்டிருக்கிறார்.
சாபம்...‘ஐயோ’ என கத்த வேண்டும் போல் இருந்தது. நிழல் மாதிரி இதென்ன எங்கு சென்றாலும் யாராவது எனக்கு சாப விமோசனம் தாயேன் என கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்..?‘‘மகேஷ்... ஏய் மகேஷ்...’’ காதருகில் ஸ்பைடர் மேன் கிசுகிசுத்தான்.
‘‘ம்...’’
‘‘எதுக்கு இப்படி அப்பப்ப டிப்ரஸ் ஆகற..?’’
‘‘வேறென்ன செய்ய சொல்ற...’’
‘‘அதான் உனக்கு உதவியா நாங்க இருக்கோம்னு சொன்னோமே... அப்புறம் என்ன?’’
‘‘அட போ ஸ்பைடர் மேன்... நீ வேற... ஒரே வெறுப்பா இருக்கு. இந்த ஓநாய் - ஆடு சண்டை எப்ப, எப்படி முடியும்னு தெரியாது. அப்படியே ரிசல்ட் நமக்கு சாதகமா கிடைச்சாலும் அருவித் தண்ணிய எப்படி எடுக்க முடியும்..?’’
‘‘ஏன் முடியாது?’’
‘‘என்ன இப்படி கேட்டுட்ட? ஹாரி பார்ட்டர் சாம்பலாக மாட்டானா?’’
‘‘அந்தக் கிழவனோட சாபத்தை சொல்றியா?’’
‘‘ஆமா...’’ஸ்பைடர் மேன் கடகடவென்று சிரித்தான்.
‘‘ஏன் சிரிக்கற?’’‘‘பின்ன என்ன மகேஷ்... அல்ப விஷயத்துக்கெல்லாம் இப்படி டென்ஷன் ஆகற... இங்க பாரு, ஒரு மனுஷன் எப்ப சூப்பர் மேனா மாறுகிறான் தெரியுமா? அவனோட டிஎன்ஏல மாற்றம் ஏற்படறப்ப...’’‘‘இதைப் பத்தி நானும் சயின்ஸ்ல படிச்சிருக்கேன்...’’
‘‘பிறகென்ன... நீ, நான், ஹாரி பார்ட்டர்... மூணு பேரோட ஜீனும் சராசரி மனுஷங்களோடது கிடையாது. அதனால தான் யாராலயும் செய்ய முடியாததை எல்லாம் நாம செய்யறோம். இப்ப என்னையே எடுத்துக்க... ஸ்பைடரோட டிஎன்ஏ எனக்குள்ள இருக்கு. அதுதான் இப்ப நம்மை காப்பாற்றவும் போகுது...’’‘‘எப்படி?’’
‘‘சிம்பிள். இதுவரை ஸ்பைடரோட ஜீன் பத்தி முழுமையான ஆராய்ச்சி நடக்கலை. எல்லாம் நல்லபடியா முடிஞ்சு நீ வீடு போய் சேர்ந்ததும் கூகுள்ல தேடிப் பாரு. நான் சொல்றது புரியும்...’’
‘‘அதுக்கும் இப்ப நடக்கறதுக்கும்..?’’‘‘தொடர்பிருக்கு. என்னோட ஒரு எச்சில் சகலத்தையும் மாற்றும். பார்க்கறியா?’’சொன்ன ஸ்பைடர் மேன் வழக்கம் போல் தன் வலக்கையை மடக்கி மணிக்கட்டிலிருந்து சிலந்தியை வெளியேற்றவில்லை. அவ்வளவு ஏன் மகேஷி டம் சொன்னது போல் தன் உமிழ் நீரையும் துப்பவில்லை.
பதிலாக தன் இடது காலை உயர்த்தினான். கட்டை விரல் நகத்துக்குள்ளிருந்து சரேலென்று பாய்ந்த சிலந்தி -ம்ஹும்... ஓநாயாக இருந்த நிஜ தேவதையையோ, அவள் தங்கையையோ, டார்க் லார்டையோ மூடவில்லை.சற்றுத் தள்ளி கவலையுடன் நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஹாரி பார்ட்டரையும் தொடவில்லை. பதிலாக அருவிக்குள் பாய்ந்தது. அவ்வளவுதான். கொஞ்சம் கொஞ்சமாக, மைக்ரோ விநாடி மைக்ரோ விநாடியாக, அருவி நீர் வற்ற ஆரம்பித்தது.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு...ஐந்தாவது நொடிக்குள் அருவி இருந்த சுவடே தெரியாமல் மறைந்துவிட்டது.‘‘மை காட்...’’ தன்னையும் அறியாமல் மகேஷ் கத்தினான்.அவன் பார்வை அருவி இருந்த இடத்திலேயே நிலைத்திருந்தது.அவன் மட்டுமல்ல, சண்டை போட்டுக் கொண்டிருந்த நிஜ தேவதையும், அவள் தங்கையும், டார்க் லார்டும் கூட தங்கள் ஃபைட்டை நிறுத்திவிட்டார்கள். அத்துடன் தங்கள் சுய உருவத்தையும் அடைந்து, வற்றிய அருவியையே கண்கொட்டாமல் பார்த்தார்கள்.
சாம்பலாகி விடுவோமோ என்று பயந்த ஹாரி பார்ட்டரும், அருவி நீரை வற்ற வைத்த ஸ்பைடர் மேனும் கூட இமைக்க மறந்து அப்படியே சிலையாக நின்றார்கள்.‘எதை நாம் பார்க்கிறோமோ அது அங்கு இருப்பதில்லை.
பதிலாக ஒன்றை மறைக்கவே இன்னொன்று அங்கிருக்கிறது. ஒரு செயல் நடைபெறும்போது அனிச்சையாக கண்களுக்குத் தெரியாத மற்றொரு செயல் நடந்து முடிந்து விடுகிறது. நிகழ்விலிருந்து உண்மையைக் கண்டறிய எப்போது முற்படுகிறோமோ, அப்போதுதான் சமூக மாற்றம் சாத்தியம்...’ என்ற நிதர்சனத்தை அங்கிருந்த அனைவருமே உணர்ந்தார்கள். காரணம் -அருவி இருந்த இடத்தில் கூண்டு இருந்தது.
அந்த கூண்டுக்குள், யாரை சிறை மீட்க இவ்வளவு சாகசங்களையும் மகேஷ் செய்தானோ -அந்த ராஜகுமாரி இருந்தாள்!‘‘எதற்கு இப்படி வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாய்..?’’
முணுமுணுத்த யவன ராணியின் கன்னங்கள் சிவந்தன. இதற்கு முன் அவளை இளமாறன் இப்படி விழி அகற்றாமல் ஆராய்ந்ததில்லை. ‘‘நன்றி ராணி...’’ ‘‘எதற்கு?’’‘‘என் கூற்றை மதித்து இப்படி உங்கள் பாணியில் ஆடை அணிந்ததற்கு...’’‘‘சரியாக இருக்கிறதா?’’
‘‘பொருத்தமாக இருக்கிறது...’’ மென் நகை பூக்க மலர்ந்தான். ‘‘உனக்கும் இந்த போர்க் கவசம் நன்றாக இருக்கிறது...’’ அடிக்குரலில் சொன்னவள் சட்டென்று தலையை உயர்த்தினாள். இயல்புக்கு வந்தவள், ‘‘எதன் பொருட்டு இப்படி ஆடை அணியச் சொன்னாய்?’’ என்று புருவத்தை உயர்த்தினாள்.‘‘நாம் செல்லவிருக்கும் இடம் அப்படிப்பட்டது...’’‘‘அது எந்த இடம்?’’‘‘மந்திராலோசனை மண்டபம்...’’ கம்பீரமும் நெகிழ்ச்சியும் கலந்த குரலில் சொன்னவனை புதிராகப் பார்த்தாள்.
‘‘அப்படியென்றால்?’’‘‘முக்கியமான பிரச்னைகள் குறித்து சக அமைச்சர்களுடனும், புலவர்களுடனும், தளபதிகளுடனும் மன்னர் ஆலோசிக்கும் இடம்...’’‘‘எங்கள் நாட்டிலும் அப்படிப்பட்ட மண்டபங்கள் உண்டு...’’‘‘தெரியும் ராணி... வணிகர்கள் வழியாக அறிந்திருக்கிறேன். ஆனால், உங்கள் நாட்டுக்கும் எங்கள் நாட்டுக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு...’’ ‘‘எந்த வகையில்?’’‘‘மக்கள் நலனை கருத்தில் கொள்ளும் வகையில். ஆம் ராணி, மன்னராகவே இருந்தாலும் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே, தான் எடுத்த முடிவை நடைமுறைப்படுத்துவார். அதற்கான இடம்தான் இந்த மந்திராலோசனை மண்டபம். அதை நீங்களே இப்போது கண்கூடாக பார்க்கப் போகி றீர்கள்...’’
‘‘இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட வேண்டுமா? இப்படி உன்னை இதற்கு முன் பார்த்ததில்லை...’’‘‘உண்மைதான் ராணி. வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கிறோம் அல்லவா?’’ ‘‘நடைபெறவிருக்கும் போரைக் குறிப்பிடுகிறாயா?’’‘‘அதற்காகத்தான் இன்று மந்திராலோசனையே கூடுகிறது.
ஆனால், இதை மட்டுமே சரித்திரத்தின் முக்கியமான புள்ளி என்று நான் சொல்லவில்லை...’’‘‘வேறு எதைக் குறிக்கிறாய்?’’‘‘பாண்டிய மன்னராக இப்போது சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் நடத்தும் முதல் மந்திராலோசனை இது. உங்களுக்கு எப்படி இதைப் புரிய வைப்பதென்று தெரியவில்லை. அவரை இளவரசராக பார்த்திருக்கிறேன். நீங்களும்தான்...’’‘‘நினைவில் இருக்கிறது. புகாரில் உன்னை அவர் காப்பாற்றும்போது தொலைவில் இருந்து கண்டிருக்கிறேன்...’’
‘‘அவரேதான். பாலகர். திறமையானவர். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். அப்படிப்பட்டவர் தன் தந்தையான சித்திரமாடத்து துஞ்சிய நன்மாறர் காலமானதும் மன்னராகியிருக்கிறார். தமிழக வரலாற்றிலேயே இப்படி பால் மணம் மாறாத ஒருவர் மன்னராகியிருப்பது இதுதான் நான் அறிந்தவரை முதல் முறை. அவரது பதவியேற்பின்போது நாம் புகாரில் இருந்ததால் அதை தரிசிக்கும் பாக்கியம் கிட்டவில்லை. தவிர, அந்த வைபவமும் ஆடம்பரமாக நடைபெறவில்லை.
மதுரைக்கு நாம் வந்த பிறகு இப்போதுதான் அவரை சந்திக்கப் போகிறோம். இவை எல்லாம்தான் உணர்ச்சிவசப்பட வைக்கிறது...’’ என்று நெகிழ்ந்தவன் கணத்தில் சுதாரித்தான். ‘‘நாழிகையாகிவிட்டது. அநேகமாக மந்திராலோசனை தொடங்கியிருக்கும்...’’‘‘நீ இல்லாமலா?’’‘‘அந்தளவுக்கு நான் அங்கிருப்பவர்களை விட எந்தவகையிலும் உயர்ந்தவனல்ல. சற்று முன் பின் ஆகும் என முன்பே தெரியப்படுத்திவிட்டேன். வாருங்கள்...’’ராணியை அழைத்துக் கொண்டு வேகமாக நடந்தான்.
மந்திராலோசனை மண்டபத்தின் வாயிலில் காவலுக்கு நின்றிருந்த வீரர்கள் இளமாறனைக் கண்டதும் தலை வணங்கி கதவைத் திறந்தார்கள்.‘‘வலது காலை எடுத்து வையுங்கள்...’’ என்று ராணியிடம் சொன்னவன், தானும் அப்படியே நுழைந்தான்.அங்கே அவர்கள் கண்ட காட்சி -இளமாறனின் உடலிலிருந்த ஒவ்வொரு அணுவும் சிலிர்த்தது.மன்னர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கவில்லை. பதிலாக எழுந்து நின்றிருந்தார். அது மட்டுமா? தன் கையை உயர்த்தியபடி ஆவேசத்துடன் அவர் நிகழ்த்திய உரையும் அவர்களது செவியை நிரப்பியது. அதை உள்வாங்கியபடியே ஓரமாக நின்றார்கள்.
‘‘எனவே...’’ என்று நிறுத்திய மன்னர் தன் தொடையைத் தட்டினார். பிறகு -‘‘நகுதக் கனரே, நாடு மீக் கூறுநர்;
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,
படைஅமை மறவரும், உடையம் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே...’’என்று முழங்கினார்.அடுத்த கணம் ‘‘வெற்றிவேல்... வீரவேல்...’’ என இளமாறன் உட்பட அங்கிருந்தவர்கள் முழங்கினார்கள்.ராணிக்கு எதுவும் புரியவில்லை. அமைதியாக நின்றாள். அவள் பக்கம் ஆவேசத்துடன் திரும்பிய இளமாறனின் முகம் சிவந்திருந்தது.‘‘மன்னர் முழங்கியது புரிகிறதா ராணி... ‘இந்த நாட்டைப் புகழ்ந்து கூறுபவர்கள் ஏளனத்துக்குரியவர்கள்; இவன் இளையவன் என்று என் மனம் வருந்துமாறு கூறி,
தங்களிடத்து மாறி மாறி ஒலிக்கும் மணிகளணிந்த பரந்த பெரிய பாதங்களையுடைய நெடிய நல்ல யானைகளும், தேர்களும், குதிரைகளும் படை வீரர்களும் இருப்பதை எண்ணி, எனது வலிமையைக் கண்டு அஞ்சாது, என்னைப்பற்றி இழிவாகப் பேசும் சினத்தொடு கூடிய வேந்தரைப் பொறுத்தற்கரிய போரில் அழியுமாறு தாக்கி அவர்களையும் அவர்களது முரசுகளையும் கைக்கொள்வேன். நான் அவ்வாறு செய்யேனாயின், என் குடை நிழலில் வாழும் மக்கள் சென்றடைய வேறு இடமில்லாமல்,
‘எம் வேந்தன் கொடியவன்’ என்று கண்ணீர் வடித்து அவர்களால் கொடுங்கோலன் என்று தூற்றப்படுவேனாக. மிகுந்த சிறப்பும் உயர்ந்த கேள்வியுமுடைய மாங்குடி மருதன் முதல்வனாக உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழும் புலவர்கள் என்னைப் பாடாது என் நாட்டை விட்டு நீங்குக. என்னால் காப்பாற்றப்படுபவர் துயரம் மிகுந்து என்னிடம் இரக்கும்பொழுது அவர்கட்கு ஈகை செய்ய இயலாத வறுமையை நான் அடைவேனாக...’ இதுதான் மன்னர் சொன்னதற்கு அர்த்தம்!’’
‘‘ஆனாலும் அந்த சினிமா டைரக்டர் ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்கார்...’’
‘‘எப்படிச் சொல்றே?’’‘‘போன வாரம் வெளியான அவரோட படத்தை அதுக்குள்ள ரீமேக் பண்ண ஆரம்பிச்சிட்டாரே!’’
‘‘தலைவர் அடிக்கடி ‘டெல்லியில எங்கள் கட்சிக்கு தனி இடம் உண்டு’ன்னு சொல்றாரே...’’
‘‘திஹார் சிறையைத்தான் அப்படிச் சொல்றாரு!’’
‘‘உங்க உடம்பு குணமாகணும்னா, நீங்க கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கணும்...’’
‘‘இதை என்கிட்ட ஏன் சொல்றீங்க டாக்டர்? என் மனைவி கிட்ட சொல்லுங்க!’’
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
(தொடரும்)
கே.என்.சிவராமன்