சகாயத்துக்கு ஒரு சப்போர்ட் இயக்கம்
‘கனிமவள முறைகேடு - சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம்’ - திடீரென இப்படியொரு புதிய அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள் தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள். நீதிமன்ற உத்தரவுப்படி கனிமவள முறைகேட்டை விசாரிக்க இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயத்திற்கு உதவுவதே இந்த அமைப்பின் நோக்கமாம்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுவரை நடைபெற்றுள்ள கனிமவள முறைகேடு குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறது இந்த அமைப்பு. பொதுமக்களும் தங்கள் புகார்களை அளித்தால் அதை சகாயம் ஐ.ஏ.எஸ்ஸுக்கு அனுப்பி வைப்பார்களாம்.
குற்றத்தை விசாரிப்பது நீதிமன்ற உத்தரவு... அதை ஓர் அதிகாரி செய்து வருகிறார்... இடையில் இப்படியொரு அமைப்பு ஏன் தேவைப்பட்டது? இந்த ‘ஆதரவு’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகிலனிடமே கேட்டோம்...
‘‘திடீர்னு ஆரம்பிக்கலை சார்... ஒவ்வொரு ஏரியாவிலும் கனிமவளக் கொள்ளை நடக்கும்போது, அதுக்கு எதிரான போராட்டங்கள் அங்கங்க நடந்துட்டுதான் இருந்துச்சு. இப்போ, எல்லாரும் ஒண்ணா சேர்ந்து ஆய்வுக் குழுவுக்கு உதவப் போறோம்... அவ்வளவு தான். எனக்கு சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், சென்னிமலை.
எங்க ஏரியா பக்கம் ஆத்து மணல் கொள்ளை அதிகம். நாமக்கல் பக்கம், சாயக்கழிவுகள்... மதுரையில கிரானைட் குவாரின்னு பிரச்னைகள் சொல்லி மாளாது. தூத்துக்குடி, திருநெல்வேலியில தாது மணல் பிரச்னையால, நிறைய பேர் கிட்னி, கேன்சர் நோய்கள்ல அவதிப்படுறாங்க. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் அங்க ஏராளமா பிறக்குறாங்க. நான் கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டக் குழுவுல இருந்தப்போ, இதுபத்தி ‘தாது மணல் கொள்ளை’ன்னு ஒரு நூலே எழுதியிருக்கேன். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்னு எதுக்கும் பலன் இல்லை.
சகாயம் ஐ.ஏ.எஸ் காஞ்சிபுரம் மாவட்டத்துல டி.ஆர்.ஓ.வாக வேலை பார்த்தப்போ, மணல் கொள்ளையை எதிர்த்து நின்னார். அங்கிருந்த பெப்ஸி ஆலையை இழுத்து மூடினார். அப்புறம் நாமக்கல் மாவட்டத்துல இருந்தப்ப, மாசுபடுத்துற எந்தத் தொழிற்சாலையையும் அனுமதிக்கல. பொல்யூஷன் ஏற்படுத்தின 200 சாயப்பட்டறைகளையும் பூட்டினார்.
அடுத்து, மதுரையில கிரானைட் குவாரியை ஆய்வு செஞ்சு 16,338 கோடி ரூபாய் முறைகேடு நடந்துருக்குன்னு தைரியமா சொன்னவரும் அவர்தான். இப்போ, கனிம வள முறைகேட்டை விசாரிக்க அவ ரையே சிறப்பு அதிகாரியா கோர்ட் நியமிச்சிருக்கிறது எங்களுக்குப் பெரிய நம்பிக்கை. உண்மைகளெல்லாம் வெளிவர இது ஒரு வாய்ப்புன்னுதான் அவருக்கு உதவக் கிளம்பிட்டோம்!’’
‘‘இதன் மூலம் என்ன செய்ய முடியும்?’’
‘‘முதல்கட்டமா, ‘சகாயம் ஆய்வுக் குழு, தமிழகம் முழுக்க ஆய்வு செய்ய தமிழக அரசு அனுமதி கொடுக்கணும்’னு வலியுறுத்தி ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தியிருக்கோம். ஏன்னா, தமிழக அரசு மதுரை மாவட்ட கனிமவள முறைகேட்டை மட்டும் விசாரிக்கத்தான் அனுமதி வழங்கியிருக்கு. ஆனா, உயர் நீதிமன்றம் 32 மாவட்டங்களிலும் ஆய்வு செய்யணும்னு உத்தரவுல சொல்லியிருக்கு.
இதை நடைமுறைப்படுத்தச் சொல்றோம். இதற்கடுத்து, தமிழக மக்கள் எல்லாருமே அவங்கவங்க பகுதியில நடந்த கனிமவள முறைகேட்டை சகாயம் குழுவுக்கு அனுப்பி வைக்கணும்னு பரப்புரை செய்யப் போறோம். யாருக்காவது அவங்க பெயர் வெளியே தெரிஞ்சிரும்னு பயமிருந்தா, எங்க ஆதரவு இயக்கத்தை அணுகலாம்.
நாங்க விசாரிச்சு, எங்க சார்பாவே புகாரை அனுப்புவோம். இதோட, சகாயம் ஆய்வுக்குழு செய்ய வேண்டிய விஷயங்களைத் தீர்மானமாவும் போட்டிருக்கோம். அதுல முக்கியமா, சகாயம் குழு எல்லா மாவட்டங்களுக்கும் நேர்ல வந்து பொது விசாரணை நடத்தணும். கனிமவள முறைகேட்டால சுற்றுச்சூழல், உடல்நலம், விவசாயம் போன்றவற்றில் ஏற்பட்ட பாதிப்புகள் பத்தியும், உயிரிழப்புகள், வருவாய் இழப்புகள் பத்தியும் முழுசா ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கணும்னு அந்த தீர்மானத்துல சொல்லியிருக்கோம்!’’
‘‘சரி, எவ்வளவு முறைகேடு நடந்திருக்கும்னு நினைக்கிறீங்க?’’
‘‘சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் வரை நடந்திருக்கலாம். இது தோராயமான கணக்கீடு தான். கேரளாவுல 45 ஆறுகள் இருக்கு. அங்க மணல் அள்ள தடை போட்டிருக்காங்க. ஆனா, தமிழ்நாட்டுல 33 ஆறுகள்தான் ஓடுது.
இங்கிருந்து வெளி மாநிலம், வெளிநாடுன்னு மணல் ஏராளமா போகுது. மாலத்தீவுக்கு மட்டும் வருஷத்துக்கு 11 லட்சம் டன் மணல் ஏற்றுமதி ஆகுது. உணவுப் பொருள் மாதிரி பாக்கெட் போட்டு அனுப்பிடுறாங்க. நாங்க, ஒட்டுமொத்தமா மணலே அள்ளக் கூடாதுன்னு சொல்லலை. அரசு அனுமதி கொடுத்த அளவு அள்ளுங்கனுதான் கேட்டுக்கிறோம். ஒரு மீட்டர் அளவுதான் மணல் அள்ளலாம்னு அரசு சொல்லுது.
ஆனா, 7 மீட்டர்னு தரையில களிமண் வரை போய் இங்க மணல் அள்ளுறாங்க. இதனால, பல நதிகள் அழிஞ்சிட்டு வருது. ஒரு செ.மீ உயரத்துக்கு மணல் உருவாக ஒரு நூற்றாண்டு காலம் ஆகும்ங்கிறது அறிவியல். இப்படி, சூழலைக் கெடுத்துக்கிட்டே இருந்தா ஒண்ணுக்கொண்ணு தொடர்பா இருக்கிற எல்லாமே அழிஞ்சிரும்.
குடிநீர் கிடைக்காது, விவசாயம் அழியும், மீன்வளம் செத்துரும். இந்த உண்மைகள் எல்லாத்தையும் வெளிக் கொண்டுவந்து மக்களுக்குப் புரிய வைக்கணும்!’’ - வருத்தமாக முடிக்கிறார் முகிலன். ஒரு மீட்டர் அளவுதான் மணல் அள்ளலாம்னு அரசு சொல்லுது. ஆனா, 7 மீட்டர்னு தரையில களிமண் வரை போய் இங்க மணல் அள்ளுறாங்க. இதனால, பல நதிகள் அழிஞ்சிட்டு வருது.
பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்