ரேங்க் கார்டு



‘‘என்னடா இது?’’ - கோபத்தில் கத்தினார், கதிரேசன்.தந்தையின் கையில் இருந்த ரேங்க் கார்டைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான் அண்ணாமலை. ‘இது எப்படி இவர் கையில் கிடைத்தது?’ ‘‘என்ன மார்க் வாங்கியிருக்கே? இங்கிலீஷில் இருபது, கணக்கில் பதினைஞ்சு, சயின்ஸ் பாடத்தில் பத்து.

அசிங்கமா இல்லை?’’‘‘அப்பா... வந்து...’’ -  அண்ணாமலைக்கு வியர்த்தது.‘‘எந்நேரமும் டி.வி பார்க்காதே... பரீட்சை வருது... படி படின்னு எத்தனை தடவை சொன்னேன்? எப்போதாவது நான் சொல்றதைக் கேட்டிருக்கியா?’’
‘‘இல்லப்பா... அது வந்து...’’

‘‘டேய்! பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக் கேன்... ரேங்க் கார்டை மறைச்சி வச்சுட்டு, என்னை ஏமாத்திட்டியே...’’‘‘நீங்க அடிப்பீங்கன்னு பயந்து...’’‘‘அடப்பாவி! என் மகன் நேர்மை உள்ளவனா வளரணும்னு ஆசைப்பட்டேனே... இப்படிப் பண்ணிட்டியே!’’அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த கதிரேசனின் மனைவி பொறுமை இழந்து சொன்னாள்...

‘‘ஏங்க... அவனுக்கே வயசு முப்பது ஆகுது! இப்ப போய், பழைய அலமாரியைக் கிளறி, அவன் நாலாவது படிச்சப்போ மறைச்சி வச்ச ரேங்க் கார்டை எடுத்து வச்சுக்கிட்டு, டென்ஷன் பண்றது நியாயமா? அவன் உங்களைப் பார்த்து இன்னும் பயப்படறான் பாருங்க... விடுங்க!’’                   

எஸ்.குமாரகிருஷ்ணன்